மருத்துவர்கள்

ஆரோக்கியத்துக்கு சிம்பிள் ஃபார்முலா

  – சித்த மருத்துவர் கு.சிவராமன்

உணவை அளவுடன் எடுத்துக்கொண்டால், மருந்து சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை என்கிறார் சித்தமருத்துவர் கு.சிவராமன். அவரிடம் ஆரோக்கியம் பெறுவதற்கு எளிய வழி சொல்லுங்கள் என்று கேட்டோம்.

‘’இன்றைய மனிதர்கள் அவரசத்தைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியத்துக்கு எளிய வழி கேட்கிறீர்கள்” என்றவர் புன்னகையுடன் சொல்லத் தொடங்கினார்.

“இனிப்புச் சுவையைக் குறைக்க வேண்டும். ஆறு சுவைகளில் கசப்பையும், துவர்ப்பையும்  உண்ண வேண்டும். கசப்பு, துவர்ப்பான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு இரண்டுவேளை உணவருந்தக்கூடிய தன்மை வேண்டும். மாவுப் பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. கிழங்கு வகைகளையும் அதிகம் எடுக்கக்கூடாது. மரக்கறிகளில் நிறைய காய்கறிகளையும், புலால் உணவுகளில் மீனையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓர் உணவைச் சாப்பிட்ட பின்பு, நன்கு செரிமானம் ஆன பிறகே அடுத்தவேளை உணவை எடுக்க வேண்டும். பசிக்கும்போது மட்டுமே உணவை எடுக்க வேண்டும். அதாவது, பசிக்குப் புசித்தல் என்பதுபோல உணவு எடுத்தல் வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்பதற்காக, பசிக்காமல் உணவருந்துவது நல்லதல்ல.

முடிந்தவரை, ரசாயனம் கலப்பில்லாத இயற்கை உரத்தில் விளைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகளில் 70 முதல் 80 சதவிகிதம்வரை காய்கறிகள், கீரைகள், புலால், மீன் உள்ளிட்டவை இருக்க வேண்டும். 20 முதல் 30 சதவிகிதம்வரை மட்டுமே அரிசி, தானியங்கள் இருக்க வேண்டும்.

முதலில் இதை நாம் உல்டாவாக வைத்திருந்தோம். அதாவது, 70 சதவிகிதம் அளவுக்கு சாதம் சாப்பிட்டு, 20 சதவிகிதம் அளவுக்கு காய்கறிகளைச் சாப்பிட்டோம். அப்படிச் சாப்பிடக்கூடாது.  இனிமேல் இப்படித்தான் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார், மகிழ்ச்சியுடன்.

அவ்வளவுதான் ஆரோக்கியமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *