ஞானகுரு

விழித்தபடி தூங்கும் வெட்டி வேலையே தியானம்..!

ஞானகுரு அத்தியாயம் – 26

மதுரையில் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் ஒரு ஆட்டோக்காரர், ‘‘திருப்பரங்குன்றம் போகணுமா..?’’ என்று கேட்டார்.  இலக்கற்ற பயணிக்கு எது தன் இடம்? ஒன்றும் பேசாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.

குன்றம் பரபரப்பாக இருந்தது. ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், காவிஉடை சாமியார்கள் என ஏராளமான நபர்கள் மலை நெடுகிலும் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். மலையில் ஏறி ஒரு பாறையின் மீது உடலை சாய்த்தேன்.

இதமான அதிகாலை வெயில், உடலை வருடிய காற்று… மூளையின் உத்தரவு இல்லாமலே கண்கள் செருகின. எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தேனோ… யாரோ ஒருவர் என் அருகே நிற்பது போல் உள்ளுணர்வு சொல்ல, மெதுவாக கண்களைத் திறந்தேன். சூரியன் தலைக்கு நேராக வந்திருந்தாலும், மேகங்கள் மறைத்துக் கொண்டிருந்ததால் வெயில் உறைக்கவில்லை.

என் வயதையத்த ஒரு காவியுடை சாமியார், கையில் தயிர்சாத பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார். நான் கண்களைத் திறப்பதைப் பார்த்ததும், ‘‘நீங்க காலையில மலை மேலே ஏறும்போதே பார்த்தேன், எந்த சிந்தனையும் இல்லாம ஒரு யோகியைப் போல போய்க்கிட்டே இருந்தீங்க.  சாப்பிட கீழே இறங்கலையேன்னுதான் தயிர் சாதத்தோட வந்தேன். சாப்பிடுங்க சாமி…’’ வாய் அன்பைப் பொழிய, கை பொட்டலத்தை நீட்டியது.

பொட்டலத்தைப் பார்த்ததும் வயிறு பசித்தது, ஆனாலும் புன்னகையுடன், ‘’எனக்காக நீங்கள் ஏன் சிரமம் எடுத்துக் கொண்டீர்கள்… நீங்கள் சாப்பிட்டதாகத் தெரியவில்லையே…’’ என்றேன்.

’’தினமும் திங்கிறதுதானே சுவாமி! சாப்பாடு, காசு பத்தி எந்த கவலையும் இல்லாம கைவீசி நீங்க நடந்ததைப் பார்த்ததும், எனக்கு ஏதோ புதையலைக் கண்டுபிடிச்ச மாதிரி மனசு நிறைஞ்சுபோச்சு… அதான் நான் சாப்பிடாம உங்களுக்குக் கொண்டுவந்தேன்…’’ என்ற பொட்டல சாமியாருக்கு என் மேல் குரு பக்தி வந்திருப்பது புரிந்தது. அவர் இக்கோலம் காண என்ன காரணம் என்று அறிய ஆசை வந்தது.

’’ஏன் இப்படி உங்களையே வருத்திக் கொண்டீர்கள்… உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’ என்று கேட்டேன்.

’’அட, சொல்றதுக்கு என்ன சாமி இருக்கு. பேரு சுரேந்திரன். சின்ன வயசிலேயே சாமி, கோயில்னு ஆன்மிகத்துல ரொம்பவும் ஈடுபாடு. வீட்ல கல்யாண ஏற்பாடு நடந்ததும், ஊரைவிட்டு ஓடிவந்துட்டேன். துறவியாக ஆசைப்பட்டு நாலைஞ்சு ஆசிரமத்தில இருந்தேன், ஆனா இந்த மனக்குரங்கு ஒரு நிலையில நின்னாத்தானே… அலைபாய்ந்துகிட்டே இருக்கே! சுருக்கமா சொல்றதுனா, சாமியாராகும் முயற்சியில தோத்து பிச்சைக்காரனா மாறிட்டேன். எந்த கல்யாணத்துக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி வந்தேனோ, இப்ப அதுவும் அர்த்தமில்லாமப்போச்சு. இங்கே ஒருத்தியை சேர்த்துக்கிட்டேன். இப்போ ஒரு பிள்ளையுமாகிப் போச்சு…’’ என்றார் சலிப்புடன்.

’’இல்லற யோகம் என்பதே அற்புதமான வரம்தானே… இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?’’ என்றேன்.

’’இந்த காவி உடையைப் பார்த்ததுமே சில்லரையை அள்ளித்தாராங்க… நிறைய சாப்பாடும் கிடைக்குது. ஆனா, எல்லாத்தையும் ஏமாத்திப் பிழைக்கிறோம்ன்னு ஒரு உறுத்தல் நெஞ்சுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்குது…’’ என்றவர் திடீரென, ‘‘சாமி.. உங்களைப் பார்த்தா பெரிய ஞானி மாதிரி இருக்கு. நீங்க யோகா செய்வீங்களா…? எத்தனைநேரம் தியானத்துல உட்கார்ந்திருப்பீங்க?’’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

’’தியானம், யோகா போன்றவை நாம் வாழ்வில் அன்றாடம் கடைபிடிப்பவைதான். அதனை தனியே செய்யவேண்டியது இல்லை…சாப்பிடுவதில் தொடங்கி விளையாடுவது வரை, எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி செய்தால் அதனை யோகா எனலாம். தூக்கம்தான் அற்புதங்கள் நிறைந்த மிகச்சிறந்த தியானம். இன்னொரு வகையில் சொல்வது என்றால், தியானம் என்பது வேலையில்லாதவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போதும் தூங்கும் செயல் என்பதுதவிர வேறு ஒன்றுமில்லை…’’ என்றேன். ஆனால், நரேந்திரன் என் பதிலை புரிந்துகொள்ளாமல் மேலும் கேள்விகள் கேட்பதிலே ஆர்வமாக இருந்தார்.

’’அதில்லை சாமி… முந்தியெல்லாம் முனிவர்கள் எட்டாயிரம் வருசம், ஐம்பதாயிரம் வருசம்னு தியானம் செய்வாங்களாம். அப்பத்தான் கடவுள் வந்து வரம் கொடுப்பாராம். அதுபோல நீங்களும் தியானம் செஞ்சிருக்கீங்களா?’’ என்று குழந்தைத்தனமாகக் கேட்டதில் இருந்தே, அவர் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்பது புரிந்தது.

’’நூறு வயது வரை மனிதன் வாழ்வதே அரிது என்பது தெரியாதா?’’ ஒருவேளை ஐம்பதாயிரம் வருடங்கள் உயிரோடு இருந்து தவம் செய்யமுடியும் என்றால் அதுவே வரம்தானே.. அதைவிட வேறுவரம் வேண்டுமா? நீங்களும் இந்த முயற்சியில் இறங்கினீர்கள் போலிருக்கிறதே…’’ என்று கேட்டதும் மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *