பிரபலங்கள்

நூறாண்டுகள் வாழ்வேன்..!

ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம்

திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டை இயக்குநராகப் பணி புரிந்தவர் ஜாக்குவார் தங்கம். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளுடன் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். 72 வயதிலும் என்றும் மாறா இளமையுடன் இருக்கும் தங்கம், தனது ஆரோக்கிய அனுபவக் குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக் கோட்டை தான் நான் பிறந்த கிராமம். என் தந்தையின் பெயர் பால்பாண்டியன். தாயாரின் பெயர் சின்னம்மாள். அப்பா சண்டைக் கலைகள் தெரிந்தவர் என்பதால் அவரிடம் நான் ஐந்து வயதிலேயே சிலம்பம் கற்றுக் கொண்டேன். ஆறு வயதில் திருச்சிக்குச் சென்று தட்சிணாமூர்த்தி ஆச்சாரியார் என்பவரிடம் சிலம்பம், குத்து வரிசை போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன்.

நான் திருச்சியில் வேலை பார்த்த 1977ம் ஆண்டு, அன்றைய முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நான் சிலம்பம் சுழற்றிப் பரிசு பெற்றேன். அப்போது அவர் என்னை அழைத்துப் பாராட்டினார். அதற்குப் பிறகு எம்ஜிஆருக்கு நெருக்கமான முசிறிபுத்தன், ராகவானந்தம் போன்றவர்கள் நட்பினால் நான் சென்னை வந்தேன்.

நான் முதலில் மீனா பஜார் என்ற இந்திப் படத்தில் தான் மாஸ்டர் ஆனேன்.  அந்தப்பட இயக்குநர் பி. சந்திரகுமார் தான் எனக்கு ‘ஜாகுவார்’ என்று பட்டப் பெயர் சூட்டி ஜாகுவார் தங்கமாக்கியவர். மிதுன் சக்கரவர்த்தி, ஜிதேந்திரா, தர்மேந்திரா என்று பெரிய இந்தி நட்சத்திரங்களுடன் சுமார் 100 படங்களில் பணியாற்றினேன்.

இந்தி, கன்னடம், தெலுங்கு எல்லாம் முடித்த பிறகுதான் தமிழுக்கு வந்தேன். விஜயகாந்த் நடித்த எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தில் நான் சண்டைக் கலைஞராக நடித்தேன். அதில் விஜய்யும் ஒரு சிறு வயது பாத்திரத்தில் நடித்திருப்பார். மாஸ்டராக தமிழில் 1989 ல் வந்த வைகாசி பொறந்தாச்சு தான் என் முதல் படம். அதன் பிறகு தொடர்ச்சியாகப் பணியாற்றினேன்.

பகவதி, ஷாஜகான், கிழக்கும் மேற்கும், பூமணி, என்றென்றும் காதல் என 5 படங்களுக்கு எனக்கு தங்கப் பதக்கத்துடன் மாநில அரசின் விருது கிடைத்தது.

சிறுவயதில் இருந்து விளையாட்டு, உடற்பயிற்சிகளில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாஸ்டர்களிடம் பயின்று இதுவரை நான்காயிரம் படங்களுக்கு மேல் சண்டைக் கலைஞராக நடித்துள்ளேன். சுமார் 2000 படங்களில் சண்டை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளேன். இத்தனைக்கும் பிறகும் 72 வயதிற்குப் பிறகு இன்றும் நான் உடற்பயிற்சி செய்கிறேன்.

எம்ஜிஆரின் நாடோடி மன்னன் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அவரது உடற்கட்டு மீது எனக்கு பிரமிப்பு வந்தது. அவரை நேரில் சந்தித்தபோது உடற்பயிற்சியோடு ஒழுக்கமும் தேவை என்று வலியுறுத்தினார். இத்தனை ஆண்டுகளாக நான் டீ, காபி சாப்பிட்டதில்லை. மது அருந்தியதில்லை, புகை பிடித்ததில்லை. சிக்கன் மட்டன் எதுவும் சாப்பிட்டதில்லை. ஒரு விரதத்தைப் போல இதையெல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்.

உடலைக் கட்டாக வைத்திருப்பதில் எம்ஜிஆரும் புரூஸ்லீயும் என்னைக் கவர்ந்தவர்கள். என்டர் தி டிராகன் போன்ற புரூஸ்லீ படங்கள் பார்த்து எய்ட் பேக்ஸ் ஆர்வம் வந்தது. நானும் பல ஆண்டுகளாக எய்ட் பேக்ஸ் வைத்திருந்தேன் இப்போது 72 வயதில் எனக்கு சிக்ஸ் பேக்ஸ் உள்ளது.

