பணம்

பணம் நல்லது. அதை விட நல்லது ‘இது’

வெற்றியுடன் மகிழ்ச்சி நிச்சயம்

செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து ஓடினார் என்ற கதை வெகுபிரபலம். உண்மையில் பணம் அத்தனை கொடூரமானதா..?

பணத்துக்காக என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

தான் பெற்ற பிள்ளையை பணத்துக்காக விற்கிறாள் ஒரு தாய். சிறிய தொகை கிடைக்கிறது என்பதற்காக, தனக்கு எந்த தொந்தரவும் தராத ஒரு மனிதனை கொலை செய்கிறான் கூலிப்படையை சேர்ந்தவன். பணம் வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை கொஞ்சநேரம் அடுத்தவனுக்கு தானமாகத் தருகிறாள் பெண். பணத்துக்காக பொது சொத்தை கொள்ளை அடிப்பதற்கு அனுமதி கொடுக்கிறான் அதிகாரி. பணத்துக்காக தாய் நாட்டை காட்டிக் கொடுக்கிறான் ராணுவ அதிகாரி.

ஆனால், இன்று இந்த உலகத்தை ஒரே மனித இனமாக வடிவமைத்ததில் பணத்திற்குத்தான் முக்கிய பங்கு உண்டு. பணம் என்பது நம்பிக்கை தருகிறது. பணம் கிடைக்கும் என்ற உறுதியில், நம்பிக்கையில் ஒருவன் உழைக்கிறான். இந்த பணம் நாளை உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் சேமித்து வைக்கிறான்.

எல்லாவற்றையும்விட பணத்துக்கு ஒரு மாபெரும் சக்தியுள்ளது. அது எதுவாகவும் உருமாறும் தன்மை கொண்டது. வாஷிங் மெஷின் வாங்க வேண்டுமா? வீடு வாங்க வேண்டுமா? வாகனம் வாங்க வேண்டுமா? உன்னிடம் பணம் இருந்தால் போதும், அது நீ என்ன ஆசைப்படுகிறாயோ அவை எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். உன்னை சுகவாசியாக, வள்ளலாக, பிச்சைக்காரனாக மற்றவர்களிடம் காட்டுவதும் பணம்தான்.

அதனால், மனிதகுலத்தின் அத்தனை தீமைகளுக்கு மட்டுமல்ல, நன்மைகளுக்கும் காரணம் பணம் மட்டும்தான். பணம் என்பது நெருப்பைப் போன்றது. அதனை நீ எப்படி பயன்படுத்துகிறாய் என்பதில்தான் வெற்றி உள்ளது.

பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது அதிக நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள். அதனால்தான், பணத்தை ரகசியமாக பூட்டி வைத்திருக்கிறார்கள்.

திடீரென பணம் செல்லுபடியாகாது என்று அரசு அறிவித்துவிட்டால், அத்தனை பணமும், வெறும் காகிதமாகிவிடும். ஆனாலும், மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை விட பணத்தின் மீதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை. அது தவறும் அல்ல. ஏனென்றால், வெளியூர் செல்லும்போது அங்கே நீ யாருக்கும் தெரியாத ஒரு மனிதனாக இருந்தாலும், பணம் உன்னுடைய மதிப்பைக் கூட்டிக் காட்டிவிடும். நீ விரும்பியதை சாதிக்கவும் முடியும். திடீரென வேலை இழந்துவிட்ட ஒரு மனிதனுக்கு எந்த உறவும் தொடர்ந்து தண்டச் சோறு போடவும் மாட்டார்கள்.

கடைக்குச் சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும், மருத்துவமனைக்குச் சென்றாலும் பணக்காரனுக்குத்தான் மரியாதை. அதனால்தான் பணம் சம்பாதிப்பதிலும், அதனை சேமிப்பதற்கும் தன் வாழ் முழுவதையும் செலவழிக்கிறான்.

பணத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது. அதேநேரம், பணத்தைக் கொண்டு அன்பையும், அரவணைப்பையும் வாங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் பணத்தைத் தாண்டியும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்புதான், உன் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் பணத்தின் மீது உனக்கிருக்கும் நம்பிக்கையை, உறவுக்கு மாற்றத் தெரிய வேண்டும். ஆம், வெறுமனே பணத்தை மட்டும் வைத்து வாழ முடியாது. அதேநேரம், வெறும் உறவுகளைக் கொண்டும் வயதான காலத்தைக் கழிக்க முடியாது.

அதனால், ஒருபோதும் பணத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிடாதே..!

பணம் சேமிக்கவே இல்லையா..? பரவாயில்லை, வாழ்க்கை மீது நம்பிக்கை வை. ஏதாவது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *