ஞானகுரு

கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?

  • தெரிந்தால் அறிவியல் தெரியாதது ஆன்மிகம்

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி, மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து இன்று வரை கேட்கப்பட்டு வருகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், இதற்கு இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை என்பதுதான்

அதேநேரம், கடவுள் நிச்சயம் இருக்கிறார். அவர் மனிதர்களின் அறிவின் எல்லையில் நிற்கிறார் என்று சொல்லப்படும் இந்த பதில் சிந்திக்கத் தூண்டுவதாக இருக்கிறது. இதனை படித்துப் பாருங்கள்.

புடலைக்கொடியில் வெங்காயம் விளையாது என்று ஒரு கடைநிலை மனிதனுக்கும் தெரியும். அவனிடம் இதை நம்பு என்றால் சிரிப்பான். அங்கு அவன் அறிவை நம்புவதால் மாயாஜாலங்களை நம்புவதில்லை.

அதே மனிதனிடம் புடலை எப்படி விளையும் என்றால் விதையிலிருந்து என்பான். விதைக்குள் உயிர் எங்குள்ளது என்றால் அறிவியல், தெரியாவிடில் கடவுள் அருளாகிப்போகும். ஒரு அறிவியல் படித்தவனிடம் இதே கேள்வி போகும் போது விதை செயல்படும் விதம், மரபு, டி.என்.ஏ. வரை சொல்லிக்கொண்டே போவான். அதுவரை கடவுளும் விலகி நடப்பார்.

தானே ஒரு இயக்கம் எப்படி சாத்தியம்..? ஆதி எது என்றால். அவனுக்கும் பதில் தெரியாத போது கடவுளின் கடாட்சமாகிப்போகும்.

அதை மீறி படித்தவனிடம் போய் கேட்கும் போது, பிக் பாங்க், பிரபஞ்சம் வரை பதில் வரும். அதன் விளிம்பில் போய் கடவுள் நின்று கொள்ளுவார்.

எங்கே உங்களிடம் விடையில்லையோ அதுவே கடவுள் நிற்கும் புள்ளி. அதாவது அவரை எங்கு நிறுத்த வேண்டும் என்பதைக்கூட நாம் தான் நம்மை அறியாமல் தீர்மானிக்கிறோம்.

இதுவரை கடவுளுக்கும் நமக்கும் ஒரு சிக்கலுமில்லை.

பிரபஞ்ச விளிம்பில் நிற்கும் கடவுள் எப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கைக்குள் வருவார்? அவருக்கு சில வழிகள் உண்டு.

சுயநலம், கள்ளம், பேராசை, தன்னம்பிக்கையற்றுப்போதல், தன்னை மீறிவிட்டது என சோர்ந்து அமர்தல், உழைக்க மறுத்தல், இதெல்லாம் அவருக்கான கடவுச்சீட்டு.  லாட்டரியில் பணம் விழுணும் என்றால் கூட்டணிக்கு  கூப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

மற்றபடி, நீங்கள் நம்புவது போல் படையல், பிராத்தனைகளில் மசிபவர் அல்ல.

எனவே, பிரபஞ்ச வெளியின் எல்லையில் அவரை நிறுத்திவிடுவது அவருக்கும் நமக்கும் நல்லது.

  • சனத்குமார்.