நாட்டியாலயா

பரத நாட்டியத்தில் மூன்று

  • நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்

பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு கடந்த 75 ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளது என்றாலும பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை கூத்து என்று அழைத்தனர்.

கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ஆண் கூத்தர் என்றும் பெண் கூத்தியர் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர்.

கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் என்றும் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. 

பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது பரத நாட்டியக் கலை.

தில் நிருத்தம் என்பது கருத்து எதுவும் வெளிப்படுத்தாமல் ஆடும் ஆடல் முறை நிருத்தமாகும். மகிழ்ச்சிச் சுவை ஒன்றையே வெளிக்காட்டும். அடவுகள் இந்த ஆடல் வகையில் மிக இன்றியமையாததாகும். கை, கால், முகம் ஆகிய உறுப்புகளின் நிலைகளோடு கூடியது அடவு. தட்டடவு, நாட்டடவு, குத்தடவு எனப் பல அடவு வகைகள் உண்டு. அவை வெவ்வேறு தாளத்திற்கேற்ப அமையும். பரதநாட்டியத்தில் ‘அலாரிப்பு’ என்னும் நிகழ்ச்சி பல அடவுகளின் சேர்க்கையாகும்.

அடுத்த நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறை நிருத்தியமாகும். கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் ‘பாடல்’ சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் சப்தம், பதவர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.

இதையடுத்த கதையைத் தழுவி வரும் ஆடல் முறை நாட்டியமாகும். கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அபிநயித்து ஆடப்பெறும். ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக அபிநயிப்பர். பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரித்தும் ஆடுவர். குறவஞ்சி நாட்டியம், நாட்டிய நாடகங்கள் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தன.