தமிழ் லீடர்

இந்தியாவின் தங்க மகளுக்கு கண்ணீர் மழை வரவேற்பு.

இதுவே உண்மையான தங்கப் பரிசு.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியவர்களுக்கு கிடைத்த வரவேற்பை விட, எந்தப் பரிசும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பிய வினேஷ் போகத்திற்கு மிகப்பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் பெறாத தங்க மகள்வினேஷ் போகத்தை தங்கள் சொந்த சகோதரியாக, மகளாக கொண்டாடி மலர் தூவி வரவேற்றுள்ளார்கள். அறிந்தவர் தெரிந்தவர்கள் கண்ணீர் மழை சிந்தும் உணர்வுபூர்வக் காட்சிகள் அரங்கேறியுள்ளன.

தங்கம், வெள்ளிப் பதக்கத்தை விட இந்த மக்கள் அன்பே பெரும் பதக்கம் என்பதை இந்திய மக்கள் அத்தனை பேரும் பாராட்டி மகிழ்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி தினத்தில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். வெள்ளிப்பதக்கத்தைப் பெறுவதற்கு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த முயற்சியும் தோல்வியைத் தழுவியதால் வெறும் கையுடன் நாடு திரும்பினார் வினேஷ் போகத்.

இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள வினேஷ் போகத், “எனக்கு பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், அதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை. ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு மற்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை நானும் எனது அணியினரும் எங்களது முயற்சிகளைக் கைவிடவில்லை. நாங்கள் சாதிக்க நினைத்ததை எங்களால் சாதிக்க முடியவில்லை. அது எப்போதும் ஒரு குறையாகவே இருக்கும். வேறு வகையான சூழ்நிலைகளில், நான் 2032 வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குள் போராட்ட குணமும் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும்.

எதிர்காலம் எனக்காக என்ன வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், நான் எதை நம்புகிறேனோ அதற்காகவும் சரியான காரியத்துக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

தங்க மங்கைக்கு வரவேற்பு கொடுப்போம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *