பணம்

விலை குறைவாக சொத்து கிடைக்கிறதா..?

பினாமி சட்டம் ஜாக்கிரதை!

இன்று உலகில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை, அவர்கள் தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களிடம் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தும், சொத்துக்களாகப் பரிமாற்றம் செய்தும் வருகின்றனர்.  

புதிய பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின்படி, பினாமி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பரிமாற்றம் செய்வது கிரிமினல் குற்றம் எனவும் இதன்கீழ் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


பினாமி சொத்து குறித்து ரியல் எஸ்டேட் ஆலோசகரிடம் பேசினோம்.  ’’ஒருவர் மற்றொருவர் பெயரில் சொத்துக்களை வாங்குவதே பினாமி என்பதாகும். வரி ஏய்ப்பு செய்வதற்காக பலர் ‘பினாமி’ பெயரில் சொத்துக்களை வாங்குகின்றனர். சொத்து ஒருவர் பெயரிலும் அதை அனுபவிப்பவர் மற்றவராகவும் இருந்தால் அது ‘பினாமி’ சொத்து எனப்படுகிறது. அதாவது, பிறருடைய சொத்தை சட்டப்படி தன்னுடைய பெயரில்கொண்டிருப்பவர் பினாமியாகிறார்.  

விரும்பிய சொத்துக்களை வாங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்கான நிதி ஆதாரம் என்னவென்பதை வருமான வரித் துறைக்கு தெளிவுப்படுத்த வேண்டும். கணவரின் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில், மனைவி, மகன், மகள் பெயரில் வாங்கப்படும் சொத்துக்களும் பினாமி சொத்துக்களாகவே வகைப்படுத்தப்படும்.

இதுபோன்ற விவகாரங்களில் இப்போது  சட்டரீதியாக கிடுக்குப்பிடிகள் அதிகரித்துள்ளன. பினாமி பரிவர்த்தனை இருந்ததாக நிரூபிக்கப்பட்ட எல்லாச் சொத்துகளும் `பினாமி சொத்து’ என்றே கருதப்படும். அவை எந்த வகையான சொத்தாகவும் இருக்கலாம். அசையும் சொத்து, அசையாத சொத்து, பத்திரங்கள், சொத்திலிருந்து வரும் வருமானம், நிறுவனப் பங்குகள், நகைகள் போன்றவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

ஒருவர் தன் மனைவி, 18 வயது நிரம்பாத மகன்கள், திருமணமாகாத மகள்கள் பெயரில் மட்டுமே சொத்துக்களை பினாமியாக வாங்கலாம். ஆனால், அதற்கு முறையான வருமான ஆதாரம் இருக்க வேண்டும். அதேநேரம், பெற்றோர் பெயரில் பிள்ளைகள் சொத்து வாங்கினால், அது பினாமி சொத்தாகக் கருதப்பட்டு, அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.  பினாமி சொத்து என அறியாமல் ஒருவர் சொத்தை வாங்கியிருந்தாலும், அவர்மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும்.


அதனால்,  பினாமி சொத்து வழக்குகளில் சிக்கியவர்களிடம் உள்ள சொத்துக்களை வாங்குவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக சொத்துக்களை வாங்கினால், வழக்கு விசாரணைக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சொத்து, பினாமி சொத்து என்று அறியப்பட்டால் எந்தவித இழப்பீடும் தராமல், அந்தச் சொத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு.

பினாமி பெயரில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், அந்த பணம் முற்றிலுமாக முடக்கப்படும். பினாமி கணக்குகள், ஜன்தன் கணக்குகள், செயலற்ற வங்கிக் கணக்குகள் என எந்த கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பணம் டெபாசிட் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஒருவர் பினாமி சொத்து வைத்திருப்பது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்ட பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவிகிதம் வரை அபராதத் தொகை விதிக்கப்படும். அத்துடன், பினாமி சொத்துப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு  ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.  பினாமி சொத்தைப் பறிமுதல் செய்வதற்கான சட்ட வழிமுறைகள், சிறப்புப் படைகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்து 2016-ம் ஆண்டின் சட்டத்திருத்தம் விரிவாக விளக்குகிறது.

மத்திய அரசின் புதிய சட்ட நடவடிக்கையால் பினாமி சொத்துக்கள் வாங்குவோருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பினாமி சொத்துக்களை வாங்குவோர் சட்டச் சிக்கல்களைச் சந்திக்கும் வேளையில், மற்றவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது என்ற கேள்வி எழலாம். புதிதாக சொத்து வாங்குவோர், அதை விற்பவருக்கு அதில் உள்ள உரிமை தெளிவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்தச் சொத்தை அவர்  கணக்கில் காட்டாத பணத்தில் வாங்கினாரா என்பதை எப்படி  ஆய்வு செய்ய முடியும் என்ற  ஐயம்கூட எழலாம்.


நடைமுறை ரீதியாகப் பார்த்தால் இதுபோன்ற சொத்துக்கள் எந்த வகை பணத்தில் வாங்கப்பட்டது என்பதைச் சரிபார்ப்பதில் மக்களுக்குரிய சரியான வழிமுறை இல்லை. அதே நேரத்தில் பினாமி சொத்துக்களாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் நிலையில் அந்த பரிவர்த்தனையில் கவனமாக இருப்பது அவசியம். இன்னும் சில இடங்களில் அரசு பதவியில் இருப்பவர்கள், குடும்ப உறவினர் அல்லாத நபர்கள் பெயரில் சொத்து வாங்குகின்றனர். இதில் உங்கள் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துப் பரிமாற்றம் நடந்திருந்தால், அது உங்களுக்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார், விவரமாக.
பினாமி சொத்தா… அப்படீன்னா ஓட்டம் பிடித்திட வேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *