மருத்துவர்கள்

கர்ப்ப காலத்தில் ரத்தம் கொதிக்கிறதா..?

மருத்துவர் வீ.புகழேந்தி

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதுகாப்பான தாய்மையை உறுதிபடுத்தலாம் என்கிறார் மருத்துவர்.

கர்ப்ப காலத்தில் பொதுவாக 20 வாரங்களுக்குப் பிறகு ரத்தஅழுத்தம் 140/90க்கு அதிகம் இருந்தால் அல்லது சிறுநீரில் புரதத்தின் அளவு 300 மி.கி. அதிகமாக இருந்தால், அதை Pre-eclampsia எனப்படும் கர்ப்பகால ரத்தக்கொதிப்பு என்று சொல்லலாம்.  

இந்தியாவில் 7.1% கருவுற்ற பெண்களின் இறப்பிற்கு, பேறு காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது என்பதில் இருந்தே இந்த நோயின் தீவிரத்தை அறிய முடியும். மகப்பேறு காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு காரணமாக குழந்தைக்கு இள வயதில் ரத்தக்கொதிப்பு, மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றப் பாதிப்பு, இருதயப் பிரச்சனை, ரத்தத்தில் கொழுப்பு, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

கர்ப்பகால ரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இருதய செயலிழப்பு ஏற்படுவதற்கு 4 மடங்கு வாய்ப்பு இருக்கிறது. இதய ரத்தக்குழாய்களில் பாதிப்பும், மூளை பாதிப்பும் ஏற்படும்போது உயிரிழப்பு அபாயமும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு வரும் ரத்தக் கொதிப்பு இத்தனை ஆபத்தான விஷயமாக இருந்தாலும், இதனை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளும், இதனை தடுப்பதற்கான ஆய்வுகளும் இல்லை என்பது வேதனையான விஷயம்.

பொதுவாகவே இந்தியாவில் 25% பிரசவங்கள் ஏதேனும் ஒரு வகையில் சிக்கலாகவே இருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தால் இயற்கை பிரசவத்திற்கு வழியில்லாமல் போகிறது. பேறு காலத்தில் ஏற்படும் தாயின் மரணம் 1000 பிரசவங்களில் 32 என இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆரம்பகட்டத்திலேயே இந்த பிரச்னையக் கண்டறிவதே தீர்வு காண்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும். எனவே அதற்கான அறிகுறிகள் தென்படும்போது அலட்சியம் கூடாது.

பொதுவான அறிகுறிகள்-

முகம், கை, கால்களில் அதிக வீக்கம்,

தாங்க முடியாத தலைவலி,

கண் பார்வை கோளாறுகள்,

மேல் வயிற்று வலி,

மூச்சுத் திணறல் போன்றவை. 2 மற்றும் 3ம் கட்ட கர்ப்ப காலங்களில் தென்படலாம். இதனை ரத்தஅழுத்தம், சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். குறிப்பாக கலர் டாப்லர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை பேறுகால ரத்தக்கொதிப்பு பிரச்சனையை ஆரம்பத்தில் கண்டறிய மிகவும் பயன்படுகிறது. இதன் மூலம் பாதிப்பை மிகவும் துல்லியமாக கண்டறிய முடியும்.  

சென்னையில் 2018 அக்டோபர், டிசம்பர் மாதங்களில் 200 பேருக்கு பிரசவிப்பதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வில் 90 பேருக்கு உயர் ரத்தஅழுத்தம் இருந்தது தெரியவந்துள்ளது.  அவர்களில் 45 விழுக்காடு முதல் பிரசவத்துக்கு வந்தவர்கள். 40 விழுக்காடு குறைந்த சமூக, பொருளாதார வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

சேலம், ரங்கராஜன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2020ல் ஓர் ஆய்வு வெளிவந்தது. அதன்படி 19,383 பேர் கலந்துகொண்ட ஆய்வில் பேறு காலத்தில் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2028 ஆகும். இவர்களில் முதல் பிரசவத்துக்கு வந்தவர்கள் 54 விழுக்காடு. குறிப்பாக 18 முதல் 22 வயது வரையிலான கர்ப்பிணிகளிடம் அதிக பாதிப்பு காணப்பட்டுள்ளது.

கர்ப்ப கால ரத்தக்கொதிப்பின் விளைவாக தாய்மார்களுக்கு ஹீல்ப் சிண்ட்ரோம் HELLP syndrome (Haemolysis,Elevated Liver Enzymes,Low Platelet) பாதிப்பும் இருந்தது. 29 விழுக்காடு குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்திருக்கிறார்கள்.

தற்போது கர்ப்பகால ரத்தக்கொதிப்பு என்பது 8 முதல் 10 விழுக்காடாக இருக்கிறது. இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 3 விழுக்காடு அளவுக்குக் குறைக்கவும், பிரசவிக்கும் குழந்தையின் எடை குறைபாட்டை 25 – 30 விழுக்காட்டில் இருந்து 10% விழுக்காடாக குறைக்கவும் அரசு திட்டம் தீட்டியிருக்கிறது. இது குறித்து மக்களுக்கு  போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம்.

அதேபோல், தமிழகத்தில் 40% கருவுற்ற தாய்மார்களுக்கு மட்டுமே தேவையான அளவு எடை அதிகரிக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு தேவையான அளவு இல்லாமல் போவதும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.

பொதுவாக கருவுற்ற தாய்மார்கள் குழந்தை பிறப்பிற்கு முன் 9 முதல் 10 கிலோ வரையிலும் எடை அதிகரிக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கர்ப்ப காலகட்டங்களில் முறையே 11, 10, 11 கிராம்/100 மில்லி இரத்தம் என இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த அளவுக்கு ஹீமோகுளோபின் இல்லை என்றால் தாய் மூலம் வயிற்றில் இருக்குக் கருவுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காது. எனவே 18 முதல் 20ம் வாரத்திற்குள் தாய் 2 கிலோ எடை அதிகரிப்பதுடன் 11 கிராம் எனும் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டமான 26 – 28ம் வாரத்தில் 3 கிலோ எடை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவு 10 கிராமாக இருக்க வேண்டும். கடைசி 37 முதல் 40 வாரத்தில் 4 கிலோ அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவு 11 கிராம்/100 மில்லி ரத்தம் என இருந்தால் மட்டுமே வழக்கமான வளர்ச்சியை கருவுற்ற தாய்மார்கள் எட்ட வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் 40 விழுக்காடு கருவுற்ற தாய்மார்கள் மட்டுமே மேற்சொன்ன அளவுக்கு உள்ளனர். குழந்தையைப் பொறுத்தமட்டில் முதல் 100 நாள் வளர்ச்சி மிக முக்கியமானது என்பதால், கருவுற்ற பெண்கள் மேற்சொன்ன வளர்ச்சியை எட்டவில்லையெனில், குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்பு ஏற்படுத்துவது முக்கியம். அப்போது தான் கருவுற்ற பெண்களின் வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த விழிப்புணர்வு கொண்டுவருவதில் சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக கிராம சுகாதார செவிலியர்கள், பெண் தன்னார்வ சுகாதார ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்க அரசு திட்டமிட்டுள்ளது ஒரு நல்ல தகவல்.

போதிய அளவு ஹீமோகுளோபின் இல்லாத கருவுற்ற பெண்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி தேவையான மருத்துவ உதவி வழங்க வேண்டும். இன்றைய நிலையில் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்க, இரும்புச்சத்து + போலிக் அமில மாத்திரைகளை தவிர்த்து வேறு வசதிகள் இல்லை.

தமிழகத்தில் மூன்றில் ஒருவருக்கு இரும்புச்சத்து குறைப்பாடு காரணமாக ரத்தசோகை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரத்தசோகைக்கு சமூக, பொருளாதாரக் காரணங்கள் முக்கியமாக இருக்கிறது. ஆகவே, இதனை அரசு மருத்துவமனைகள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

தொடர்புக்கு: 8870578769

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *