ஞானகுரு

50 வயதில் ஓய்வு, 80 வயதில் முதுமை

புதிய வாழ்க்கை சூத்திரம்

‘’என்னால் யாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியவில்லை. அதனால் என்னுடன் பேசவும் பழகவும் யாரும் விரும்புவதில்லை’’ என்று ஞானகுருவிடம் வருந்தினார் மகேந்திரன்.

‘’உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா?’’ என்று கேட்டார் ஞானகுரு.

‘’நான் எத்தனை இடைஞ்சல் செய்தாலும் அதை பொறுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த குடும்பம் கிடைத்திருக்கிறது, அதுவே எனக்குக் கிடைத்த பெரிய பரிசு’’ என்றார்.

புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’உங்களுக்குக் கிடைத்திருக்கும் குடும்பம், நண்பர்கள், உங்களுக்குக் கிடைத்திருக்கும் வேலை, உங்களிடம் இருக்கும் சேமிப்பு, உங்களுடைய கார் போன்ற எதுவும் உண்மையான பரிசு இல்லை…’’

‘’அப்படியென்றால் வேறு எது?’’

‘’உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த பரிசு நீங்கள் மட்டும் தான். உங்கள் உடலும் மனமும் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரம். இதனை நீங்கள் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும், கொண்டாடவும் வேண்டும்.

உங்கள் உடம்பிலும் மனதிலும் மகிழ்ச்சி இருந்தால் இருந்தால் மட்டுமே, இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியும். நீங்கள் உங்கள் பரிசை துன்பத்திலும், சோகத்திலும் வைத்திருந்தால் மற்றவர்களுக்கும் அதையே பரிசாகக் கொடுப்பீர்கள். எனவே முதலில் உங்கள் மீது அளவற்ற அன்பு செலுத்துங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக மாறுங்கள். அப்போது தான் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்’’ என்றார் ஞானகுரு.

‘’நான் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். இப்போது நான் ஒரு சாதாரண பணியில் இருக்கிறேன். எனக்கு 40 வயதாகிறது. இந்த சம்பாத்தியத்தில் என் குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் என் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சியின்மைக்கு பணமே இடையூறாக இருக்கிறது. எனவே, அதிக பணம் எப்படி சம்பாதிப்பது என்பதைச் சொல்லுங்கள்…’’

‘’சரில் நீங்கள் எப்போது வேலையில் இருந்து ஓய்வு பெறுவீர்கள்..?’’

‘’எங்கள் நிறுவனத்திலும் அரசு நிறுவனம் போன்று 60 வயதில் வெளியேற்றிவிடுவார்கள்’’

‘’சரி, அப்படியென்றால் 50 வயதில் ஓய்வு பெற்றுவிடுங்கள்…’’ என்று ஞானகுரு சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார் மகேந்திரன்.

‘’இன்னமும் 20 வருடங்களுக்கு வேலை இருக்கிறது என்பது மட்டுமே எனக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை, அதையும் உடைக்கப் பார்க்கிறீர்கள்..?’’

‘’60 வயதில் ஓய்வு பெறவும் 80 வயதில் மரணம் அடையவும் இப்போதே உங்கள் உடலையும் மனதையும் தயார் படுத்தி வைத்திருக்கிறீர்கள். இது ஒரு மோசமான விளையாட்டு. இன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறை நிறையவே மாறிவிட்டது. மருத்துவமும் கை கொடுக்கிறது. எனவே, 80 வயதில் தான் முதுமை வரும். அதன் பிறகும் 20 வருடங்கள் அதாவது 100 வயது வரையிலும் பிறர் உதவியின்றி வாழ்ந்து மறைவதே வாழ்க்கை லட்சியமாக இருக்க வேண்டும்…’’

‘’நீங்கள் பேசுவது எனக்கு இன்னமும் அச்சம் தருகிறது..’’

‘’எப்படியும் 60 வயதில் உன் நிறுவனம் உன்னை வெளியே அனுப்பிவிடும். அதன் பிறகு கிட்டத்தட்ட 40 வருடங்கள் நீ என்ன செய்வாய்?’’

‘’நான் என்ன செய்ய வேண்டும்..?’’

‘’இப்போது உனக்கு 40 வயது. இன்னமும் 10 ஆண்டுகளில் அடுத்த 30 ஆண்டுகளுக்குத் திட்டமிடு. அதாவது 50 வயது முதல் 80 வயது வரையிலும் மனிதர்களால் முழு ஆக்டிவாக இருக்க முடியும். 80 வயதுக்குப் பிறகே உடலும் உள்ளமும் தளர்வடையும். இப்போதும் 80 வயதிலும் கிராமத்து மனிதர்கள் இயல்பாக உழைத்துக்கொண்டு இருப்பதைக் காண முடியும். எனவே, நீயும் 80 வயது வரையிலும் அனுபவித்து வாழ்வதற்கான திட்டத்தை இப்போதே தெளிவாக வகுத்துவிடு…’’

‘’அப்படியென்றால் நான் 80 வயது வரையிலும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றீர்களா..?’’

‘’இல்லை. 50 முதல் 80 வயது வரையிலும் உனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழச் சொல்கிறேன். 50 வயது வரை உன் குடும்பத்துக்கான வாழு. அதன் பிறகு உனக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்யத் தொடங்கு. 50 வயது வரை உனக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். நிறைய தொடர்புகள் இருக்கும். நிறைய வெற்றி தோல்வியைப் பார்த்திருப்பாய். ஆகவே, இவற்றை எல்லாம் மூலதனமாக்கி உனக்கென ஒரு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கு….’’

‘’அப்படியென்றால் என் குடும்பத்தை என்ன செய்வது?’’

‘’50 வயதுக்குப் பிறகு நீ குடும்பத்தில் இருப்பதும், இல்லாமல் போவதும் ஒன்று தான். அதன் பிறகு யாரும் உன்னை எதிர்பார்க்கப்போவதில்லை. அப்படி எதிர்பார்க்கிறார்கள் என்றாலும் அவர்களைப் பற்றி கவலைப்பட அவசியம் இல்லை. குடும்பத்தோடு இருப்பதே உனக்கு மகிழ்ச்சி தரும் என்றால், வீட்டில் இருந்தபடி செய்யும் வகையில் புதிய வேலையைத் தொடங்கு. எப்படி என்றாலும் உன் எதிர்காலத்துக்கு என்று ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதே நல்லது. இதன் அர்த்தம் புதிய வேலை என்றால் இரவும் பகலும் உழைக்க வேண்டும் என்பதில்லை, தினமும் வேலை இருக்கிறது என்ற அளவுக்கு இருந்தால் போதும்…’’

‘’60 வயதுக்குப் பிறகு இப்படிப்பட்ட புதிய வாழ்க்கையைத் தொடங்கலாமே..?’’

’’மனிதரின் மூளை 50 முதல் 70 வயது வரையிலும் மிகச்சிறந்த ஆற்றலுடன் திகழ்வதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, உங்கள் அனுபவத்தின்படி ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கு 50 வயது என்பதே சரியாக இருக்கும். ஒரு வேளை புதிய தொழில் சரியாக சரியாக அமையவில்லை என்றால் வேறு ஒரு முயற்சி செய்ய முடியும். 60 வயதுக்குப் பிறகு புதிய ஒன்று தொடங்குவதற்கு தயக்கம் வந்துவிடும். மற்றவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள்…’’

‘’என்ன ஒன்று தொடங்குவது என்றாலும் பணம் தேவைப்படுமே…’’

‘’சரியான திட்டமிடலே முக்கியம். நிறைய தொழில்களுக்கு மூலதனம் ஒரு பிரச்னையாகவே இருப்பதில்லை. அது உங்களால் எளிதில் புரட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கும். அதனால் பணியில் இருக்கும் நேரத்திலே வேறு ஒன்றுக்கு திட்டமிடுங்கள். முதலில் பகுதி நேரமாகத் தொடங்குங்கள். அது செழித்து வளர்வது உறுதியானதும் வேலையை விட்டு உங்கள் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்குங்கள்.

ஓய்வூதிப்பணம், பென்ஷன் போன்றவைகளை இதற்குப் பயன்படுத்த வேணாம். அது உங்களுடைய அவசர மருத்துவச் செலவுக்காக இருக்கட்டும். உங்களுடைய புதிய தொழில் அல்லது திட்டத்திலிருந்து பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மனம் மகிழ்ச்சி தருவதாக அது இருப்பதே முக்கியம். பணம் குறைவாகக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக நஷ்டத்துக்கு எதையும் செய்யவே வேண்டாம்.

உங்கள் கைவசம் ஒரு தொழில் இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும். 60 வயதுக்குப் பிறகும் உங்களுக்கு வாழ்க்கை மீது பெரும் பிடிப்பு வரவழைத்துவிடும். மிகவும் முக்கியான விஷயம் என்னவென்றால், ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று பரிதாபமாக விழிக்க வேண்டிய அவசியம் இருக்காது’’ என்று சொல்லி முடித்தார் ஞானகுரு.

சிந்திக்கத் தொடங்கினார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *