மகிழ்ச்சி

இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் கா

லண்டன் அனுபவங்கள்

ஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் பித்தன் என்பதாலே நெஞ்சுக்கு நெருக்கமாக மாறிப்போன ஓவியன் வான் கா தரிசனம் லண்டனில் கிடைத்தது. வான்கா வாழ்ந்த 19ம் நூற்றாண்டின் இருட்டு நிறத்தில் செட் போட்டு 21ம் நூற்றாண்டு டெக்னாலஜியில் அவரது ஓவியங்களின் ஒவ்வொரு புள்ளியையும் பிரித்தெடுத்து வர்ண மழை பொழிய வைக்கிறார்கள்.

ஒவ்வொரு ஓவியம் உருவான கதையும் அட்டகாச டாக்குமெண்டரி. வான் கா ஓவியங்களின் அவுட்லைன் கொடுத்து, கலர் கொடுக்கச் செய்து நம்மையும் ஓவியராக்குகிறார்கள். ஒவ்வொரு ஓவியத்தின் முன்பும் சிலர் கால் மணி நேரம் நின்று ரசிக்கிறார்கள்.

வான் கா வரைந்து வைத்திருந்த அவனது அறை, அப்படியே நிஜமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாற்காலியில் அமர்வது, வான் கா முதுகைத் தொட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு தருகிறது. பிரமாண்ட 360 ஸ்டூடியோவில் வான் கா ஓவியங்கள் நம் உடல் மீதும் படர்ந்து ஓடுகிறது. ரயில் நம்மைச் சுற்றி நான்கு பக்கமும் ஓடுகிறது. பூக்கள், பறவைகள் லட்சக்கணக்கில் பறக்கின்றன. ஓவியங்களுக்கு ஏற்ப மாறும் இசைக் கோர்வை அத்தனை சுகம்.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு உருளைக் கிழங்கு மட்டுமே உணவாக வழங்கப்பட்ட அவலத்தைக் கண்டு, மனம் பதைத்து, அந்த காட்சியை ஆவணமாக்கியதே வான் கா முதல் ஓவியம்.

மனசுக்குப் பிடித்த மகிழ்வான காட்சிகளை கற்பனையில் வரைவதே சிறந்த ஓவியம் என்று கருதப்பட்ட காலத்தில் கண்ணுக்கு எதிரே தென்படும் சாதாரண காட்சிகளை எல்லாம் ஓவியமாக்கினான். ஓவியர்களால் விலக்கப்பட்ட கருப்பு, மஞ்சள் மற்றும் அடர் நிறங்களை அதிகம் பயன்படுத்தினான். 

தன்னுடைய 30 வயதில் ஓவியனாக மாறி 37 வயதுக்குள் கிட்டத்தட்ட 900 ஓவியங்கள் வரைந்தான். ஆனால், ஒரே ஒரு ஓவியம் கூட விற்கவில்லை.  வருமானமும் அங்கீகாரமும் கிடைக்காமல், துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலைக்கு முயன்றான். மரணம் கூட இரண்டு நாட்கள் போராட்டத்துக்குப் பிறகே கிடைத்தது.

இன்று அவனது ஒரே ஓர் ஓவியம் மட்டுமே 38 மில்லியனுக்கு ஏலம் போயிருக்கிறது. வாழும் காலத்தில் மதிக்கப்படாத ஒரு மனிதனை இப்போது இத்தனை சிறப்பாகக் கொண்டாடினாலும், வெளியே வரும்போது மனசு வலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *