பணம்

மனை வாங்குவதில் இப்படியும் வில்லங்கமா?

உஷாரா இருங்கோ மக்களே

வீடு அல்லது மனை வாங்கும் நேரத்தில், பலருக்கு இருக்கும் அச்சம் என்ன தெரியுமா? நாம் வாங்கும் சொத்தில் எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது என்பதுதான். அதேநேரம், பொதுச் சொத்துக்களின் குறுக்கீடு இருப்பது தெரியவந்தால், அத்தனை எளிதில் அந்தப் பிரச்சினை தீரவே தீராது.

அது என்ன பொதுச்சொத்துக்களின் குறுக்கீடு என்று  ரியல் எஸ்டே ஆலோசகர் ஒருவரிடம் பேசினோம். “வீடு வாங்குவது பல பேருடைய கனவாக இருக்கிறது. அது, சிலருக்கு நிறைவேறுகிறது. பலருக்கு கானல் நீராகவே போய்விடுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வீடோ அல்லது மனையோ வாங்கும்போது அதில் நிறைய  எச்சரிக்கை குறிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  குறிப்பாக, வீட்டு மனை வாங்கும்போது அதற்கான வரைபடத்தில் நம்முடைய மனை எது என்பதையும், அதன் அமைவிடத்தையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய ரியல் எஸ்டேட்காரர்களில் பாதிப்பேர் எதையாவது ஒன்றைச் சொல்லி  நிலத்தை விற்றால் போதும் என்ற நிலையில்தான் உள்ளனர்.. மக்களும் அவர்களது பேச்சை நம்பி உண்மை நிலவரம் என்ன என்பதைக்கூட விசாரிக்காமல் நிலத்தை வாங்கிவிடுகின்றனர். ஏனென்றால், இந்த அவசர யுகத்தில் பலருக்கும் உண்மையைக் கண்டறிவதற்கு நேரமும், பொறுமையும் இருப்பதில்லை.

சட்டென்று வாங்கிவிட்டு, பின்னர் வீடு கட்டும்போது பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இதனால் பணத்துக்குப் பணமும் போய்விடுகிறது. மனதளவில் பாதிப்பும் ஏற்பட்டு நிம்மதியும் போய்விடுகிறது. ஆகையால் நிலம் வாங்கும்போது மிகமிகக் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிகாரம் பெற்ற முகவரிடம் சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம்  அவருக்கு இருப்பதை உறுதி கொள்ள வேண்டும்.

ஒருவேளை, விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரப் பத்திரம் செல்லாது. சொத்துக்கான மூல ஆவணத்தைப் பெற்று தக்க சட்ட ஆலோசனை பெற வேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் பெறுவது அவசியம்.

அதிலும் குறிப்பாக, நாம் வாங்கும் மனையில் ஏதேனும் பொதுச் சொத்துக்கள் இருக்கின்றனவா என்பதை முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும். அதற்காக, அங்குள்ளவர்களிடம் தீர விசாரிக்க வேண்டும். முக்கியமாக அந்த மனை குறித்து, அந்தப் பகுதியில் வாழும்  வயதானவர்களிடம் விசாரிக்க வேண்டும். இந்த மனைக்குள் கால்வாய், குளம், மயானம், நடைபாதை, மைதானம், பூங்கா போன்ற பொதுச் சொத்துக்கள் ஏதேனும் வருகிறதா என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப்பின்பே அந்த மனை வாங்குவது குறித்து களத்தில் இறங்க வேண்டும்.  

விற்பனைக்கு வரும்  அந்த மனையின் வரைபடத்துடன், அந்த நிலம் தொடர்பாக நில அளவை வரைபடத்தையும் கேட்டு வாங்கிப் பார்க்க வேண்டும். அதில் லே அவுட்டுக்காக குறிப்பிடப்படும்  சர்வே எண்களுக்கான நிலம் எவை, அதில் பொதுச் சொத்துக்கள் ஏதாவது குறுக்கிடுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். லே அவுட் வரைபடத்தையும் நில அளவை வரைபடத்தையும்  ஒப்பிட்டுப் பார்த்தால், நிலத்தின் உண்மை நிலவரம் தெரியவரும். சில சமயங்களில் இதுபோன்ற பொதுச் சொத்துக்களின் குறுக்கீடு இருப்பது மறைக்கப்பட்டு இருக்கலாம். அதுகுறித்து நீங்கள் உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இன்னும் சில இடங்களில் பொதுச் சொத்துக்களின் குறுக்கீடுகள் சம்பந்தப்பட்ட துறையால் வரன்முறை செய்யப்பட்டு இருக்கும். அப்படி வரன்முறை செய்யப்பட்டு இருந்தால், அந்த லே அவுட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன என்பதை விசாரிக்க வேண்டும். மனை விற்பனை நிறுவனங்கள், தங்களுக்குப் பாதகமாகும் இதுபோன்ற நிபந்தனைகள் இருப்பதை மறைத்துவிடவே செய்வார்கள். எனவே, மனை வாங்குவோர் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது” என்றார்.

சந்தோஷமாக வாழ்வதற்குத்தான் வீடு, இடம் வாங்குகிறோம். அதில் நாம் காட்டும அவசரம் அல்லது அசட்டை காரணமாக வாழ்நாள் முழுவதும் துன்பம் அடையக்கூடாது.

உஷார் மக்களே உஷார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *