மனம்

மூளையில் இருக்கிறதா மனம்..?

  • உடலை இயக்கும் சூட்சும சக்தி

ஞானகுருவை சந்திக்க ஓடோடி வந்தான் மகேந்திரன். ‘’சாமி, மனம் என்பது இதயத்தில் இல்லை என்று நீங்கள் சொல்வது ஏற்கும்படியாகவே இருக்கிறது.  மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று சொன்னீர்கள். எண்ணங்கள் மூளையில்தான் தொடங்குகிறது என்பதால், மூளைதான் மனம். சரிதானே..?” பள்ளி மாணவன் போன்று கேள்வி கேட்டான் மகேந்திரன்.

’’ஒரு விமானத்தை இயக்கும் பைலட் போன்று மனித உடலை இயக்கும் சூட்சும டிரைவர்தான் மூளை. உடலில் உள்ள கை, கால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அனைத்து அவயங்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மூளை திறம்பட செய்கிறது. அதோடு, ஞாபகங்களை எல்லாம் சேமித்து வைக்கிறது. அந்த ஞாபகக் கிடங்கில் இருந்து எண்ணங்களையும் மூளையே உருவாக்குகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களின் தொகுப்பையே மனம் என்கிறோம்.

மூளையால் உருவாக்கப்பட்டது என்றாலும், அந்த எண்ணங்கள் தனித்து இயங்கக்கூடியவை. இதனை ஒரு திடப்பொருளாக அல்லது உடலின் அவயமாக கற்பனை செய்ய முடியாது. விபத்தில் மூளை பாதிக்கப்படும் நேரத்தில் மனமும் பாதிக்கப்படுவது நிஜம். ஆனாலும் மனநோயாளிகளின் எண்ணங்கள் வேறு ஏதோ ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் மூளையையும் மனம் என்று சுட்டிக்காட்ட முடியாது.

அதேநேரம் மனம் என்பது வளரக்கூடியது. அதாவது, சிறியவர்களை விட முதியவர்கள் மன முதிர்ச்சியுடன் செயல்படுவதுண்டு. அதற்கு காரணம், ஞாபகங்களின் அதிகமான சேமிப்புதான். இதையே அனுபவம் என்றும் சொல்கிறோம்.

காலையில் படுக்கையில் கூடுதலாக கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி கெஞ்சுவதும் உன் மனம்தான். இப்படி தூங்கினால், குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்லமுடியாமல் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்க நேரிடும் என்று உன்னை எச்சரிக்கை செய்வதும் மனம்தான்.

இந்த இரண்டில் இருந்து ஏதேனும் ஒரு முடிவை நீதான் எடுக்கவேண்டும். மேலதிகாரியிடம் ஏதேனும் பொய் சொல்லி சமாளிக்க முடியும் என்று உன்னை சமாதானப்படுத்தி தூங்க வைப்பதும் உன் மனம்தான். இன்னும் கொஞ்சநேரம் தூங்கினால் வேலை போய்விடும் என்று பயம் காட்டி உன்னை உடனே எழுப்பிவிடுவதும் உன் மனம்தான்…’’

மனம் பற்றிய தகவல்களைக் கேட்டு வியந்து நின்றான் மகேந்திரன். இன்று பேசியதை அசைபோடு, சந்தேகம் இருந்தால் நாளை வா என்று அனுப்பிவைத்தார் ஞானகுரு.