எஸ்.கே.முருகன்

மருத்துவரை மாற்றாதீர்கள், மருந்தை மாற்றுங்கள்

ஆசிரியர் பக்கம் எஸ்.கே.முருகன்

காலையில் எழுந்தவுடன் அச்சூ அச்சூ என்று நிறைய தும்மல் வருகின்றன. அதன் பிறகு எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இதற்காக ஆறு மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். குணம் தெரியவே இல்லை. வேறு ஏதாவது ஒரு நல்ல மருத்துவரை பரிந்துரை செய்யுங்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார்.

இந்த நண்பர் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படி புதுப்புது மருத்துவர்களைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த டாக்டர் கொடுத்த மருந்து சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகியும் முன்னேற்றம் இல்லை, அவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டால் உறக்கம் உறக்கமாக வருகிறது, அவர் தந்த மாத்திரையினால் பக்கவிளைவுகள் வருகின்றன என்றெல்லாம் ஏதேனும் காரணம் காட்டி வேறு ஒரு மருத்துவரிடம் போகிறார்கள்.

இந்த விஷயத்தில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, மருந்து என்றாலே அது ஏதேனும் ஒரு விளைவு உருவாக்கவே செய்யும். அது நல்ல விளைவு அல்லது பக்கவிளைவாக இருக்கலாம். எது நடந்தாலும் அந்த மருந்து வேலை செய்வதாகவே அர்த்தம்.

சில மருந்துகள் பக்கவிளைவு தன்மை கொண்டவை என்றாலும் மருத்துவர்கள் அதனை அனைவருக்கும் விவரிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலான நபர்களுக்கு அது பக்கவிளைவு தருவதாக இருக்காது. எனவே, மருந்து பயன் அளிக்கவில்லை என்றாலும், பக்கவிளைவு தருகிறது என்றாலும் அதே மருத்துவரை சந்தித்து விளக்குங்கள். மேலும் ஒரு வாரம் கழித்து சந்திக்கச் சொன்னால், நம்பிக்கையுடன்  மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் சில மருந்துகள் பலன் வெளியே தெரிவதற்கு தாமதம் ஆகலாம்.

மீண்டும் மீண்டும் ஒரே மருத்துவரிடம் செல்லுங்கள். நீங்கள் மருத்துவர் மீது முழு நம்பிக்கை வைக்கும்போது, அவரும் உங்கள் உடல் நலனுக்கான பொறுப்பை முழுமையாக எடுத்துக்கொள்வார். சில மருத்துவர்கள் நீங்கள் சொல்வதை முழுமையாகக் கேட்க முடியாத அளவுக்கு வேலைப்பளுவில் இருக்கலாம்.

ஆனாலும், நீங்கள் மருத்துவர் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள். இதுவே, நோயை விரட்டுவதற்கான நம்பிக்கை வழி.