சினிமாவில் அனைத்து தீய பழக்கங்களுக்கும் இடம் உண்டு.  அவை எளிதில் தொற்றிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால் பலவீனமானவர்கள் எளிதில் விழுந்து வீழ்ச்சி அடைவார்கள். நான் நெருப்பின் நடுவே கற்பூரம் போல என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறேன். நான் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை என்பதை பல நண்பர்கள் கேலி செய்ததுண்டு. அது பற்றி நான் கவலைப்படுவதில்லை. உடல் நலம் கெட்டு நாம் மருத்துவமனையில் போய்க் கிடந்தால் கேலி கிண்டல் செய்பவர்கள் யாரும் வர மாட்டார்கள்.

பல முன்னணி நடிகர்களும் என்னைக் குடிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள். குடிக்காவிட்டால் பட வாய்ப்பு இல்லை என்று கூடச் சொல்வார்கள். அதனால் பரவாயில்லை வேண்டாம் என்று நான் வந்திருக்கிறேன். இப்படி மன உறுதியோடு இருந்ததால்தான் இன்று 72 வயதிலும் என்னால் அனைத்து உடற் பயிற்சிகளையும் செய்ய முடிகிறது. தண்டால் எடுக்க முடிகிறது, சிலம்பம் சுற்ற முடிகிறது. தலைக்கு மேல் தூக்கி காலைச் சுழற்ற முடிகிறது

நான் காலை 3:30க்கு எழுந்து விடுவேன் .எழுந்து  குளித்துவிட்டு பூஜை செய்வேன், தியானம் செய்வேன், யோகா, கராத்தே பயிற்சிகள் போன்றவற்றையும் செய்வேன். எட்டு மணிக்கு நானே தயாரித்து வைத்துள்ள ஒரு மூலிகை மருந்தைக் கருப்பட்டியில் கலந்து பால் சேர்க்காமல் குடிப்பேன். அது 72 மூலிகைகளை வைத்து உருவானது. பல சித்தர்களின் வாக்கின்படி அதை நானே தயாரித்துள்ளேன். அதனை தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் ஆகும். அது இரண்டு ஆண்டுகளுக்கு வரும்.

பெரும்பாலும் என் காலை உணவு பழைய சோறுதான். உடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வேன். சோறு என்றால் சிவப்பரிசிச் சோறுதான் சாப்பிடுவேன். வெள்ளை அரிசியை நான் சாப்பிடுவதே இல்லை. மதியம் கண்டிப்பாக ஒரு கீரை சேர்த்துக் கொள்வேன். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வேன். அவ்வப்போது உளுத்தங்களி சாப்பிடுவேன்.

இரவு சிவப்பரிசி சாதத்துடன் மீன் சேர்த்துக் கொள்வேன். அது இல்லாமல் கேழ்வரகு, கம்பு கொள்ளு போன்ற சிறுதானியங்களின் கலவையில் செய்த தோசையும்  எடுத்துக் கொள்வதுண்டு.

நான் 55 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன். பல்வேறு சித்தர்களின் குறிப்புகளைக் கொண்டும் வழிகாட்டுதல்களைக் கொண்டும் இதை நான் தொடர்ந்து வருகிறேன். அவர்களின் கூற்றுப்படி இதைச் சரியாகச் செய்தால் 200 ஆண்டுகள் வாழ முடியும். நான் இப்போது இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நான் நூறாண்டு வாழ்ந்து காட்டுவேன். அதற்குப் பிறகு தான் நம்புவார்கள்.

நடிகர் சிவகுமார் அவர்களை ஒருமுறை சந்தித்தபோது அவர் ஒரு யோகா நூலை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் அப்போது, ”என்னைத் தான் எல்லாரும் திரையுலக மார்க்கண்டேயன் என்பார்கள். ஆனால் நீ உடம்பையே கோயிலாக வைத்திருக்கிறாய்’’ என்று கூறி வாழ்த்தினார்.

எனக்கு இதுவரை சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்று எந்த நோய் பிரச்சினையும் வந்தது கிடையாது.

தினமும் நான் மிளகை உணவில் சேர்த்துக் கொள்வேன். மிளகு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட வெந்நீரைத் தான் நான் குடிநீராகவே குடிப்பேன். பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள் மிளகு எப்படிப்பட்ட மருந்து என்பது பலருக்கும் தெரியாது. அதுபோல பூண்டும் நல்லதொரு மருந்து. தினமும் இரவில் நாலைந்து பூண்டுப்பற்களைப் பச்சையாக உண்பேன். மிகவும் காரமாக இருக்கும். அரைப் பூண்டுப் பல்லில் இருந்து ஆரம்பித்து மெல்ல மெல்ல கூட்டி, இப்போது இப்படி 5 சாப்பிடுகிறேன்.

குளிர்ந்த நீர் நான் அருந்துவதே கிடையாது. ஐஸ் வாட்டர் எல்லாம் என் பக்கமே வரக்கூடாது. நாக்குக்கு ருசியாக இருக்கும் என்று சொல்லப்படுகிற எந்த பலகாரங்களையும் நான் தொடுவதே கிடையாது.

நான் சிறு சிறு பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் சென்றதே கிடையாது .நான் தமிழனின் மரபு சார்ந்த மருத்துவமான மூலிகை மருத்துவத்தைத் தான் பின்பற்றுகிறேன். கொரோனா காலத்தில் நோய்த் தொற்றுக்காக உலகமே அலறிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு கொரோனாவை எளிதாக எதிர்கொண்டது. காரணம் நம் உணவிலேயே மருந்துப் பொருள்களைச் சேர்த்து பயன்படுத்தும் நமது பாரம்பரியம்தான் .

ஒரு சித்தரின் வழிமுறையைப் பின்பற்றி கொரோனா சமயத்தில் நான் ஏராளமான பேருக்கு மிளகு, மஞ்சள், உப்பு வைத்து நோய்ப் பாதிப்பைச் சரி செய்தேன். எல்லா வித மூலிகை மருந்துகளையும் நம் உணவிலேயே சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வாழ்வதுதான் நமது பாரம்பரியம், பண்பாடு. ஆனால் இப்போது அது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

இவ்வளவு கட்டுப்பாடுகளும் பின்பற்றி நான் என் உடம்பைக் கட்டுக்கோப்பாக  வைத்துக் கொண்டிருந்தாலும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என் பிள்ளைகள் இரண்டு பேரும் தொடர்ந்து அதைப் பின்பற்றுவதில்லை. எனது மாணவர்களாக என்னிடம் சண்டைக்கலை பழகியவர்கள் பலபேர் ஓரளவுக்கு நான் சொல்வதைக் கேட்டுப் பின்பற்றுகிறார்கள்.

சினிமாவில் சண்டைக் கலைஞராக நடித்த போது பல்வேறு விபத்துக்களைச் சந்தித்துள்ளேன். வஜ்ஜிர முஷ்டி என்ற கன்னடப் படத்தில் நடித்த போது எனக்கு கை எலும்பு முறிந்தது. ஓராண்டு முடக்கப்பட்டேன். அர்ஜுன் கன்னடத்தில் அறிமுகமான பூஜாபலன் என்ற படத்தில் நான் நடித்த போது எனக்கு கால் உடைந்தது. விஷ்ணுவர்தன் படத்தில் நடித்த போது நீரில் மூழ்கும் கட்சியில் நான் சிக்கிக் கொண்டேன். ஒரு மலைப்பாம்புடன் நடித்த போது பாம்பு என் உடலை முறுக்கிக் காயப்படுத்தியது. அதேபோல் சிங்கத்துடனும் நான் சண்டைக் காட்சியில் நடித்துள்ளேன்.

இத்தனைக்கும் பிறகு நான் உடல் நலத்தோடும் மன அமைதியோடு இருப்பதற்குக் காரணம் யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை மட்டுமல்ல, நான் பின்பற்றும் ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் தான் முக்கியக் காரணம் என்பேன். இக்காலத்து இளைஞர்களிடம் அது மெல்ல மெல்ல குறைந்து வருவது கவலை தருகிறது. நான் எங்கு சென்றாலும் இதையெல்லாம் வலியுறுத்துகிறேன்.

இப்போது சுதந்திர தினம், குடியரசு தின விழா போன்ற கொண்டாட்டங்களில் எவிளையாட்டு வீரர்கள் எல்லாம் பெண்களாக வந்து கவனிக்க வைக்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளில் சிலம்பம், கரகம் என்று பெண்கள் தான் அதிகம் பங்கெடுக்கிறார்கள். ஆண்கள் மது போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள். நிறைய பெண்கள் குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார்கள். குடும்ப பாரங்களையும் சுமந்து கொண்டு வீரக் கலைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை நாம் மதிக்க வேண்டும்.

எங்கள் வீட்டில் நான் ஒன்பதாவது பிள்ளை. ஆனால் இப்போதெல்லாம் ஒரு முறை கருத்தரிப்பதே பெரிய சாதனையாகப்  பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் நலம் கெட்டு மக்கள் வாழ்க்கை மாறி இருக்கிறது. ஒரு குழந்தை பிறப்பதற்கே பல லட்சம் மருத்துவச் செலவு செய்கிறார்கள். கருத்தரிப்பது அவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது. மது, புகையை இளைஞர்கள் தொடாமல் இருந்தாலே பல்வேறு பிரச்சினைகள் உடலுக்கு வராது.

இந்த உடலும் ஆன்மாவும் இறைவன் கொடுத்தவை. நமக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் வாழும் வரை உடலை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் மனதை அமைதியாகவும் வைத்திருந்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இதுதான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் செய்தி.

சந்திப்பு : அருள்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *