பிரபலங்கள்

எல்லோருக்கும் முதல் புன்னகை என்னுடையது..!

நடிகர் நிழல்கள் ரவியின் இளமை ரகசியம்

நிழல்கள் படத்தில் 1980-ல் அறிமுகமான நிழல்கள் ரவி, நான்கு தலைமுறை கதாநாயகர்கள் காலங்களிலும் நடித்தவர்; தொடர்பவர். பல்வேறு மொழிகளில் 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளவர். அண்மையில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி, ஃபைண்டர் படங்களிலும் இவர் நடித்துள்ளார். எல்லாருக்கும் இனியவராக அன்று முதல் இன்று வரை இடைவெளி இல்லாமல் தனது கலைப் பயணத்தை தொடர்ந்து வரும் திரைக்கலைஞர் நிழல்கள் ரவி ஆரோக்கியம், உடல் நலம் குறித்து இங்கே பேசுகிறார்.

’’உடல் நலம் என்கிற போது அத்துடன் மனநலமும் சேர்ந்தது தான். இரண்டையும் நாம் இணைத்தே பார்க்க வேண்டும்.

நான் அன்று முதல் இன்று வரை எனது உடல்நலத்தைச் சீராகப் பராமரித்து வருகிறேன் .அதற்காக பெரிதாக, தீவிரமாக மெனக்கெடுவதில்லை என்றாலும் சில விஷயங்களை நான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். பெரும்பாலும் சைவம் தான் சாப்பிடுவேன். காய்கறிகள் நிறைய எடுத்துக் கொள்வேன்.

காய்கறிகள் பழங்கள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாவுச் சத்துக்கள் உணவுகளைக் குறைத்துக் கொள்வேன். அதே மாதிரி எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வேன். ஒரு கட்டத்துக்கு மேல் அதிக எண்ணெயில் உருவானவை பொரித்தவை வறுத்தவை போன்றவற்றை விலக்க வேண்டும். குறைந்தபட்சம் குறைக்க வேண்டும். எண்ணெய் மிகக் குறைவான அளவில் தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .ஆயிலைக் குறைத்தால் ஆயுள்கூடும் பலரும் வலியுறுத்துவது. இதுதான் என் கருத்து. இதை நான் கடைப்பிடிக்கிறேன்.

நான் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் பழக்கம் ஒன்று உள்ளது. அது, சாதாரண விஷயம் தான். ஆனால் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். அதாவது நான் எப்போதும் குளிர்ந்த நீர் அருந்துவதே இல்லை. எப்போதுமே வெந்நீர் தான் குடிப்பேன். எங்கு சென்றாலும் எனக்கு வெந்நீர் இருக்க வேண்டும். எல்லோரும் குடித்துப் பாருங்கள். அது பல உடல் உபாதைகளைக் குறைக்கும்

உடல் ஆரோக்கியத்திற்கான பொதுவான விதி என்னவென்றால் உண்டது ஜீரணமாக வேண்டும். ஜீரணம் ஆகிவிட்டால் நமது உடல் சரியாக இருக்கிறது என்று அர்த்தம் .அதில் பிரச்சினை வந்தால் நாம் உணவுகளைக் கவனிக்க வேண்டும். ஜீரணமாகக் கடினமானவற்றை ஒதுக்க வேண்டும். உண்பது செரிக்க வேண்டுமென்றால் ஏதாவது வேலை செய்ய வேண்டும். சாப்பிட்டவுடன் செரிமானத்திற்கான வேலை செய்யப்பட வேண்டும். சும்மாவே சோம்பியிருந்தால், சொகுசாக இருந்தால் நாம் ஏதோ நோயை விலைக்கு வாங்குகிறோம் என்று அர்த்தம்.

நான் மாலை 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடுவதில்லை. இரவில் காலி வயிறாக இருக்க வேண்டும். எல்லா உணவுகளையும் மாலை ஏழு மணிக்குள் முடித்துக் கொள்வேன். இரவில் செரிமானம் ஆகாத வயிற்றுடன் உறங்கக் கூடாது. வயிறு காலியாக இருப்பது நல்லது.

எனக்கு உடல் நிலையில் நீண்ட காலம் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை ஆனால் ஒரு முறை கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா படப்பிடிப்பிற்காகத் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். துவாரகீஷ் தான் தயாரிப்பாளர். அப்போது பாறையிலிருந்து குதிப்பது போல் ஒரு காட்சி. அப்போது எனக்கு தோள்பட்டை மூட்டு நழுவியது. நீண்ட நாள் அது பிரச்சினையாக இருந்தது. பழைய நிலைமைக்கு வருவதற்கு நெடுநாள் ஆனது.

நாம் என் உடலுக்காகச் செய்வது நடைப்பயிற்சி தான். தினமும் நான் வாக்கிங் செல்வேன். கடினமாகவும் வேகமாகவும் ஓடுவது கிடையாது. மெதுவாக நடப்பதும் கிடையாது. சீரான வேகத்தில் நடப்பேன்.

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் எனது இளமை பற்றி கேட்பார்கள் .அதற்காக சிறப்பாக நான் ஒன்றும் செய்வதில்லை .மனதை இலகுவாக வைத்துக் கொள்வேன் .மனதிற்குள் எதையும் மறைத்து வைப்பதில்லை. மனதில் எந்த அழுக்கையும் சேர விடுவதில்லை. நமக்கு யாருமே எதிரிகள் கிடையாது என்பது என் எண்ணம். இயல்பாகவே எல்லோரிடமும் அன்பு காட்டவே நான் விரும்புகிறவன்.

எந்த பிரச்சினையையும் தள்ளி வைத்துப் பார்க்க வேண்டும். அதையே அருகில் வைத்துப் பார்த்தால் பூதாகரமாகத் தெரியும். தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் கிடையாது. அப்படி இருந்தால் மனம் அமைதி அடையும்

உடலைச் சரியான ஃபிட்னஸாக வைத்திருப்பதில் நண்பர் சத்யராஜ் அவர்களின் கட்டுக்கோப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு வகையில் தூண்டுதல் என்று கூட சொல்லலாம். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் உடல் நலன் சார்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு அவர் ஒரு தூண்டுதலாக இருக்கிறார். வயதைக் கடந்த அவரது சுறுசுறுப்பு எனக்கு மிகவும்ஆச்சரியமாக இருக்கும். அவருக்குத் தூண்டுதல் கமல் சார் என்பார்.

நம் உடல் நலம் சம்பந்தமாக டாக்டர் சொல்வதை நம்ப வேண்டும். நாம் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கக் கூடாது. அவர் சொல்லும் மருத்துவ முறைகளைச் சரியாகப் பின்பற்றி மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் இன்னொரு பக்கம் வேறொரு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் விளைவுகள் மோசமாகிவிடும். டாக்டரை நம்பி விட்டால் அவர் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

மனதை இலகுவாக லேசாக வெளிப்படையாக வைத்திருப்பது உடல் நலத்துக்கு மிகவும் அவசியமாகும். சந்தோசமோ வருத்தமோ எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. அனாவசியமான கவலைகள் ஆரோக்கியத்துக்கு கேடு.

நான் பல தலைமுறை கலைஞர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன், நடித்தும் வருகிறேன். ஆனால் ‘அந்தக் காலத்திலே’ என்று பிளாஷ்பேக் எதுவும் நான் சொல்வது கிடையாது. அப்படி பழங்காலத்து கதைகளைச் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் மனதிற்கு வயதாகி விட்டது என்று அர்த்தம்.

கால மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் .நான் நிழல்கள் படப்பிடிப்பில் நடித்த காலம் வேறு. இப்போது வடக்குப்பட்டி ராமசாமி, ஃபைண்டர் படங்களின் காலம் வேறு. இரண்டிற்கும் இடையே ஏராளமான மாற்றங்கள். பல சிரமங்கள் எல்லாம் இப்போது சுலபமாக மாறி உள்ளன. இந்த தலைமுறையில் புதிதாக வரும் இளைஞர்களிடம் திறமை இருக்கிறது. அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப மாற்றங்கள் அசாதாரணமாக உள்ளது. அதன் சாத்தியங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொள்ளாமல் நாம்அந்தக் காலத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப் பேசிக் கொண்டிருந்தால் நம்மை ஓரங்கட்டி விடுவார்கள். நான் இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதன் காரணம் காலமாற்றத்தையும் தொழில்நுட்ப மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு அதன் வழியே பயணம் செல்வதுதான்

நான் என்றுமே படங்கள் இல்லாமல் இருந்ததில்லை. அதன் ரகசியம் இது தான், எப்போதும் நான் இளைஞர்களுடன் இருப்பேன். பழைய கதையைப் பேசுவது கிடையாது. அவர்களுடன்  இருப்பதால் மனம் இளமையாகப் புதுப்பிக்கப் படுகிறது.

நான் எப்போது முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வதில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன். அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் முதலில் ஒரு புன்னகை செய்வேன். அவரிடம் முதல் பூங்கொத்தை நான் தான் நீட்டுவேன். இது என் இயல்பு. மனிதர்களின் பெரிய சம்பாத்தியம் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு தான். அதில் எனக்குப் பஞ்சமில்லை.

நமது மனம் உடலில் பிரதிபலிக்கும். எனவே மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதுதான் எனது இளமையின் ரகசியம்’’

  • அருள்செல்வன்

இது போன்ற கட்டுரைகள் நிறைந்திருக்கும் ஞானகுரு யாக்கை ஆனி இதழ் படிக்க கீழேயிருக்கும் இணைப்புக்குள் நுழையுங்கள்.

Yaakai June 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *