அரசியல்

தமிழகம் அமைதிப் பூங்காவா ஸ்டாலின்..?

நல்லவர் மட்டுமல்ல, வல்லவரான முதல்வரே வேண்டும்.  

தமிழகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற எண்ணம் சாதாரண மக்களுக்கும் வந்துவிட்டது.  கூலிப்படை பெருகிவிட்டதால் அரசியல் படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. கள்ளச்சாராய மரணங்கள் நடக்கின்றன. இதையெல்லாம் தடுக்க வேண்டிய ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் செய்வதில் மட்டுமே போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

இந்த ஜூலை மாதம் மட்டுமே 3 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. ஜூலை 1 ம் தேதி கடலூர் வண்டிபாளையத்தில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  ஜூலை 3 ம் தேதி சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதிச்செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் 6ம் தேதி  சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் ஒரு வழக்கறிஞர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார். பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ல் மேயர் மா.சு தலைமையில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 99 பேர் ராஜினாமா செய்த போது சுயேட்சை உறுப்பினரான ஆர்ம்ஸ்ட்ராங் ராஜினாமா செய்ய மறுத்ததால் முதன்முதலில் செய்திகளில் இடம் பெற்றார். முதலமைச்சர் கலைஞரின் உத்தரவை மீறிய தலித் இளைஞன் என்ற செய்தியைப் பார்த்த மாயாவதி உடனே அவரை அழைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கினார்.

கடந்த 2008-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவருமான மாயாவதியை அதே ஆண்டு டிசம்பர்22-ம் தேதி சென்னை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தி அக்கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றார்.

அதுவரை வடதமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் என்று மட்டுமே இருந்த பட்டியலின மக்கள் ஆதரவை மாற்றி, தானும் ஒரு கட்சித் தலைவராக மாறினார். கணிசமான ரவுடிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஒரு அரசியல் தாதாவாகவும் உருவெடுத்தார் ஆர்ம்ஸ்ட்ராங்.

இவருக்கும் ரவுடி ஆற்காடு சுரேசுக்கும் முன்பகை இருந்துள்ளது. ஆற்காடு சுரேஷின் தம்பிதான் கொலை செய்துள்ளார் என்பது சிசிடிவி-இல் பதிவாகியுள்ளது. ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். அதே வழியில் இவரும் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே இதனை பழிக்குப் பழி என்று அரசும் காவல் துறையும் அசட்டையாக இருக்க முடியாது.

ஆம்ஸ்ட்ராங் ஒரு மோசமான ரவுடி என்றால் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும். இன்று அவர் கொலை செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுக்க கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்றெல்லாம் கூறி ஸ்டாலின் தப்பிக்க முடியாது. நிறைய நலத்திட்ட உதவிகள் செய்திருப்பது மட்டும் மக்களுக்குப் போதாது. நிம்மதியான வாழ்க்கையும், தவறு செய்பவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற உறுதியும் மக்களுக்குத் தேவை.

ஸ்டாலின் நல்லவராக இருப்பது மட்டும் போதாது, அநியாயங்களை அடக்கும் வல்லவராகவும் இருக்க வேண்டும். இதற்கு வாய்ப்பு இல்லை என்றால் காவல் துறையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் ஸ்டாலின். இது தான் மக்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *