ஞானகுரு

தியானத்தால் காற்றில் மிதக்க முடியாது

ஞானகுரு அத்தியாயம் – 27

தியானம் என்பது ஒன்றுமில்லை, எதையும் முழுமையாக அனுபவிப்பது. அதற்கு தூக்கமே போதும் என்பதை புரிந்துகொள்ளாமல், மேலும் மேலும் தியானம் பற்றியே பேசினார் நரேந்திரன் எனும் சாமியார் வேடத்தில் இருக்கும் பிச்சைக்காரர்,

‘’அப்படியென்றால், தியானத்தில் நிறைய அனுபவமோ..?’’ என்றதும் மளமளவென கொட்டத் தொடங்கினார்.

’’நிறைய செஞ்சு பார்த்தேன் சாமி, ஒரு ஆசிரமத்துல ஐம்புலனை அடக்கி தியானத்தின் மூலம் மனசை அடக்கச் சொன்னாங்க… என்னாலே மனசை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனசுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருந்திச்சு…’’ என்று வருத்தப்பட்டார்.

’’மனம் எப்போதுமே வெறுமையாக இருக்காது. மனதை வெறுமையாக வைத்துக் கொள்ள எத்தனை முயற்சி செய்தாலும், ஏதாவது ஒரு எண்ணம் ஓடிக் கொண்டுதான் இருக்கும். மனதைக் கட்டுப்படுத்தியதாக சொல்பவர்கள், பொய் சொல்லிகள். மனதைக் கட்டுப்படுத்த இயலாது, திசை திருப்பத்தான் முடியும் என்பதை திருமூலரே சொல்லி இருக்கிறார், கேள்…’’ என்றபடி பாடலை ஒப்பித்தேன்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே…’’

திகைத்துப் போய் என்னைப் பார்த்த நரேந்திரச்சாமி, ‘‘அவ்வளவு பெரிய ஞான சமாசாரமெல்லாம் எனக்குத் தெரியாது சாமி… ஆனா என்கூட இருந்தவங்க எல்லாம் தியானம் மூலம் அடுத்த நிலைக்குப் போயிட்டாங்க, அதாவது அவங்க தியானம் செய்யும் போது, உடம்பு ஒரு இஞ்ச்சில இருந்து, அரையடி வரைக்கும் மேலே போகுமாம்..’’

’’நீங்க பார்த்தீங்களா?’’

’’இல்லை.. தியானம் செய்யும்போது எல்லோருமே கண்களை மூடிக்கணும், குருஜிதான் அதைப் பார்த்துச் சொல்வார்!’’ என்றார்.

’’மனம் வெறுமையானால், மனதைக் கட்டுப்படுத்தினால் உடல் மேலே எழும்பும் என்பது கடைந்தெடுத்த பொய். நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை நரேந்திரன்…’’

’’எனக்கு ஆறுதல் சொல்றதுக்காக இப்படிச் சொல்லாதீங்க சாமி… தியானம் செஞ்சு மனசைக் கட்டுப்படுத்த முடியலைன்னுதான் அங்கேயிருந்து ஓடிவந்துட்டேன். வேற ஒரு ஆசிரமத்திற்குப் போனேன், அங்கே மந்திரத்தை மனப்பாடம் செய்யச் சொன்னாங்க. என் மரமண்டைக்கு அதுவும் ஏறலை. அப்புறம் தவம் செய்யலாம்னு காட்டுக்குள்ளே போய் உட்கார்ந்தேன். அரை நாள்கூட பசியை அடக்க முடியலை,  நாலு மணி நேரம் உடம்பை ஒரே நிலையில வைச்சிருக்க முடியலை. எனக்கே என்மேல கோபமாயிடுச்சு. இனிமேல் கடவுளைப் பத்தி பேச அருகதை கிடையாதுன்னுதான் கோயிலுக்கு உள்ளே போகாம வாசல்லயே உட்கார்ந்தேன். வெறுப்புல சும்மா உட்கார்ந்திருந்தவனை பிச்சைக்காரனா மாத்திட்டாங்க. நானும் அது எனக்கான தண்டனையா ஏத்துக்கிட்டேன். ஆனா, இப்போ எதுவுமே செய்யாம வாழ்க்கை ரொம்பவும் சொகுசாயிடுச்சு.  இந்த காவி உடையை பார்த்துத்தான் காசு போடுறாங்க அதனால இதை கழட்டிப் போடவும் மனசு வரல, சந்தோஷமா வாழவும் முடியலை…’’ என்றார்.

பக்தி சினிமாக்களும், புராணங்களும் இவரை அதிகம் பாதித்திருப்பது புரிந்தது. ஒரு துறவியாக மாறினால் மந்திரவாதியைப் போன்று பறக்கும்கம்பளம், அட்சயப் பாத்திரம், உரு மாற்றும் சக்தி என்று எத்தனையோ சக்திகள் கிடைக்கும் என்று குழந்தைத்தனமாக நம்பியிருக்கிறார்.  யோகா, தியானம், தவம் போன்றவைகளுக்கு இப்படிப்பட்ட சக்திகள் இல்லை என்பதை எப்படி புரியவைப்பது என்று சிந்தித்தபடி, தயிர்சாத பொட்டலத்தைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினேன்.

தயிர் சாத பொட்டலம் கட்டியிருந்த கயிறை எடுத்து சீராக உருவியபடி, ‘‘சாமி… கீழே போய் தண்ணீர் கொண்டுவரவா…?’’ என்று கேட்டார்.

அவர் பொட்டலக்கயிறை நீவிய விதம் ஒரு கைதேர்ந்த தொழிலாளியைப் போன்று இருக்கவே, ‘‘உங்களுக்கு பூ கட்டத் தெரியும்தானே…’’ என்று கேள்வியை வீசிவிட்டு அவரைப் பார்க்காமல் குனிந்தபடி சாப்பிட்டேன்.

’’சாமி… அதுதான் எங்க குலத்தொழில். நான் எதுவுமே சொல்லாம என்னயப் பத்திச் சொல்லிட்டீங்க. நீங்கதான் உண்மையான ஞானி…’’ என்று புளகாங்கிதமடைந்து கையெடுத்துக் கும்பிட்டார். அவரது அப்பாவித்தனத்தை மாற்ற நினைத்தேன்.

’’நான் இங்கு வந்ததே உங்களுக்கு தெளிவு உண்டாக்கத்தான் நரேந்திரன். இறைவனை கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்ற மூன்று வழிகள் மூலம் அடையலாம். கர்மயோகம், ஞானயோகம் போன்றவை மூலம் இறைவனை அடைவதற்கு பிறவியிலேயே அதற்கான அமைப்பு இருக்கவேண்டும். அதனால் நீங்கள் பக்தியோகம் மூலமாக இறைவனை அடைய வேண்டியவர் என்பதை எடுத்துச் சொல்லவே வந்திருக்கிறேன். பிச்சை எடுப்பதை விடுத்து, பூ கட்டும் தொழிலில் இறங்குங்கள். நீங்கள் கட்டும் பூக்களை எவர் வாங்கினாலும், அது அப்படியே இறைவன் பாதத்தில் சேர்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தோடு நீங்கள் கழிக்கும் ஒவ்வொரு கணமும் இறைவனை நெருங்குவதாகவே நினைத்துக் கொள்ளுங்கள், இதுவே உங்கள் வாழ்விற்கு முழுமை தரும்.’’ என்றேன்.

’’சாமி ரொம்ப நாளா எனக்கும் இப்படி ஒரு நினைப்பு இருந்துச்சு. ஆனா இந்த சட்டையைக் கழட்டுனா சாமி குத்தமாயிடுமோன்னு பயந்துதான் இப்படியே இருக்கேன். எனக்கு கடவுளே நேரில் வந்து வழி காட்டுனமாதிரி சொல்லிட்டீங்க, நீங்க சொன்னபடியே வாழ்றேன்…’’ என்று நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தவரை எழுப்பி புன்னகையுடன் வழியனுப்பி வைத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *