மருத்துவர்கள்

குழந்தையின் முதல் குவா குவா சத்தம்

  • டாக்டர் சந்திரலேகா, ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம், சென்னை

தன் குழந்தை அழுவதைக்கண்டு ஒரு தாய் சந்தோஷப்படுகிறாள் என்றால், அது பிரசவ நேரத்தில் மட்டும் தான். குழந்தையின் முதல் மொழி அழுகை. தாயின் கருவறைக்குள் இருக்கும்போது மூச்சு விடுவதற்கான அவசியம் குழந்தைக்கு இல்லை. எனவே பூமிக்கு வந்ததும் மூச்சு விடுவதற்கான முதல் முயற்சியே அழுகையாக வெளிப்படுகிறது.

குழந்தையின் உடலும் மூளையும் இணைந்து செயல்படத் தொடங்குவதன் அறிவிப்பு என்றும் அழுகையை எடுத்துக்கொள்ளலாம். தாயின் வயிற்றிலிருந்து பூமிக்கு வந்த 30 நொடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் குழந்தை அழத்தொடங்கிவிட வேண்டும். குழந்தையின் நுரையீரல் நிரம்பும் அளவுக்கு காற்றை இழுப்பதற்கு சாதாரண சுவாசம் போதாது. அதனால்தான் அழுகையின் மூலம் கூடுதல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது குழந்தை. மூக்கு, வாய், நுரையீரலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றுவதற்கும் அழுகை உதவுகிறது.

பிறந்த குழந்தை அழவில்லை என்றதும் சினிமாவில் காட்டுவது போன்று குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கவேண்டியது இல்லை. சாதாரணமாக முதுகு, கால்களை தட்டிக்கொடுத்தாலே போதும். நுரையீரல் இயல்பான செயல்பாட்டுக்கு வரும் வரையிலும் மருத்துவர்கள் குழந்தையைத் தூண்டிக்கொண்டே இருப்பார்கள்.

சில குழந்தைகள் அழுவதற்கு மிகவும் தாமதம் ஆகலாம், அல்லது அழாமலே இருக்கலாம். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் குறைபாடு இருப்பதன் காரணமாக அழாமல் இருக்கலாம். சளி, அமோனியா திரவங்கள் மூக்கு, வாயில் அடைத்திருப்பதால் குழந்தை அழமுடியாமல் போகலாம். இதனை மருத்துவர் கண்டறிந்து அகற்றினால் மட்டுமே குழந்தையால் அழமுடியும். கர்ப்பப்பையில் இருந்து வெளியே வந்தபிறகும், அதனை உணராமல் சில குழந்தைகள் இருப்பதுண்டு, இதுவும் அழாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. பேச்சுக் குறைபாடு போன்ற உடல் குறையுடன் பிறக்கும் குழந்தைகளும் அழாமல் இருக்கலாம். அழாத குழந்தைகளுக்கு உடனடியாக நியோனடல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக குறைமாதக் குழந்தைகளுக்கே அழுகை தாமதமாகிறது.

ஏன் குறைமாதக் குழந்தைகள்

குழந்தை பிறப்பதற்கு பத்து மாதங்கள் என்று பேச்சுவழக்கில் சொல்லப்பட்டாலும் 40 வாரங்கள் என்பதுதான் சரி. 40 வாரங்கள் தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைகள் முழு வளர்ச்சி அடைகிறது. 37 வாரங்களுக்கு முன்பே பிறப்பது குறைமாதக் குழந்தைகளாக அறியப்படுகிறது.

18 வயதுக்கு முன்பும் 35 வயதுக்கு பிறகும் பெண்கள் கருத்தரிக்கும்போது குறைமாதக் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாயின் எடை, உயரம் குறைவாக இருப்பதும், கர்ப்ப காலத்தில் போதிய எடை அதிகரிக்காததும் குறை மாதக் குழந்தைகள் பிறக்க காரணமாக இருக்கிறது.

தாய்க்கு நீண்டகால நோய்களான நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் இருப்பதும் குறைமாத குழந்தைக்கு காரணமாகலாம். ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போதும் குறைமாதக் குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

குறைமாதக் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனலே தாயிடம் கொடுக்காமல் தனித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தற்போது இன்குபேட்டர், வென்டிலேட்டர், சர்பக்டென்ட் சிகிச்சைகள் மூலம் குறைமாதக் குழந்தைகளை ஆரோக்கியமாக மாற்றிவிட முடியும்.