தமிழ் லீடர்

விஜய்யைக் கண்டு அஞ்சுகிறாரா சீமான்..?

மேடையில் அபத்தமான பேச்சு

சீமானின் தைரியமான பேச்சுக்கு இளம் தலைமுறையினர் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர் எத்தனை பொய் சொன்னாலும் சந்தோஷமாகக் கேட்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாத தலைவராக சீமானை பார்க்கிறார்கள். இந்த சூழலில் அவர் சென்னை கூட்டத்தில் பேசிய பேச்சு கை தட்டலுக்காகப் பேசும் மூன்றாம் தரப் பேச்சாளருக்குடையது போன்று அமைந்திருப்பது பரிதாபம்.

அடுத்த தேர்தலில் களம் காண இருக்கும் நடிகர் விஜய்யிடம் இருந்து தன்னுடைய தம்பிகளை தக்க வைக்கும் முயற்சியாக, எல்லை மீறிப் பேசுவதாகத் தெரிகிறது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் புகழடைந்துவரும் காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசியதாக ஆடியோ வெளியானது. அண்ணன் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார் என்று தான் தம்பிகள் நினைத்தார்கள். ஆனால், நேற்றைய கூட்டத்தில், என் கட்சிக்குள்ள மசுரு, பிசுறுன்னு பேசுவேன், அப்புறம் உசுருன்னு சொல்லிக்குவேன். அதைப் பத்தி உனக்கு என்னடா பிரச்னை என்று நேரடியாக காவல் துறை எஸ்.பி. வருண்குமார் மீது  தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

ஆடியோவை எஸ்.பி. ரிலீஸ் செய்தது குற்றம் என்றால் அதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பொறுப்பில் இருக்கும் அதிகாரியை இப்படி தரக்குறைவாகப் பேசக்கூடாது. ஏனென்றால் இதே பாணியில் தான் அவரது தம்பிகள் அடுத்தடுத்து கூட்டங்களில் பேசுவார்கள், போலீஸ் நடவடிக்கையில் சிக்கி சின்னாபின்னாமாகிப் போவார்கள்.

அதேநேரம், தன்னுடைய கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகியை இப்படி சீமான் பேசியிருக்க மாட்டார் என்று நம்பிய தம்பிகளுக்கு அவரது பேச்சு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும். ஏனென்றால், கட்சி நிர்வாகி தவறு செய்தால் வெளியே அனுப்பலாமே தவிர, இப்படி அவமரியாதை செய்வது சரியா… அதுவும் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு..?

அதேபோல், சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் சாட்டை துரைமுருகன் விஷயத்தில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. அதே பாடலில் வரும் சண்டாளன் என்ற வார்த்தை ஒரு சாதியைக் குறிக்கும் சொல் என்று தெரிந்தும் மீண்டும் மேடையில் அந்த பாடலை அழுத்தம் திருத்தமாகப் பாடியிருக்கிறார்.

இது, முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று தமிழக அரசுக்கு நேரடியாக சவால் விடுவது போல் இருக்கிறது. இதற்குக் காரணம் விஜய் என்கிறார்கள்.

அதாவது அடுத்த தேர்தலில் களம் இறங்கும் நடிகர் விஜய்க்கும் இந்த இளைய கூட்டமே டார்கெட்டாக இருக்கும். அவர்கள் திசை மாறிப் போய்விடக் கூடாது என்பதற்காக தன்னை மிகப்பெரும் அரசியல் டான் போன்று காட்டியிருக்கிறார் சீமான். ஆனால், இவற்றை எல்லாம் தமிழக மக்கள் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடும் வித்தைக்காரனாகப் பார்ப்பார்களே தவிர, நிச்சயம் தலைவனாக அல்ல.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராட்டும் படியாக ஒருசில பேச்சுகள் இருக்கத்தான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழல் குறித்து தி.மு.க. மட்டுமின்றி அ.தி.முக. பா.ஜ.க. என யாருமே பேசவில்லை, இதனை கண்டித்திருக்கிறார்.

இப்படி நல்ல தலைவனாக மட்டும் இருங்கள் சீமான், தண்ணியெடுத்துவிட்டு வாந்தியெடுக்கும் மூன்றாம் தர பேச்சாளராக இருக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *