மகிழ்ச்சி

ஆசையை ஆரம்ப கட்டத்தில் அழியுங்கள்

இல்லையேல் விழுங்கிவிடும்

நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி திடீரென தெருவின் எல்லை வரை ஓடும், கொஞ்சநேரத்தில் போன வழியே திரும்பவரும். சில நிமிடங்கள் அமைதியாக படுத்திருக்கும். பின் மீண்டும் எழுந்து ஏதேனும் ஒரு பக்கம் ஓடுவதும், திரும்புவதும் குலைப்பதுமாக இருக்கும். இதைத்தான், நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை என்பார்கள். எந்தக் காரணமும் இன்றி நாய் மட்டும் ஓடவில்லை, மனிதனும்தான். ஏன், எதற்காக என்று யோசிக்காமல் செய்யும் காரியங்களால்தான் பெரும்பாலான மனிதர்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள்.

பொதுவாக மனிதனின் மூளையில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான சிந்தனைகள் தோன்றுவது வழக்கம். அதுவும் வேலை இல்லாமல் சும்மா இருப்பவனைப்பற்றி கேட்கவே வேண்டாம். எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பான். அப்படி மூளையில் தோன்றும் சிந்தனைகளை எல்லாம் புறங்கையால் தள்ளிவிடுவதுதான் புத்திசாலி மனிதனின் செயல். தூக்கத்தில் வரும் கனவு பற்றி அதிகம் சிந்திக்காமல் காலையில் தூக்கிப்போடுவது போலவே, தேவையற்ற சிந்தனைகளையும் தூக்கிப்போடத் தெரிய வேண்டும். அதுவும் ஆரம்பகட்டத்திலேயே நிறுத்தவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். பொதுவாக தங்கள் சொந்த வாழ்வுக்குத் தேவையற்ற விஷயம் குறித்து ஆலோசிப்பதும், சிந்திப்பதும் சிக்கலையே தரக்கூடியது. தேவையற்ற விஷயங்களை ஆரம்பகட்டத்தில் ஒதுக்கவும் தள்ளவும் தெரியாதவர்களே, வாழ்வில் தேவையற்ற சுமைகளை சுமந்து கஷ்டப்படுகிறார்கள்.

தேவராஜ் கிராமத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொண்டு இருந்தான். தினமும் ஒரு முறை நகரத்திற்குச் சென்று கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவான். கிராமம் என்பதால் கடையில் அப்படியொன்றும் கூட்டம் இருக்காது. ஆட்கள் வருவதைப் பொறுத்து தேவராஜோ, அவனது மனைவி சரோஜாவோ சாமான் எடுத்துக்கொடுப்பார்கள். குறைவான லாபம் என்றாலும் மனைவி, பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்ந்துவந்தான்.

பக்கத்து கிராமத்தில் இருந்து தேவராஜின் தூரத்து உறவினர் ராகவன் ஒரு மாடு மற்றும் கன்றுக்குட்டியுடன் வந்தான். மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக நகரத்தில் சில வாரம் தங்கவேண்டியுள்ளது. அதுவரை இந்த மாட்டை உன்னால் பார்த்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டான். தினமும் பத்து லிட்டர் வரை பால் கொடுக்கும் என்பதால், இதை வைத்திருந்தால் உனக்கு லாபமாக இருக்கும் என்று சொன்னான். மாடு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தேவராஜ் சொன்னான். ஆனால் அவன் மனைவி சரோஜாவுக்கு மாடு, கன்றை பார்த்ததும் ஆசை வந்தது. வீட்டுக்கு லட்சுமி வந்துவிட்டதாக நினைத்தாள். 

ஏன் முடியாதுன்னு சொல்றீங்க. வீட்டுக்குப்பின்னாலே புல்லுக விளைஞ்சு கிடக்கு. தேவைன்னா மட்டும் புண்ணாக்கு வாங்கிப்போடலாம். கோனார் பால் கறந்து கொடுப்பார். அதை வித்தா செலவுக்கு சரியாப்போகும். அண்ணனுக்கு உதவி செஞ்சதா இருக்கும், நமக்கும் பொழுது போகும். மாடு இங்கேயே இருக்கட்டும் என்று அழுத்தமாக சொன்னாள்.

விவரம் தெரியாம வளர்க்கமுடியாது என்று தேவராஜ் சொல்வதற்கு முன்னரே, வீட்டுக்குப் பின்புறம் மாட்டை கட்டிவிட்டான் ராகவன். இந்த மாடு வந்தபிறகுதான் எனக்கு நிறைய பணம் சேர்ந்திச்சு. உங்களுக்கு சேரும் பாருங்க என்று சொன்னான். மனதோரம் தேவராஜுக்கும் கொஞ்சம் ஆசை வரவே, சம்மதம் தெரிவித்தான். 

முதல் நாள் சரோஜாவும் பிள்ளைகளும் மாட்டை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள். பாலை அக்கம்பக்கம் இலவசமாக கொடுத்தார்கள். சாணம், கோமியம் வாடையை சகித்துக்கொள்ள முடியாமல் பிள்ளைகள் அடுத்தநாள் பக்கத்தில் வரவில்லை. தினம் ஒரு பெரிய புல்லுக்கட்டை தின்றுவிட்டு, அடுத்ததை கேட்டது மாடு. கன்றுக்குட்டியின் அட்டகாசம் அதைவிட பெரியதாக இருந்தது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். தேவராஜ் பட்டணம் போய்விட்டான். கடைகளில் ஆட்கள் நிற்கும்போது மாடு கத்தி கூப்பாடு போட்டது. மாட்டை கவனித்தால் கடைகளில் ஆட்கள் நின்றார்கள். இரண்டையும் கவனித்துக்கொண்டு சமையல் செய்ய முடியாமல் போனது.

அடுத்த நாள் பால் கறப்பதற்கு கோனார் வரவில்லை. பால் விற்பனை செய்வதிலும் பிரச்னை வந்தது. மாடு வந்ததில் இருந்து தினம் ஒரு பிரச்னை வரவே கடையை கவனிக்க முடியாமல் தேவராஜும், வீட்டை கவனிக்க முடியாமல் சரோஜாவும் திணறினார்கள். இரண்டு வாரங்கள் ஆகியும் ராகவன் வரவில்லை. போன் செய்து பார்த்தும் பதில் இல்லை. மாட்டை வைத்து தேவராஜ் குடும்பத்தில் சண்டை வரத்தொடங்கியது. இனி நான் மாட்டை கவனிக்க மாட்டேன் என்று வீம்பு செய்தாள் சரோஜா. அவளை சமாளிக்க சிரமப்பட்ட நேரத்தில் மாடு திடீரென சுணங்கியது. அதற்கு என்ன செய்கிறது என்று கண்டுபிடிப்பதற்குள் வாயில் இருந்து நீர் கொட்டத் தொடங்கியது. ஊரார் சொன்ன மாதிரி ஏதேதோ இலைகளை எல்லாம் அரைத்துக்கொடுத்தான். எதுவும் சரியாகவில்லை.

நகரத்திற்கு சென்று மாட்டு டாக்டரை தேடிக் கண்டுபிடித்து கூட்டி வருவதற்குள் மாடு செத்துப்போனது. கன்றுக்குட்டியை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரம் ராகவன் வந்தான். மாடு செத்துப்போன தகவல் தெரிந்ததும் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தான். அதற்கான தொகையை கொடுத்தே தீரவேண்டும் என்று சொன்னான். வேறு வழியில்லாமல் தன்னுடைய காதில் இருந்த தோட்டையும் மூக்குத்தியையும் கழட்டிக்கொடுத்தாள் சரோஜா. மாடும் கன்றும் போனபிறகு தங்கள் வீட்டுக்குத் தனி அழகும் சந்தோஷமும் திரும்பியதை தம்பதியர் உணர்ந்தார்கள்.

தேவராஜ் போன்று ஆழம் தெரியாமல் காலை விடும் மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் நாலைந்து மாதங்கள் வேலை பார்த்தவுடனே, தொழில் கற்றுக்கொண்டேன் என்று தொழில் தொடங்கி நஷ்டப்படுகிறார்கள். ஆசைக்கும் நிம்மதிக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிந்துகொண்டவன் மட்டுமே சந்தோஷமாக வாழமுடியும்.

அப்படியென்றால் எந்த சிந்தனையையும் செயல்படுத்தக்கூடாதா?

உனக்கு கார் தேவைப்படுகிறது என்று யோசித்தால்… வாங்கலாம். ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் கார் வாங்கிவிட்டான் என்பதற்காக, தானும் கார் வாங்க ஆசைப்படுவது நிச்சயம் துன்பத்தையே தரும். அவனுக்கு கார் தேவையாக இருக்கிறது, எனக்கு இப்போது தேவை இல்லை என்று உன் சிந்தனையை உடனடியாக தடை செய்துவிட்டால் நிச்சயம் நிம்மதி கிடைக்கும். இதுபோன்று உன் மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களையும் செயல்படுத்த நினைக்கும் முன்பு, மீண்டும் மீண்டும் யோசித்துப்பார். தேவையற்ற சிந்தனை என்றால் ஆரம்பத்திலேயே தூக்கியெறி.

அது எப்படி ஆரம்பத்திலேயே கிள்ளிப்போடுவது?

உன்னுடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறது, எப்படி போகவேண்டும் என்பதில் தீர்மானமாக இரு. உன்னை திசை திருப்புவதற்காக தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் கூவிக்கூவி அழைக்கலாம். 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட செல்போன், ஆடி மாத தள்ளுபடியாக 15 ஆயிரத்துக்கு கிடைக்கிறது என்று ஆசை காட்டுவார்கள். உன்னிடம் இருக்கும் செல்போன் நன்றாக வேலை செய்யும்வரையிலும் எந்த ஆசை வலையிலும் சிக்குவதில்லை என்பதில் உறுதியாக இரு. அதை வாங்கு, இதை வாங்கு என்று போடும் கூப்பாடுகளை காதில் போட்டுக்கொள்ளாமல் நடை போட பழகு.

ஆனால், புதிது புதிதாக சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கிறதே..?

நிச்சயமாக மரணத்தில் கடைசி நொடி வரையிலும் ஆசையினால் விளையும் சிந்தனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். வெட்டவெட்ட முளைக்கும் களைகள் போல உன் மனதில் தேவையற்ற சிந்தனைகள் வந்துகொண்டுதான் இருக்கும். முளைப்பது களைகளின் தன்மை என்றால், அவற்றை உடனடியாக கிள்ளிப்போடுவது உன்னுடைய தன்மையாக இருத்தல் வேண்டும். ஆரம்பத்திலேயே கிள்ளவில்லை என்றால் வேர்விட்டு, மரமாகி உன்னையே அழித்துவிடும்.

மனைவி அல்லது மேலதிகாரி நம் மீது அவர்களது சிந்தனைகளை திணித்தால்..?

பதவி உயர்வு என்ற ஆயுதத்தை மேலதிகாரி எடுக்கலாம். எதிர்காலம் நிம்மதியாக இருக்கும் என்று உன் மனைவி தூண்ட்லாம். ஆனால், உன்னுடைய வாழ்க்கை உன் விருப்பம் என்பதால் எவர் சொன்னாலும் ஏற்காதே. பிறர் சொன்னதற்காக வாழ நினைத்தால் கழுதை போல் கவலைகளை சுமந்துகொண்டே திரி.

சிந்திப்பதை நிறுத்துவதற்கு வழியே இல்லையா?

மூச்சு நிற்கும்போதுதான் சிந்தனை நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *