பிரபலங்கள்

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு வேதனையா?

ஸ்டாலின் உதவி செய்யுங்க.

கவிஞராகவும் தி.மு.க.வின் தீவிர அனுதாபியுமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ஒரு பதிவு படிப்பவர்கள் மனதை நொறுக்கிப் போடுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

’’நான் நிம்மதியாக ஓரிரவு தூங்கி எழுந்து பல மாதங்களாகிறது. காலையிலேயே கடும் மன அழுத்தம் தொடங்கிவிடுகிறது. இப்போது இருக்கும் வீட்டை காலி செய்து வேறு இடம் செல்ல வேண்டிய கடும் நிர்ப்பந்தம். வீடு, அலுவலகம், என ஒரு மலையை சுமந்து செல்லவேண்டும். வீடு தேடி தேடி களைத்துவிட்டேன். அரசியல்வாதி, முஸ்லீம் என்ற முத்திரைகளைக் கண்டவுடன் கதவுகள் அடைக்கப்படுகின்றன. அதையும் மீறிபோனால் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவர் பயன்படுத்தவே முடியாத வீடுகள்.

கொஞ்சம் பெரிய வீடாக இருந்தால் வாடகை ஒரு இலட்சம் ரூபாயில் ஆரம்பிக்கிறார்கள். கொரோனாவுக்கு பின் பதிப்புத்துறை அடைந்திரும் வீழ்ச்சி மிக மோசமானது. மீண்டு வரவே முடியவில்லை. பொருள் ஈட்டல் என்பது ஒரு கனவு போலாகிவிட்டது.

நான் நேர் வழியிலேயே மிக மெதுவாக நடப்பவன். குறுக்கு வழிகளைப்பற்றி யோசிக்கக்கூட இயன்றதில்லை. எதில் எல்லாம் ஒரு பைசா பயன் இல்லையோ அந்த வேலைகளை தேடித் தேடிச் செய்வேன். லீசுக்கு ஒரு தனி வீடு கிடைக்குமா என பல்வேறு புரோக்கர்கள் வழியே தேடாத நாள் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இந்த ஊரைவிட்டே போய்விடலாமா என்றுகூட தோன்றியிருக்கிறது.

இந்த ஊருக்கு வந்து 25 வருடங்களாகப் போகிறது. என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த இடங்கள் எல்லாமே நானாகப் போராடி உருவாக்கிக்கொண்டவை. பணம், உடல் ஆரோக்கியம், குடும்ப ஆதரவு என எந்த ‘ ப்ரிவிலேஜ்’ ம் இல்லாமல் எவ்வளவோ வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் நடுவில் உருவாக்கிக்கொண்ட இடங்கள் அவை. சமூகத்தில், இலக்கியத்தில் என்ன இடத்தைப் பெற்றாலும் இருப்பதற்கு நிரந்தரமாக ஒரு வாழ்விடத்தை உருவாக்குக்கொள்ள முடியவில்லை என்பது என்னைப்பற்றி ஆழ்ந்த கசப்பை உண்டாக்குகிறது.

ஒரு திட்டமும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். எனக்குக் கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கிறேன். அதுதான் என் இயல்பு. அதுதான் என் வாழ்வு. கலைஞர் சொன்னதுபோல ‘ நம்மால் பயன் பெற்றவர்கள் அதை நினைவில் வைத்திருப்பார்கள் என ஒருபோதும் நாம் எதிர்பார்க்கக்கூடாது’என்பதை வாழ்க்கை திரும்பத் திரும்ப கற்பிக்கிறது.

யாருமில்லை என்பதுதான் உண்மையா? நான் தமிழில் 12 ஆயிரம் கவிதைகள் எழுதிய கவிஞன் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்கிறேன். கம்பனுக்கும் பாரதிக்கும் என்ன நடந்ததோ அதுதானே எனக்கும் நடக்கும்? நான் சீரியலுக்கு வசனம் எழுதப் போயிருக்கலாம். சினிமாவிற்கு பாட்டெழுத போயிருக்கலாம்.

ஆனால் மனித வாழ்வின் சொல்லப்படாத தருணங்களை ஆயிரம் ஆயிரம் கவிதைகளாக எழுதினேன். பொது வாழ்வுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். இவ்வளவுக்கும் பிறகு இந்த பாழான உடலை வைத்துக்கொண்டு வீடு தேடி அலைவது இந்தக் காலைப் பொழுதில் கண்ணில் நீர் மல்கச் செய்கிறது. என் பிள்ளைகள் கண்களில் நான் பயனற்ற மனிதனாக தோன்றிவிடுவேனோ என அச்சமாக இருக்கிறது. அவர்களுக்கு நான் ஒரு ஹீரோ. அந்த பிம்பம் எக்கணமும் நொறுங்கிப் போகலாம். என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லை.

இந்த மன நெருக்கடியில் என் உடல் ஆரோக்கியத்தை வேகமாக இழந்துகொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் ஆழமாக உணர முடிகிறது. எதற்குமே மதிப்பற்ற ஒரு காலம்’’ என்று எழுதியிருக்கிறார்.

யார் யாருக்கோ உதவி செய்யும் ஸ்டாலின் இவருக்கும் ஒரு வீடு கொடுக்கலாம். சீக்கிரம் செய்யுங்க ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *