மருத்துவர்கள்

கோவிஷீல்டு போட்டவர்கள் கனிவான கவனத்திற்கு…

  • இதயவியல் நிபுணர் டாக்டர் ஜெயராஜா

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பக்கவிளைவுகள் இருப்பதை அதனை தயாரித்த நிறுவனமே ஒப்புக்கொண்டு, தயாரிப்பை நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த ஊசியை ஒன்றுக்கு இரண்டு முறை உடலில் செலுத்திக் கொண்ட பொதுமக்களிடம் கடுமையான பீதி நிலவுகிறது. இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல தகவல் சொல்கிறார் டாக்டர் ஜெயராஜா.

சென்னை, சாலிகிராமம் சூரியா மருத்துவமனையில் இதயவியல் நிபுணராக நாற்பதாண்டு கால அனுபவம் உள்ளவர் டாக்டர் ஜெயராஜா.

”கோவிஷீல்டு என்கிற கோவிட் – 19 தடுப்பு மருந்தை இங்கிலாந்தில் உள்ள அஸ்ட்ரா ஜெனிகா கம்பெனியும் இங்கிலாந்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கின.

கோவிட் 19 என்ற வைரஸ் பரவி உயிரிழப்பு அச்சம் நிலவிய அவசரகாலப் பரபரப்பில் அதை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. நமது நாட்டில் கோவிஷீல்டு என்ற பெயரிலும் மற்ற உலக நாடுகளில் வேக்ஸெவ்ரியா (Vaxzevria)  என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களுக்குத் தடுப்பு மருந்தாகச் செலுத்தப்பட்டது. இது அவசர காலத்தில் உருவாக்கிய வேக்சின் என்பதால் நிறைய மனிதர்களிடம் அதனை பயன்படுத்திச் சோதனை செய்வதற்குப் போதிய அவகாசம் இல்லை.

பொதுவாக எந்த ஒரு மருந்து அறிமுகமாகும் போதும், லட்சக்கணக்கான பேருக்கு அதைச் செலுத்தி சோதனை செய்து பார்ப்பார்கள். பாதி பேருக்கு மருந்து செலுத்துவார்கள், பாதி பேருக்கு டம்மி மருந்து செலுத்தி சோதனை செய்யப்படும்.

அதே போல் இந்த மருந்தும் எப்படி உண்மையாக வேலை செய்கிறது, எத்தகைய ஆற்றலுடன் வேலை செய்கிறது என்பதைக் கண்டுபிடிக்க லட்சக்கணக்கான பேர்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கோவிட் தொற்று பரவியது ஒரு நெருக்கடியான காலகட்டம். எனவே அப்போது லட்சக்கணக்கான மனிதர்கள் மீது சோதனை செய்வதற்குப் போதிய அவகாசம் இல்லை. எனவே, அதிகபட்சமாக 30 ஆயிரம் பேரிடம் மட்டுமே சோதிக்க முடிந்தது. அதே சமயம் தனக்கான தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வது தனி மனித உரிமையும் கூட. எனவே அதைத் தடுக்கவும் முடியாது. எனவே அவசர கால நெருக்கடியின் காரணமாக நமது அரசும் தயாரிப்பை அனுமதித்தது.

இந்தியாவில் பலரும் கவனிக்க மறந்துவிடும் உண்மை என்னவென்றால் சுமார் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடி பேரின் இறப்பை அந்தத் தடுப்பு ஊசி தடுத்து நிறுத்தியது என்பது தான். இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. தரவுகள் இதைத்தான் சொல்கின்றன.

நோய்களைத் தடுப்பதற்கு நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரே ஆயுதம் தடுப்பு மருந்துகள்தான். நம் இந்தியாவைப் பொறுத்தவரை தொற்று நோய்கள் அதிகம் பரவுகிற நாடாக இருப்பதால், வேக்சினை அலட்சியப்படுத்திவிட முடியாது.

கோவிஷீல்டைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமாக உலகில் மிக மிக அரிதாகவே பக்கவிளைவுகள் தென்பட்டன. குறிப்பாக அது ஏற்படுத்திய பக்கவிளைவுகள்  என்றால் ரத்த உறைவு (Thrombus) மற்றும் ரத்தத் தட்டுகள் (Blood platelets) குறைவு என்பவைதான். இது மிகக் குறைவான சதவீத பாதிப்புதான்.

உலகம் முழுக்க எடுக்கப்பட்ட ஆய்வில் லட்சத்தில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதை சதவீதக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒப்பிடுவது என்றால் சாலை விபத்தில் ஒரு லட்சத்தில் 24 பேர் இறக்கிறார்கள். அத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதன் மூலம் லட்சத்தில் ஒருவர் தான். அதுவும் உயிர் இழப்பு கூட இல்லை, பக்க விளைவால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது மிக மிக அரிதான குறைவான பாதிப்பு தான்.

மருத்துவ அறிவியல் உலகில் அனைத்து விதமான தடுப்பு மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் இருக்கும். பெரியம்மை, போலியோ, வெறிநாய்க்கடியான ரேபீஸ் போன்றவற்றுக்கு நமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்புக் கேடயம் தடுப்பு மருந்துகள் எனப்படும் வேக்சின்ஸ் தான்.

இப்படிப்பட்ட தடுப்பு மருந்துகளால் நரம்பு மண்டல பாதிப்பு, தண்டுவட அழற்சி வருவதற்கு வாய்ப்பு உண்டு. இவ்வகைப் பக்கவிளைவு 2 லட்சம் பேரில் 5 பேருக்கு வரலாம். இதற்குப் பயந்து கொண்டு இவற்றை நாம் பயன்படுத்தாமல் இருப்பதில்லை.

பிடித்த உணவை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் கூட உடலுக்குத் தீமை விளையும்.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? எனவே இதற்காக நாம் பயப்படக்கூடாது. ஏனென்றால் ஒரு மருந்தால் பயன்கள் எவ்வளவு உள்ளன, பக்க விளைவுகள் எவ்வளவு உள்ளன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் கோவிஷீல்டு வேக்சின் மூலம் நமக்குக் கிடைத்த பலன்கள் மிக மிக அதிகம்.

நம் எல்லோருக்கும் தெரியும் அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் உள்ளன. ட்ரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சியினர் ஆன்டி-வேக்சின் கொள்கையை நம்புகிறவர்கள். பழமைவாதிகள். அவர்கள் தடுப்பு மருந்துகளை நம்பாதவர்கள். அவர்கள் கோவிட் வைரஸுக்கு தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருந்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். புள்ளி விவரங்களைப் பார்த்தபோது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை விட குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்பது அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிந்தது. அதாவது, வேக்சினை நம்பாதவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டார்கள்.

இந்த தடுப்பு ஊசியின் பக்க விளைவுகள் பற்றிய ஆய்வுகள் உலக நாடுகள் பலவற்றிலும் நடந்தன. முடிவாகத் தெளிவானது ‘பயப்பட ஒன்றும் இல்லை’ என்பது தான். அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்த வகை வேக்சின்கள் மூலம் வரும் பக்க விளைவுகள் 42 நாளில் தெரிந்துவிடும்.

கோவிஷீல்டைப் பொறுத்தவரை ரத்த உறைவு, ரத்தத் தட்டு குறைவு என்கிற பிரச்சினை இருந்தால் ஊசி போட்ட ஆறு வாரங்களில் தெரிந்துவிடும். எனவே முடிந்து போன ஒரு கதைக்கு நாம் இப்போது கவலைப்படுவது, பீதி கொள்வது தேவையில்லை. ஆறு வாரங்களுக்குப் பிறகு பக்கவிளைவு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதை விட அறவே இல்லை என்றே சொல்லலாம்.

ஆறு வாரங்களில் வரும் பக்க விளைவுக்கு அதுவும் லட்சத்தில் ஒருவருக்கு வரும் பக்க விளைவுக்கு இப்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தத் தேவையில்லை. எல்லா தடுப்பு மருந்துகளுக்குமே மிக அரிதான பக்கவிளைவுகள் இருக்கலாம் என்பதே உண்மை.

இங்கிலாந்தில் கோவிஷீல்டின் அரிதான பக்கவிளைவுகள் பற்றிப் பல வழக்குகள் தொடரப்பட்டன. பக்க விளைவுகள் இருந்தன என்பதை அந்தத் தயாரிப்பு நிறுவனமும்  மனசாட்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளது.

லட்சம் பேரில் ஒருவருக்கு பாதிப்பு என்பதற்காக 99 ஆயிரத்து 999 பேருக்குப் பயன்படும் ஒன்றைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல முடியாது. அது நியாயமில்லை.

தற்போது தடுப்பு மருந்து உற்பத்தியை அந்தத் தயாரிப்பு நிறுவனம் நிறுத்திக் கொண்டது ஏன் என்று கேள்வி எழலாம். கோவிட் வைரஸின் மரபணு மாற்றம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது. எனவே பழைய வைரஸுகளுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பை நிறுத்திக் கொள்வதுதான் நியாயம். அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ள வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து தயாரிப்பில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்.

சந்திப்பு : அபூர்வன்