மனம்

நிறைய மதிப்பெண் நல்ல ஞாபகசக்திக்கு ஆசையா..?

மாணவர்களுக்கு ஆறு கட்டளைகள்

இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். உண்மையில் நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நினைவாற்றல் நிரம்பியவர் என்று எவரும் இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவற்றை சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை

என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது- என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

நினைவாற்றல் என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம்

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம்

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.  உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா? தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும். உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப்புணர்வும் பெறலாம்.

5. புரிந்துகொள்ளல்

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

இவற்றில் இருந்து நினைவாற்றல் என்பதும் ஒரு கலையே, அதனை கசடற அனைவரும் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மட்டுமாவது நினைவில் வையுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *