உறவுகள்

கணவன் மனைவி சண்டைக்கு காரணம் இது தாங்க

  • சமாதானத்துக்கு இந்த ஒரு வார்த்தை போதும்

கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். ஆனால், இதை கடைசி வரையிலும் ஆண்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை, அதனால் தான் கணவன், மனைவிக்குள் இத்தனை சண்டைகள் நடக்கின்றன.

கல்யாணத்திற்கு பிறகு இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எந்த ஒரு இலக்கணமும் கிடையாது. எனவே, ஒவ்வொருவரும் தாம்பத்தியம் என்ற கிணற்றில் தள்ளி விடப்பட்டு அவர்களாகவே நீச்சல் கற்றுகொள்கிறார்கள்.. இதில் கரை சேர்வோரும் உண்டு, மூச்சு முட்டி மூழ்குவோரும் உண்டு.

மருத்துவ ஆய்வு படி, ஒரு பெண் 32 வயதில் நல்ல மனப்பக்குவம் அடைந்து விடுகின்றாள். ஒரு ஆண் பக்குவம் அடைய 43 வயது ஆகின்றது. இந்த மனப்பக்குவம் என்பது சண்டையை எளிதில் தவிர்க்கும் அல்லது சமாளிக்கும் வழியை அறிந்துகொள்வதே தவிர, சண்டை இல்லாமல் வாழ்வது அல்ல.

இயல்பாகவே பெண்கள் நிறைய கேள்வி கேட்பவர்கள். ஆண்கள் இயல்பாகவே, கேள்விகளை விரும்பாதவர்கள். இதை சொல்வதற்கு ஒரு பிரபல நகைச்சுவை உண்டு. அதாவது, அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு திருமணம் ஆகியிருந்தால், அவன் கிளம்பும்போது கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

 எங்கே போறீங்க? யார்கூட போறீங்க? ஏன் போறீங்க? எப்படி போறீங்க? எப்ப திரும்ப வருவீங்க? எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க? கண்டிப்பாக நீங்கள் தான் போக வேண்டுமா? உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகள் ஏற்படும்?  என்றெல்லாம் வரிசையாக நூற்றுக்கணக்கான கேள்விகளை மனைவி கேட்டிருப்பாள். ஒரு மனைவியாக இந்த கேள்விகள் நியாயமாகவே இருக்கும். எனவே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், கொலம்பஸ் நிச்சயம் பயணத்தை நிறுத்தியிருப்பான்.

தினமும் ஆண்கள் பேசுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண் பேசுகிறார்கள். எனவே, அவள் சாதாரணமாகப் பேசுவதும் சண்டையாக மாறிவிடுவது உண்டு.

இந்த விஷயத்தில் காதல் திருமணம் உயர்ந்தது அல்லது பெற்றோர் முடித்துவைக்கும் திருமணமே நிலைத்து நிற்கும் என்றெல்லாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. பிரிவதும், சேர்ந்திருப்பதும் சம்பந்தப்பட்ட இரண்டு பேரின் மனம் சம்பந்தப்பட்டது.

ஏனென்றால், காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு. பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு. அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு. சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு. ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது. அழகாக இல்லை என்றால் பிரச்னை, அழகாக இருப்பதை கவனிக்கவில்லை என்று பிரச்னை. சம்பாதிப்பது குடும்பத்திற்கு போதவில்லை என்று ஒரு பிரச்னை, அதிகம் சம்பாதிப்பவர் குடும்பத்திற்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று பிரச்னை.

தங்களைத் தவிர மற்ற எல்லா தம்பதியும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வது போன்று நினைப்பதுதான் பெரும்பாலான தம்பதிகளின் ஆதங்கம். வீட்டுக்கு வீடு வாசல்படி. எல்லா வீடுகளிலும் பிரச்னை உண்டு என்பதை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல், எந்த சண்டையும் தானே உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறது.

‘ஒரு கத்திரிக்காய்கூட சரியா வாங்கத் தெரியவில்லை’ என்று மனைவி மட்டம் தட்டியதும், ‘அப்படின்னா நீயே போய் வாங்குடி’ என்று கணவன் எகிறும்போது சண்டையாகிறது.

’நீ செஞ்ச பிரியாணியை வாயிலே வைக்க முடியலை… செம உப்பு’ என்று கணவன் முகம் சுளித்து சொன்னதும், ‘எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க’ என்று மனைவி பதில் சொன்னதும் பூகம்பம் ஆரம்பம்.

சண்டை போடும் தம்பதியர், இணைந்து வாழ்வதற்கு ஒரு புதிய டெக்னிக் சொல்கிறார்கள், மனநல ஆலோசகர்கள்.

அதன்படி, மனைவியைக் கணவன்  ‘அம்மா’ என்றும், கணவனை மனைவி, ‘அப்பா’ என்று அழைப்பதும் நல்ல பலன் தருகிறது என்கிறார்கள்.

ஏனென்றால், ஒவ்வொரு ஆணும் அம்மாவைப் போன்ற அன்பான மனைவிக்குத்தான் ஆசைப்படுகிறான். ஒவ்வொரு பெண்ணும் அப்பாவைப் போன்று பாதுகாக்கும் ஆணுக்குத்தான் காத்திருக்கிறாள். எனவே, ‘சொல்லும்மா… சாப்பிட்டியாம்மா என்று ஆண் கேட்பதும் ’என்னப்பா… சாப்பிடுங்கப்பா’ என்று பெண்ணும் பேசத் தொடங்கினால், தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும் என்கிறார்கள்.

சொற்களே செயல்களாகின்றன. மனைவி தனக்கு மகள் என்று கணவன் நினைக்கத் தொடங்குவதும், கணவனை தன்னுடைய மகனாக மனைவி நினைப்பதும் புதிய மாற்றமாக இருக்கும். ஏனென்றால், மகன் அல்லது மகள் ஏதேனும் தவறு செய்யும்போது, பெற்றோர் எத்தனை கண்டிப்பு காட்டினாலும் அன்பு காட்டுவதை நிறுத்துவதில்லை. அதே நிலை தம்பதி உறவுக்குள்ளும் உருவாகும்.

எத்தனை திட்டினாலும் பிள்ளையை எந்த ஒரு தாயும் பட்டினி போட மாட்டாள். பிள்ளை மீது எத்தனை கோபம் இருந்தாலும், ஏதேனும் ஒன்று வேண்டும் என கேட்டுவிட்டால், அதை வாங்கித்தருவதற்கு தந்தை மறுக்க மாட்டார். அத்தகைய அன்புதான் கணவன், மனைவிக்குள் வர வேண்டும்.

அத்தகைய மனநிலைக்கு தம்பதி வந்துவிட்டால், அந்த குடும்பத்தில் சண்டைகள் நடந்தாலும், பிரிவுக்கு இடமில்லை.