மருத்துவர்கள்

பெண்களே, மது குடிக்காமல் எஸ்கேப் ப்ளீஸ்…

வழி காட்டுகிறார் மருத்துவர் ஆனந்த்குமார்


மது குடிப்பது இப்போது கலாச்சாரத்தில் ஒரு பங்காகவே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மாறிவிட்டது. ஏதாவது பார்ட்டி நேரத்தில் மட்டும் கொஞ்சம் குடிப்பான் என்று பெற்றோர்கள் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. மதுவின் உண்மையான அச்சுறுத்தல் நிறைய மக்களுக்குத் தெரியவே இல்லை. மது நோயாளிகளை மீட்பது குறித்து சூர்யா மருத்துவமனையின் அவசர சிகிச்சை  மருத்துவர் ஆனந்தகுமாரிடம் பேசினோம்.

குடி நோயாளிகளுக்கு, மது கிடைக்கவில்லை என்றால், எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்?
குடிக்கவில்லை என்றால்  கைகால் நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். மேலும், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கக்கூடும்; ஹார்ட் அட்டாக் நேரிடலாம். சிலருக்கு வலிப்பு நோய்கூட வரலாம்.

இதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி?
குடி நோயாளிகளை மீட்பதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் உள்ளன. தூக்கத்துக்கு மாத்திரை கொடுக்கலாம். அதுபோல் படபடப்புக்கு மருந்து கொடுக்கலாம். குறிப்பாக, ஆல்கஹால் போன்றே வரக்கூடிய மருந்துகள் நிறைய உள்ளன. அதை, தினந்தோறும் எடுத்துக்கொண்டாலும், மது அவஸ்தையிலிருந்து தப்பிக்கலாம். தற்போதுகூட, குடிக்காத விரக்தியில், நாலைந்து பேருக்கு வலிப்பு வந்து சிகிச்சைக்காக இங்கு (சூர்யா மருத்துவமனை) வந்தனர். அவர்களின், உடலுக்கு சத்து தரக்கூடிய மருந்துகளை குளுக்கோஸ் மூலம் ஏற்றிக் குணப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

 பல புதிய மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதாலும், இதற்குச் சிறந்த முறையில் சிகிச்சை இருப்பதாலும் மதுப்பிரியர்களும், அவர்களது குடும்பத்தினரும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. நிலைமை சீரடைந்த பிறகும் குடியை அவர்கள் தொடாமல் இருக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், குடிகாரர்கள் அனைவருமே மீண்டும் புதியவர்களாக பிறப்பதற்கு இது நல்ல தருணம்.  

பெண்களும் நிறைய பேர் குடிக்கத் தொடங்கியிருக்கிறார்களே..?

குடிப்பதால் சுதந்திரம் கிடைக்கிறது என்று பெண்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் குளிருக்காக அளவோடு குடிக்கிறார்கள். குடும்பத்தோடு குடிக்கிறார்கள். அதைப் பார்த்து நம் நாட்டுப் பெண்களும், ‘இதிலென்ன தப்பு?’ என்று குடிக்கிறார்கள். ஆண்களை விட பெண்களை மது அதிகம் பாதிக்கிறது. இளமையில் ஜாலிக்காக மது குடிக்கும் பெண்களுக்கு திருமணம் நடப்பது சிரமமாக இருக்கிறது, ஏனென்றால் அவரது நடத்தை கேள்விக்குரியதாக மாறுகிறது. அதோடு, குழந்தைப் பிறப்பில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நம் பெண்கள் இந்த எண்ணத்தில் இருந்து தப்பிக்க வேண்டும். ஒயின் குடித்தால் எதுவும் செய்யாது, பீர் நல்லது என்பது போன்ற எண்ணங்கள் எல்லாமே தவறு.


குடித்தால் சிலர் நன்றாக இருக்கிறார்கள், சிலர் குடித்தால் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இது ஏன்?


 குடிக்காமல் இருக்கும் நபரின் குடும்பத்தில்தான் சந்தோஷம் தலைதூக்கும். அதேநேரத்தில் இதற்கு அடிமையான ஒருவர், இதை தற்போது சாப்பிட முடியாதபோது பல நெருக்கடிக்கு ஆளாவார். அதைப் பார்த்ததும் சில பெண்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது.


இந்த நேரத்தில், குடிமகன்களுக்கு ஒரு மருத்துவராய் நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

குடிக்கும் எண்ணம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை திசை திருப்பும் வகையில் விளையாட்டு, பேச்சுவார்த்தை, வேலை போன்று ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுத்த வேண்டும். இந்த நேரத்தில் குடியினால் விளையும் தீமைகளை எடுத்துச்சொன்னால், அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

மேலும், குடிக்காமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் விளையும், உடல் எத்தனை ஆரோக்கியமாக இருக்கும், பொருளாதார ரீதியில் எவ்வளவு நன்மை கிடைக்கும், சமுதாயத்தில் எப்படிப்பட்ட மதிப்பு கிடைக்கும் என்றெல்லாம் எடுத்துச்சொல்லி புரியவைக்க முடியும்.

எந்தக் காரணம் கொண்டும், இந்த நேரத்தில் நண்பர்களுடன் குறிப்பாக ஒன்றாகச் சேர்ந்து குடிக்கும் நண்பர்களுடன் செல்வதற்கு அனுமதிக்ககூடாது. ஏனென்றால், கள்ளச்சாராயம் போன்ற எதையாவது குடித்து உயிருக்கு ஆபத்து விளையக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *