ஞானகுரு

நல்லவரை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொள்வாரா?!

ஞானகுரு தரிசனம் – 45

தந்தைக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்று ஓர் அஸ்திரத்தை வீசியதும் அதிர்ச்சியடைந்து நின்றான் வைத்தியநாதன். முகத்தில் பெரும் இருள் பீடித்திருந்தது. நிதானமாக அவன் அருகே சென்று அணைத்துக் கொண்டேன். பேசுவதற்கு வாய் வராமல் தடுமாறியவன், கண்ணீர் வழியப் பேசினான்.

’’சாமி பொய் சொல்லாதீங்க… எங்கப்பா ரொம்பவும் நல்லவர். தட்டுல விழுற காசுக்குகூட ஆசைப்படாம, அதை அப்படியே உண்டியல்ல சேர்த்துடுவார். சிவன் சொத்தை சாப்பிடக் கூடாதுன்னு, வீட்டுச் செலவுக்காக பட்சணம் செஞ்சு விற்கிறார். வீடு, நிலம்னு புரோக்கர் வேலை பார்க்கிறார். அத்தனை நல்லவரா இருக்கிறவரைப் போய்…’’ என்று அழத் தொடங்கினான். அவன் அழுது முடியட்டும் என்று கொஞ்சநேரம்  காத்திருந்தேன்.  ஒருவழியாக அழுகையை முடித்து, என்னிடம் ஏதோ கேட்க நினைத்தவனை கண்களால் தடுத்து நிறுத்தி, ’’புதைமணலில் ஒரு நல்லவனும் கெட்டவனும் விழுந்து விட்டார்கள் என வைத்துக் கொள், ஒருவரை மட்டுமே காப்பாற்ற உனக்கு அவகாசம் இருக்கிறது, நீ யாரைக் காப்பாற்றுவாய்?’’

எதற்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி என்பது போல் அழுகையை நிறுத்திப் பார்த்தான்.

’’கேள்விக்கு முதலில் பதில் சொல்…’’

’’இதில் என்ன சந்தேகம் நல்லவனைத்தான்…” என்றான் வைத்தியநாதன்.

’’இறைவனும் அப்படித்தான். இந்த உலகம் எனும் புதைமணலில் நல்லவர்களை நீண்டநாட்கள் கஷ்டப்படவிடமாட்டார். அவருக்கு விருப்பமானவர்களை விரைவில் அழைத்துக் கொள்வார். நீயும் இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தால், அவருக்குப் பின் உன் தாய், தங்கையை யார் பார்த்துக் கொள்வது?’’

’’எங்கப்பா ஜாதகத்தில பூரண ஆயுள்னு போட்டிருக்கே…’’

’’இப்பவே உங்கப்பா பூரணமாயிருப்பது உனக்குப் புரியவில்லையா? ஒரு பூசாரிக்கு கற்பூரத் தட்டில் கிடைக்கும் வருமானம் மீது ஆசை போய்விட்டது என்றாலே அவர் முழுமையடைந்து விட்டார் என்றுதான் அர்த்தம்…”  என்றேன்.

’’உங்களால் அவரோட மரணத்தைத் தள்ளிப்போட முடியாதா..?’’ என்று இழுத்தான்.

’’முடியும். உனது தந்தைக்கு இறைவன் மீது வைத்திருக்கும் பக்தி குறைய வேண்டும். அதற்கு உன் மீது அவருக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். என் பாரத்தை இனி என் மகன் பார்த்துக் கொள்வான் என நினைக்கும் சராசரி தந்தையாக அவர் மாற வேண்டும்.  நீ  செய்யக் கூடியதெல்லாம் ஒரு மகனாக, மாணவனாக மாறுவதுதான். கல்லூரிக்குச் செல், வாழ்க்கையையும் சேர்த்துப் படி, திருமண பந்தத்தில் இறங்கு, இயற்கை விதித்தபடி அடுத்த சந்ததியை உருவாக்கு. நேரம் கிடைத்தால் இயற்கையையும் இறைவனையும் நினைத்துப் பார்…’’ என்றேன்.

;;அப்படின்னா இறைவன், அருவி, பூஜை, மந்திரம் எல்லாத்தையும் மறந்திடவா?’’

’’அவையெல்லாம் நேற்றைப் போலவே இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். நீ அதனருகே செல்லாமலே அத்துடன் நிரந்தரமாக வாழ முடியும். தினமும் கடவுளை தொழுது, அருவியில் குளிப்பதை  கடமையாக செய்து கொண்டிருந்தால், உன்னால் அதை அனுபவிக்கவே முடியாது. உன் வீட்டில் மாட்டப் பட்டிருக்கும் எத்தனையோ கடவுள் படங்களுள் அதுவும் கவனிக்கப்படாத ஒன்றாகிவிடும். அதனால் இப்போதைக்கு உன் அப்பா சொல்வதை கேட்டு, அதன்படி நட… அதுதான் அவருக்கு நல்லது…’’ என்றேன்.

எல்லாம் புரிந்தது போன்று தலையாட்டினான். எதுவும் பேசிக் கொள்ளாமல் சிற்றருவியைத் தாண்டி நடந்தோம். அதற்குள் நன்றாக விடியத் தொடங்கவே ஆட்கள் செண்பகா அருவியை நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.

’’சாமி, நீங்க செண்பகா அருவி வரைக்கும் போகணுமா? இப்பவே நடக்க சிரமப் படுறீங்க…’’ என்று கேட்டான் வைத்தியநாதன்.

’’செண்பகாதேவி மட்டுமல்ல, தேனருவியையும் மீண்டும் தரிசிக்கப் போகிறேன், ஆனால் நீ செண்பகாதேவி அருவியுடன் விடை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றதும் சிரித்தான்.

’’சும்மா சொல்லாதீங்க சாமி… நீங்களாவது தேனருவிக்குப் போறதாவது, இளவட்டப் பசங்களே போய் காலை உடைச்சிக்கிறாங்க, உசுர் போயிடுது. இத்தனை நாள் குற்றாலத்துல இருக்கேன், நானே பார்த்ததில்லை…’’

’’தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்,

செங் கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்.

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!’’ என்று வாய்விட்டு குற்றாலக் குறவஞ்சியைப் பாடினேன்..

என் பாடலைக் கேட்டு அருகே ஒரு கும்பல் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *