மருத்துவர்கள்

மாட்டுக் கறி ஆஸ்துமா குறைக்குமா?


விவரிக்கிறார் மருத்துவர் ஹரீஷ்



புஸ்புஸ் என்று மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா..? இதுதான் ஆஸ்துமா நோயின் முக்கியமான அறிகுறி. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஆஸ்துமா நோய் குறித்து பிரபல நுரையீரல் நிபுணரான மருத்துவர் ஹரீஷிடம் பேசினோம்.

 ஆஸ்துமா என்றால் என்ன? அதனால், எத்தகைய பாதிப்புகள் வரும்?
 “உலகில் அச்சுறுத்தக்கூடிய டாப் 20 வியாதிகளில் ஆஸ்துமாவும் ஒன்று. மூச்சுக்குழாய் சுருங்குவதுதான் ஆஸ்துமா ஆகும். மூச்சுக்குழாய் சுருங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக அலர்ஜி, மாசு முதலியவற்றால் வருகிறது. இதுதவிர, ஈசினோபிலியா (eosinophilia)  அதிகமாகி சுருங்குவதாலும் ஆஸ்துமா ஏற்படும். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்கும். மேலும், குயிங் குயிங் என்ற சத்தம் வரும். இவர்கள், காலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடுவதில் அதிகம் சிரமப்படுவர். இந்த அவஸ்தை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, ஒவ்வொருவருக்கும்  மாறுபடும்.  இந்த ஆஸ்துமா  பயப்படக்கூடிய நோய் அல்ல என்பதுதான் ஆறுதலான விஷயம். இந்திய  மக்கள்தொகையில்  2 முதல் 18 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா நோய் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



மூச்சுக்குழாய் சுருங்குவதற்குக் காரணம் என்ன?


 தூசி, புகை, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எதுவும் உள்ளே சென்றால்  மூச்சுக்குழாய் சுருங்கிவிடும். சிலருக்கு விடியற்காலை பனிப்பொழிவால் மூச்சுக்குழாய் சுருங்க வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்தாலும் சிலருக்கு மூச்சுக் குழாய் சுருங்கிவிடும். அலர்ஜியான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாலும் மூச்சுக்குழாய் சுருங்கிவிடும்.  நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின்  முடிகளாலும் ஆஸ்துமா வர வாய்ப்பிருக்கிறது. இவை எல்லாம் பொதுவான காரணங்கள். இவற்றைத் தடுக்க வேண்டுமானால் முதலில் நாம் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், வீட்டுக்குள்ளேதான்  நிறைய மாசு இருக்கிறது. இப்போது நிறைய வீடுகளில்  வெளிக் காற்று உள்ளே வருவதற்கான ஜன்னல்  வசதி இருப்பதில்லை. குறிப்பாக, கொசுவர்த்தியின் நச்சுக்காற்று வெளியேறும் வகையில் ஜன்னல்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஜன்னல்கள் இல்லையென்றால், வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் புகையும் நச்சும் நம் உடலுக்குள் சென்றுவிடும்.

அதுபோல் ஏசி இருக்கும் அறைகளில் காற்று உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஏசியில் டெம்ப்ரேச்சரை  மிகக் குறைவாக வைத்துக்கொள்ளக்கூடாது. 24-க்கு மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. இதற்குக் குறைவாக  18, 16 அளவில் வைத்துக்கொண்டால் அந்த குளிர்ந்த காற்றே மூச்சுக்குழாயை டிரையாக்கி சுருங்கச் செய்துவிடும். அடுத்து, ஏசியை அடிக்கடி சுத்தம் செய்யவில்லை என்றால், தூசியுடன் ஏசி காத்து உள்ளே சென்று நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வார்னிஷ், வுட் வார்னிஷ், பெயிண்ட், ஸ்ட்ராங்கான பெர்ப்யூம் போன்றவற்றைப் பயன்படுத்துவதாலும் சிக்கல் வரலாம்.

இதுதவிர, கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு கிருமிகள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள் போன்றவற்றில் இருக்கலாம். இவற்றையெல்லாம் நன்கு துவைத்து சூரியவெளியில் காயவைக்க வேண்டும். ஹவுஸ் டஸ்ட் மைட் பில்லோ கவர்ஸ் (House dust mite pillow covers) கடைகளில் கிடைக்கின்றது. இதை வாங்கி உபயோகிக்கலாம். அடுத்து வீட்டில் ஏற்றப்படும் சாம்பிராணி, ஊதுபத்தி  போன்றவற்றின் புகையும் வீட்டைச் சுற்றிச்சுற்றியே வரும். இதுவும் அலர்ஜி தன்மையைத் தூண்டக்கூடும். இவற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.


 ஆஸ்துமாவைக் கண்டுபிடிப்பது எப்படி?
இதை பி.எப்.டி. (Pulmonary Function Test) டெஸ்ட் மூலம் கண்டுபிடிக்கலாம். பாதிக்கப்பட்ட நபருடைய வயதையும், உயரத்தையும் கணக்கில் கொண்டு அவர்களுடைய நுரையீரல் நார்மலாக செயல்படுகிறதா என்பதை வைத்து ஆஸ்துமாவை கண்டுபிடிக்க முடியும். மூச்சுக்குழாய் மட்டும் சுருங்கி இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதையும், ஆஸ்துமாவின் வீரியம் குறித்தும்  நமக்குத் தெரிந்துவிடும். இதுதவிர, மேல் மூச்சுக்குழாய் சுருங்கியிருக்கிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

ஆக, ஆஸ்துமா குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகே சிகிச்சையில் இறங்க வேண்டும். குறிப்பாக, கண் மற்றும் காதுகளுக்கு டிராப்ஸ் மட்டும் போட்டு குணப்படுத்துவதைப்போல ஆஸ்துமாவுக்கும் இன்லேஸ் உண்டு. இது நேரடியாகவே மூச்சுக் குழாய்க்குச் சென்று தீர்வுகாணும். ஆஸ்துமாவுக்கு மாத்திரையும் கொடுக்கலாம். ஆனால், ரத்தத்தில் கலந்து அதன்பிறகுதான் தீர்வு காணும். இதயத்துக்கோ, கிட்னிக்கோ நேரடியாக ஊசியோ, மருந்தோ போட்டு சிகிச்சை அளிக்க முடியாது. ஆனால், சுவாசக் குழாய்க்கு நேரடியாகவே சிகிச்சையளிக்கலாம். வாய்வழியாக செலுத்தப்படும் இந்த இன்லேஸ் நேரடியாக மூச்சுக்குழாய்க்கு மட்டுமே செல்லும். மற்ற பகுதிகளுக்கு செல்லாது.


இன்லேஸை தொடர்ந்து பயன்படுத்தலாமா?
இன்லேஸ் ஒருபோதும் ரத்தத்தில் கலப்பதில்லை. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு அவர்கள் சொல்லும் அளவிலேயே இன்லேஸைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்துமாவின் வீரியத்தைப் பொறுத்தே மருத்துவர்கள் இன்லேஸின் அளவைக் கூட்டியோ,  குறைத்தோ கொடுப்பார்கள்.

 ஆஸ்துமா நோயாளிகளுக்கு எத்தகைய உணவுகளைப் பரிந்துரைக்கலாம்? மாட்டுக்கறி  ஆஸ்துமாவை கட்டுப்படுத்துமா?


ஆஸ்துமா நோயாளிகளுக்கு டயட் என்று பொதுவாக எதுவுமில்லை. அவர்கள் எது சாப்பிட்டால் ஒத்துக்கொள்கிறதோ, அதைச் சாப்பிடலாம். எதைத் தவிர்க்க வேண்டுமோ, அந்த உணவுகளைத் தவிர்க்கலாம். அதேநேரத்தில் ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் குத்தியும், ரத்தம் மூலமாகவும் டெஸ்ட் செய்து எந்த வகையான உணவுகள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், அது எல்லோருக்கும் தேவையில்லை. ஆஸ்துமா அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த டெஸ்ட் தேவைப்படும். பெரும்பாலும் ஆஸ்துமா நோயாளிகள் ஜங்க் ப்ரூட்ஸ்களைத் தவிர்ப்பது நல்லது. ஜில்லென எது சாப்பிட்டாலும் ஆஸ்துமா அதிகமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாட்டுக்கறி சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும் என்று சொல்வதில் அறிவியல்பூர்வமான உண்மை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *