காமம்

’அந்த’ இடத்திற்குப் பிரத்யேக வாசனை..?

வதந்தியை நம்பாதீங்க பெண்களே

பெண்களின் அந்தரங்கப் பாகத்தில் தோன்றும் வாசனையைப் பொறுத்தே அந்தப் பெண்ணின் குணம், பண்புகள் இருக்கிறது என்று விசித்திரமான அங்கசாஸ்திர ஜோதிடம் பெண்களிடம் சுழன்று அடிக்கிறது. அந்த இடத்தில் மல்லிகைப் பூ போன்ற வாசனை வந்தால் மென்மையானவள், ரோஜா வாசனை வந்தால் அதிக இன்பம் தருவாள், மாமிச வாசனை வந்தால் அதிக காம விருப்பம், முட்டை நாற்றம் எடுத்தால் ஏமாற்றுக்காரி என்றெல்லாம் விதவிதமாக வதந்திகள் பெண்கள் உலகத்தைச் சுற்றி வருகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே பெண்களைச் சுற்றி வருகிறது.

இதனை உண்மையென்று நம்பும் பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை அதிக சோப்பு, ஷாம்பு போட்டு கழுவுதல், சென்ட் போன்ற வாசனைத் திரவியங்கள் பூசுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதற்கென சில அழகு நிலையங்களில் மசாஜ் மற்றும் வெஜினல் க்ரீம் பூசப்படுகிறது. இவை எல்லாமே ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் விஷயமாக இருக்கின்றன.

குறிப்பாக மணப்பெண்ணுக்கு மேக்கப் போடும் நேரத்தில் இந்த விஷயத்துக்கும் சேர்த்தே பில் போட்டுவிடுகிறார்கள். அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ளும் வரையில் தினமும் இதற்கென க்ரீம் பூசிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கணவர் உங்களைவிட்டு வேறு பெண்ணை நாடத் தொடங்கிவிடுவார் என்று கண்ட கண்ட க்ரீம்களை தலையில் கட்டி விடுகிறார்கள். பணம் செலவழிக்க முடியாத பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்கிறார்கள்.

இது குறித்துப் பேசும் மகப்பேறு மருத்துவர் ராஜேஸ்வரி சண்முகம், ‘’அந்தரங்கப் பகுதியில் பெர்ஃப்யூம் அல்லது வாசனைத் திரவியங்களைப் பூசியதால் தொற்று நோய்க்கு ஆளாகி வரும் பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உண்மையில், பெண்ணுறுப்பின் வாசல் மற்றும் வழிகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நிரம்பியிருக்கும்.

பெண்கள் அந்த இடங்களை சுகாதாரமாகப் பராமரிப்பது, சுத்தமான உள்ளாடைகள் உடுத்துவது போன்றவை காரணமாக இயல்பான உடலின் வாசனை மட்டுமே இருக்கும். துர்நாற்றம் வீசுகிறது என்றால் சுகாதாரமில்லை என்று அர்த்தம். செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அந்த இடத்தின் இயல்பான தன்மை பாதிக்கப்பட்டுவிடும்.

பொதுவாக உறவுக்கு முன்பு குளித்துவிட்டு நன்றாக துடைத்துக்கொண்டாலே போதும். இயல்பான உடல் மணமே உண்மையானது, சரியானது. போலியான நறுமணத்தை ஆண்களும் விரும்புவது இல்லை’’ என்கிறார்.

பெண்களே சுதாரிச்சுக்கோங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *