மருத்துவர்கள்

விளையாட்டு வீரர்களுக்கு வார்ம் அப், கூல் டவுண்.

ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர்

கிரிக்கெட் அல்லது கால் பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பவர்கள்,  காட்சியை அடிக்கடி ஒரு காட்சியைப் பார்த்திருக்க முடியும். அதாவது, திடீரென ஒரு வீரர் நடக்க முடியாமல் தடுமாறுவது, சுருண்டு விழுவது, தசை பிடித்துக்கொள்வது போன்ற பிரச்னையால் சிரமப்படுவார். மைதானத்தில் இருந்து வெளியே செல்லும் அந்த வீரர், கொஞ்ச நேரத்தில் பழைய உற்சாகத்துடன் திரும்பி வந்து விளையாடுவதையும் பார்த்திருப்பீர்கள்.

இந்த நேரத்தில் அப்படியென்ன மேஜிக் நடந்திருக்கும்?

அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் வேதனை, வலியில் இருந்து விடுபட்டு திரும்பிவந்திருப்பார். அவ்வளவு தான். அதனால் தான் ஒவ்வொரு அணியும் தங்களுடன் எப்போதும் பிசியோதெரபி நிபுணர்களை அருகில் வைத்திருப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு வரும் பிரச்னையை இரண்டு விதமாக அணுக வேண்டும்.

இரண்டு வகை சிகிச்சை

ஆடி, ஓடி விளையாடுபவர்களுக்கு அடிபடுவதற்கும் தசை நார்களில் பிரச்னை வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி வீரர்கள் உடல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் வீரர்களுக்கு `ஆன் ஃபீல்டு’, `ஆஃப் ஃபீல்டு’ என இரண்டு வகையில் பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது.

அதாவது, விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவி கொடுத்து அவர்களை விளையாடுவதற்குத் தயார்படுத்தி அனுப்பி வைப்பது ஆன் ஃபீல்டு டீம் பிசியோதெரபி.

மைதானத்தில் காயம் அடைந்த வீரருக்குச் சிகிச்சையளித்து, அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து, இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது ஆஃப் ஃபீல்டு பிசியோதெரபி.

பயிற்சி முறை

எந்த ஒரு விளையாட்டு வீரர் என்றாலும் அதலெட் எனப்படும் தனிநபர் விளையாட்டில் பங்கேற்பவர் என்றாலும் தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி பயிற்சி மேற்கொள்ளும் போது பிசியோதெரபி நிபுணர்களின் வழி காட்டுதலில் வார்ம் அப் (Warm Up) மற்றும் கூல் டவுண் (Cool Down) பயிற்சிகள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலை விளையாட்டுக்குத் தயார் படுத்துதல் மற்றும் தளர்வு படுத்துவதே இந்த பயிற்சிகள் ஆகும்.

பொதுவாக ஜாலியாக அல்லது எப்போதாவது ஒரு முறை விளையாடுபவர்கள் இந்த பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை. அதனால் தான் திடீரென்று ஒரு சிலர் விளையாட்டு மைதானத்தில் இறங்கி விளையாடும்போது, கால் தசைநார்கள் பாதிக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு லிக்மெண்ட் எனப்படும் சவ்வு தேய்மானம், விலகல், கிழிந்து போதல், கணுக்கால் சுளுக்கு தொடங்கி, இடுப்பு வலி, இடுப்பு இழுத்தல், முழங்கால் எலும்பு முறிவு போன்ற பல்வேறு வகையில் காயங்கள் ஏற்படுகின்றன. இந்த காயங்கள் காரணமாக கடுமையான வலியில் அவதிப்படுவது மட்டுமின்றி கட்டாயமாக விளையாட்டில் இருந்து ஒதுங்கவும் ஓய்வு எடுக்கவும் நேரிடலாம். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லோருக்குமே இப்படிப்பட்ட ஆபத்து நேர்வதற்கு வாய்ப்பு உண்டு.

எனவே விளையாட்டு மீது எத்தனை ஆர்வம் இருந்தாலும், விளையாட வேண்டிய அவசியம் இருந்தாலும் உடல் பற்றிய தெளிவு பெற்ற பிறகே மைதானத்தில் இறங்க வேண்டும். தினமும் உடலுக்குப் போதிய அளவு ஓய்வு, பயிற்சி, உணவு போன்றவை கொடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் விளையாடினால் உடலுக்கு நீண்ட  ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். விளையாடி விட்டு ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கிறேன், நண்பர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறேன் என்பதெல்லாம் ஓய்வு ஆகாது. ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் மீட்கும் அளவுக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும்.

எனவே, அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதும், அதிக நேரம் விளையாடுவதும் கூட உடலுக்கு ஆபத்தை உருவாக்கவும், காயம் ஏற்படவும் காரணமாகி விடுகிறது. எனவே, ஒரு விளையாட்டு வீரருக்கு எப்போது விளையாட வேண்டும், எப்போது விளையாட்டை நிறுத்த வேண்டும் என்ற தெளிவு மிகவும் முக்கியம். அதனை பிசியோதெரபி நிபுணர் கற்றுத் தருகிறார்.

சிறு காயம் அல்லது வலி ஏற்படும் நேரத்தில் விளையாட்டு வீரர்கள் அதனை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. உடல் காயம் பற்றி பிசியோதெரபி நிபுணரிடம் தெரிவித்து, அவரது ஆலோசனை படியே மேற்கொண்டு பயிற்சி செய்வது, விளையாடுவது அல்லது ஓய்வு எடுக்க வேண்டும். பிசியோதெரபி நிபுணர் மூலம் சரியான பயிற்சி கிடைக்கப்படாதவர்கள் காயங்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வீரர்கள் விளையாடும் நேரத்தில் உடை, பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றையும் முறைப்படி பயன்படுத்த வேண்டும். இதுபோன்று அனைத்து விஷயங்களிலும் பிசியோதெரபி நிபுணரின் அறிவுரைகளை பின்பற்றினால் காயம் ஏற்படும் சூழல் உருவானாலும் 90 விழுக்காடு உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியும்.

அதுபோல் வயதுக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்பவே விளையாட வேண்டும். ஒரு சில நபர்களின் பாத அமைப்பு வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள் அதிகம் ஓடுவது ஆபத்தாக மாறிவிடும். அதேபோல் வயது அதிகரிக்கும் போது அதிக வேகத்துடன் விளையாடுவதை குறைத்துக்கொள்ளுதல் அவசியம். ஏனென்றால், வயதாக வயதாக காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். அதோடு, குணமடையவும் காலம் அதிகமாகும்.

எந்த ஒரு காயத்துக்கும் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக எலும்பு முறிவு, தசைபிடிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் பிசியோதெரபி நிபுணரின் ஆலோசனைப்படியே அவரை நகர்த்தி சிகிச்சைக்கு கொண்டுவர வேண்டும்.

பக்கத்தில் பிசியோதெரபி நிபுணர் இல்லை என்றாலும் தொலைபேசியில் பேசி, அவர் ஆலோசனைப்படி காயப்பட்ட நபருக்கு தேவையான நடவடிக்கை எடுத்துக்கொண்டால், அவருக்கு காயம் ஆறுவது எளிதாக இருக்கும். சீக்கிரமே அவர் விளையாட்டு மைதானத்திற்கு பழைய புத்துணர்வுடன் திரும்ப முடியும்.

ஆகவே, குடும்ப மருத்துவர் போன்று விளையாட்டு வீரர் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிசியோதெரபி நிபுணர் அவசியம். அதுவே, உடல் பலத்துக்கும் விளையாட்டில் வெற்றி பெறவும் வழி வகுக்கும்.

  • தொடர்புக்கு : 9994944228

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *