அரசியல்

உ.பி.களை வேண்டுமென்றே சீண்டும் கவர்னர் ரவி

காரணம் என்னவென்று தெரியுமா?

தமிழ் பழமையான மொழி. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கும் கவர்னர் ரவி, அவருக்கு எதிராக பாடத்திட்ட விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளால் ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறாராம்.

அதாவது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ளும் விழாக்களில் வேண்டுமென்றே ஏதேனும் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிடுவார். அதை வைத்து தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து சில நாட்கள் கவர்னருக்கு கண்டனம் செய்து அரசியல் செய்வார்கள். தன்னுடைய பெயர் இந்தியா முழுக்க இப்படி அடிபட வேண்டும் என்பதற்காகவே ஆர்.என்.ரவி இப்படி வேண்டுமென்றே சீண்டுவது போல் பேசுகிறாராம்.  

அதனாலே ஒவ்வொரு விழாவிலும் ஏதேனும் வம்பு இழுக்கும் வகையில் பேசுகிறாராம். அப்படித்தான் சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, ‘’தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது’’ என்று கூறியிருந்தார்.

இதை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் எதுவுமில்லை. ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.

இதனை உறுதிபடுத்துவது போன்று கல்வியாளர் பாலகுருசாமி, ‘’தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முழுமையாக திருத்தப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் பிரச்சினை என்பது பாடத்திட்டத்தில் அல்ல. அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரத்தில் தான் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத, பொறுப்பற்ற தன்மையுடைய ஆசிரியர்களால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மோசமான தரத்துக்கு சென்றுள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்.பி, ‘’புல்புல் பறவையும் சாவர்க்கர் வாழ்க்கையும் இல்லை என்பது ஏமாற்றமாகத்தான் இருக்கும்’’ என்று கடுமையான விமர்சனம் முன்வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் தி.மு.க.வினரும் கவர்னருக்கு ரொம்பவே சிரீயஸாக பதிலடி கொடுக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலா சத்தம் போடுங்க என்று ரசிக்கிறாராம் கவர்னர். உடன்பிறப்புகளுக்கு இப்படியொரு அவமானமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *