எஸ்.கே.முருகன்

வெற்றியில் இல்லை வாழ்க்கை ரகசியம்

இது மட்டும் போதும்

ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாள் லட்சியம் அல்லது கனவு இருக்கத்தான் செய்கிறது.  குறிப்பாக, செல்வந்தராவது, தொழிலதிபராவது, அரசியல்வாதியாவது, சினிமா கலைஞராவது, பங்களா கட்டுவது, உலகை சுற்றுவது என்பது போன்ற ஏதேனும் ஒன்றை வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பார்கள். அப்படி ஆசைப்பட்டதை சாதிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பார்கள்.

ஆனால், ஆசைப்பட்டதை எல்லோராலும் அடைய முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் நூற்றுக்கு 99.99 சதவீதம் பேர் அந்த முயற்சியில் வெற்றியைத் தொடுவதில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு,  லட்சியம் நிறைவேறவில்லை என்றதும் பெரும் வருத்தத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகிறார்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்து, தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள்.

ஆசைப்பட்டதை சாதித்த ஒரு சிலரும், மீண்டும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணம் செய்கிறார்கள். அதனால், அவர்களும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுதான் வாழ்க்கையா..?

இல்லை. வாழ்க்கையின் நோக்கம் வாழ்தல் மட்டுமே. அதாவது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான காலத்தை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையை இனிமையாக கழிப்பதற்கு செல்வம், புகழ், உறவு, ஆரோக்கியம் என எதுவுமே அவசியம் இல்லை. எது இல்லையோ அதற்காக கவலைப்படாமல், எது இருக்கிறதோ அதை கொண்டாடுவதுதான் வாழ்க்கை.

அப்படியென்றால் கடினமான சாதனைகள் படைப்பது முட்டாள்தனமா? இல்லவே இல்லை. ஒரு வேலையை ரசித்து, மகிழ்ச்சியான மனநிலையில் செய்பவரால் மட்டுமே மாபெரும் சாதனைகளை படைக்க முடியும். அவருக்கு அதுதான் வாழ்க்கை.

வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்ததுண்டா..? எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அந்த கொண்டாட்டம்தான் வாழ்க்கை. அப்படித்தான் பிற உயிரினங்கள் வாழ்கின்றன.

இரவு – பகல், வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – வருத்தம் ஆகிய எதுவும் நிரந்தரமில்லை என்பதை புரிந்துகொள்ளும் மனிதனால் மட்டுமே, வாழ்க்கையின் நோக்கம் வாழ்வதுதான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *