மகிழ்ச்சி

சாதாரண கம்பும் ஆயுதமாகலாம்.

பாரம்பரிய விளையாட்டு  சிலம்பம்



தமிழரின் சிறப்பான தற்காப்புக் கலைகளில் சிலம்பமும் ஒன்று. சிறிய மூங்கில் கம்புகொண்டு, கால் மற்றும் உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் கலையே சிலம்பம். எந்த ஒரு கம்பையும் சிலம்பக் கலை ஆயுதமாக்கி நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


சிலம்பம், சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தைக் குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.  சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000-க்கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பழங்கால தமிழ் மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட தற்காப்பு முறையே சிலம்பம் என்றும் கூறப்படுகிறது. தற்காலத்தில், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.

சிலம்பத்தடி

சிலம்பாட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில், சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பாட்டச் சுற்று முறைகள்

சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.
ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது,  இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது என இரு முறைகளும் இதில் உண்டு.  வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கேரளா, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிலம்பாட்டக் கலை புழக்கத்தில் உள்ளன. சர்வதேச அளவில் மலேசியா, சிங்கப்பூர், ஈரான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், உஸ்பெகிஸ்தான், சீனா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளில், அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக சிலம்பம் மாறியுள்ளது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. கலைப் பண்பாட்டுத் துறையில் சிலம்ப விளையாட்டை பாரம்பரிய கலைகளில் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.

சிலம்பின் உட்கூறுகள்
மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.

மெய்ப்பாடம்:
சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியான இது, உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவதாகும்.

உடற்கட்டுப்பாடம்
இரண்டாம் நிலை பயிற்சியான இது, குறிப்பிடத்தகுந்த வலிமையை  உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுகிறது.

மூச்சுப்பாடை.
மூன்றாவது பயிற்சியான இது, கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு  ஏதுவாக இருக்கும் பொருட்டு கற்பிக்கப்படுகிறது.

குத்துவரிசை:
இது, சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக உள்ளது. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக்கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதலே குத்துவரிசையாகும்.

தட்டுவரிசை:
ஒருவர் குத்துவரிசை பயிலும்போதே தட்டுவரிசையையும் கற்றுக்கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துகளை தம்மீது பாய்ச்சும்போது அவற்றை அவர்தம் நிலைக்கேற்ப  தன் நிலையை மாற்றித் தட்டிவிடுதலே தட்டுவரிசையாகும்.

பிடிவரிசை:
எதிரி தம்மைத் தாக்க வரும்போது எதிரியை எப்படி லாகவமாகத் தம் பிடிக்குள் கொண்டுவந்து தாக்குதலை முறியடிப்பதே பிடிவரிசை ஆகும்.

அடிவரிசை:
ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்வதே அடிவரிசை ஆகும். சிலம்புக்கலையின் இக்கூறானது, குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.

விருதுநகரைச் சேர்ந்த சிலம்பாட்ட பயிற்சியாளர், ‘சிலம்பாட்டத்தால் உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடிநரம்புகளும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிச் சுழற்றிச் சுற்றும்போது, உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்க முடியும். கற்கள், ஆயுதங்களைக் கொண்டு யாராவது நம்மைத் தாக்க முற்பட்டால், சுழற்றும் கம்பு அதை தடுத்துவிடும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், நெகிழ்வுதன்மை சிலம்பத்தால் மேம்படுகிறது. தொடர்ந்து சிலம்பாட்டப் பயிற்சியை மேற்கொள்ளும்போது இருதயக் கோளாறுகள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்’ என்கிறார்.

மற்றொரு பயிற்சியாளரான ரஞ்சித் குமார், ‘உடல் வெப்பம் ஏறாமல் இருக்க, மூங்கில், பிரம்பால் செய்யப்பட்ட கம்புகளால்தான் சிலம்பம் விளையாட வேண்டும். காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குட்பட்ட நேரத்தில் சிலம்பம் விளையாடுவது உடல்நலத்திற்கு சிறந்த பலனைக் கொடுக்கும். உச்சி வெயிலில் சிலம்பம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். சிலம்பப் பயிற்சியால் கை, கால்கள் பலம் பெறும். சிலம்பம் ஆடும் போதும் பசியே எடுக்காது. ஆடி முடித்ததும் நன்றாக பசி துாண்டப்படும்’ என்கிறார்.
சிலம்பம் கற்போம்… சிறகடித்துப் பறப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *