பிரபலங்கள்

கண்ணதாசனின் இந்த ஒரு பாடல் போதும்

வாழ்க்கையை ஜெயிக்கலாம்.

பிறப்பும் இறப்பும் மனிதனின் கையில் இல்லை. இடையில் வாழும் வாழ்க்கை மட்டுமே அவனுடையது. அதுவும் ஒரு வட்டம்தான். இன்பம், துன்பம், ஏமாற்றம், நிம்மதி, ஏமாற்றம், துரோகம், வெற்றி, தோல்வி போன்ற எல்லாமே இருக்கத்தான் செய்யும். கைக்கு கிட்டியது வாய்க்கு கிட்டாமல் போகலாம்.

இன்னும் சொல்லப்போனால், இன்பமும் துன்பமும் மாறி மாறி தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால், இன்பத்தின் சுவடுகளை அந்த கணத்திலேயே மறந்துவிடும் மனிதன், துன்பத்தில் மட்டும் ஆழ்ந்து கிடக்கிறான். எனக்கு மட்டும் எப்போதும் துன்பம், என்னைத்தவிர யாருக்கும் இத்தனை பெரிய துன்பம் இல்லை என்று வருந்திக்கொண்டே இருக்கிறான்.

வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும், மகான்களும் துன்பத்தை வெல்லும் வழிகளை சொல்லியிருக்கிறார்கள். அந்த போதனைகளை தன்னுடைய ஒரு பாட்டில் பிழிந்துகொடுத்து, அழியாப்புகழ் பெற்றிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆம், துன்பத்தில் இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய ஒரு பாடலை படைத்திருக்கிறார்.

இதுதான், சுமைதாங்கி’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

இந்த பாடல் என்ன சொல்கிறது என்று பாருங்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி வரவே செய்யும். வறுமை, இயலாமை, பழி சொல், துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம் வந்து சேரும். அதுபோன்ற நேரத்தில் மயக்கமும், குழப்பமும் வரத்தான் செய்யும் என்கிறார்.

அதாவது, வாழ்க்கை என்றாலே ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இது ஏதோ ஒரு மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை மனிதனுக்கும் உள்ள இயல்புதான் என்கிறார். அதேநேரம், அப்படி வந்த துன்பத்தை எண்ணி கலங்கிக்கொண்டே இருப்பதால் எதுவும் நேர்வதில்லை, நேரவும் செய்யாது என்று அழுத்திச் சொல்கிறார்.

அப்படி என்றால் என்ன செய்யவேண்டும்?

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்கிறார். இன்பம் வரும்போது ஏற்றுக்கொள்வது போலவே, துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் இதயம் இருக்கவேண்டும் என்கிறார்.

அதெப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

கற்பனை செய். உன்னிடம் எது இல்லையோ அது இருப்பது போல் கற்பனை செய். ஏழை என்றால் மாளிகையை மனதுக்குள் நினை. இரவும் பகலும் உன்னால் மேம்பட்ட நிலையை அடையமுடியும் என்று நம்பிக்கை கொள்.

அப்படி கற்பனை செய்தால் மட்டும் போதுமா?

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், நாளை இறைவன் நல்ல வழியைக் காட்டுவான் என்று அவன் மீது பாரத்தைப் போட்டு அமைதி கொள் என்கிறார்.

இறைவன் மீது பாரத்தை போட்டால் சரியாகிவிடுமா..?

ஆகாது என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் முத்தாய்ப்பாக ஒன்று சொல்கிறார். உன்னைவிட கீழான நிலையில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களை பார்த்து உன் மனதை தேற்றிக்கொள் என்கிறார். நீ பண்டிகைக்கு புது ஆடை வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறாய் என்றால், பண்டிகை தினத்திலும் சாப்பிட முடியாத ஏழைகளை நினைத்துப் பார் என்கிறார். இந்த ஒப்பீடு உன்னை மேம்பட்டவனாக மாற்றிவிடும்.

உன்னைவிட கஷ்டப்படும் மனிதர்களே நன்றாக வாழும்போது, நீ மட்டும் குழப்பத்துடன் வாழலாமா.? அவர்களை பார்த்து நிம்மதி அடைந்துகொள் என்கிறார்.

எப்பேர்ப்பட்ட சிந்தனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *