மருத்துவர்கள்

சோப்பு மாற்றினால் தேமல் வருமா..?

டாக்டர்  ராஜா மணிகண்டன்



அழகான முகம், ஆரோக்கியமான உடல் இருந்தும் சிலர் தேமல் போன்ற தோல் வியாதிகளால் அவஸ்தைபடுவது உண்டு.  இது, எந்த வயதினரையும் பாதிக்கக்கூடியது. சருமத்தைச் சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. தேமலில் பல வகைகள் இருக்கின்றன என்றாலும், வெள்ளைத்தேமல்  குறித்து பிரபல தோல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா மணிகண்டனிடம் பேசினோம்.

தேமல் என்றால் என்ன? அதனால், நிறைய பேர் பயப்படுகிறார்களே?

கறுப்பு முடி வெள்ளையாய் மாறுவதைப்போன்றதுதான் தேமலும். அதாவது, உடலின் சருமத்தில்  சற்று நிறம் மாறுவதே தேமல் ஆகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அதுவும் ஒரு நிறம்தான். இதைக் கண்டு நாம் பயப்படக்கூடாது. சிலர், இதைப் பெரிதாக நினைத்து கவலைப்படுகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை மனதில் கொண்டே பயப்படுகிறார்கள். அது ஒரு மனக்குறைதான். அதை, அவர்கள் முதலில் போக்க வேண்டும். தேமலைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொரணை இல்லாத தேமல் என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு. அதாவது அந்த இடத்தில் கிள்ளும்போது வலி இல்லாமல், வேறு எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பது சொரணை இல்லாத தேமல் எனப்படும். இது, ஒரு தோல் வியாதியாகும். ஆனால், அதுவும் இப்போது குறைந்திருக்கிறது.

தேமல் வருவதற்கு என்ன காரணம்?

தேமல் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதிலும் தேமலில் பல வகைகள் உள்ளன. பொதுவாக வெள்ளைத் தேமலை வெண்குஷ்டம் என்றுகூடச் சொல்வர். நாங்கள் விட்டீலியம் என்று சொல்வோம். இந்த தேமல் சூரிய ஒளியினால் வர வாய்ப்புண்டு. பொதுவாக, அடிக்கடி சோப்புகளை மாற்றுவதாலும், தண்ணீரை மாற்றுவதாலும் வருகிறது. குழந்தைகளுக்கு இப்படிச் செய்வதால்தான் இந்த தேமல் வருகிறது. நார்மலாக, சிலருக்கு அலர்ஜியால் இந்த தேமல் வருகிறது. இன்னும் சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும், இன்பெக்‌ஷன் மூலமும் வரலாம். குளிர் சீசனில் சருமம்ல்டு டிரையாகும்போதும்  இதுபோன்ற தேமல் வர வாய்ப்புண்டு. சிலருக்கு ஜெனிடிக்  மூலமும் வர வாய்ப்பிருக்கிறது. இன்னும் சிலருக்கு அதிக ஸ்ட்ரெஸ் மூலமும் வரலாம்.


பொதுவாக தேமல் உடலில் எங்கு தோன்றுகிறது? அதை, எப்படி குணப்படுத்துவது?

தேமல் உடலில் சிலருக்கு முகத்தில் மட்டும் இருக்கும். இன்னும் சிலருக்கு கை மற்றும் உதட்டில் இருக்கும். ஆனால் பலருக்கு உடல் முழுதும் இருக்கும். ஆனால், உடலில் இந்த தேமல் எங்கு இருந்தாலும் அதைக் கன்ட்ரோல் பண்ண முடியும். கலர்ஸ் மற்றும் ஆயில்மென்ட் போட்டு சரி செய்ய முடியும். நார்மலாக இருப்பவர்களுக்கு ஆயில்மென்ட் அல்லது மாத்திரைகள் மூலம் சரி செய்வோம். உடலின்  பிற பகுதிகளில் தேமல் இருப்பவர்களுக்கு கலர்ஸ் கொடுத்து சூரிய ஒளியில் கொஞ்ச நேரம் நிற்க வைத்து  சரி செய்வோம். இதனால், சிலருக்கு உடனே சரியாகும்… பலருக்கு கொஞ்சம் நாட்கள்கூட ஆகலாம். ஆனாலும், எந்த வகையிலும் இதைச் சரிப்படுத்துவதற்கு இன்று நிறைய மருந்துகள் உள்ளன. சிலருக்கு கிராபியன் மூலமும் சரிசெய்ய முடியும். சுகர், பிரஷர் உள்ளிட்டவர்களுக்கும் சில டெஸ்ட் எடுத்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

தேமல் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? அதற்காக, உணவு முறைகள் ஏதேனும் உள்ளதா?

பொதுவாக, அன்றைய காலத்தில் தேமல் அலர்ஜி உள்ளவர்கள் அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால்,, தேமல் உள்ளவர்கள் எல்லா உணவுகளையும் உண்ணலாம். அதுபோல் எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். அதேநேரத்தில், ஃபாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல், சாஃப்ட் டிரிங்க்ஸ் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதைவிட, ஹேர் டை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காரணம், அதில் ஹெமிக்கல் அதிக அளவு இருக்கிறது. இதை நாம் உபயோகித்துவிட்டு, நன்றாக தலையை அலசாமல் சென்றால், அதன்மூலம் அலர்ஜி ஏற்பட்டு இத்தகைய தேமல் வர வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அதிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *