நாட்டியாலயா

தினமும் டான்ஸ் ஆடுங்க பிள்ளைகளே

  • நடனம் ஆடுவதால் இத்தனை நன்மைகளா..?

மகிழ்ச்சி வரும் நேரத்தில் எல்லோருமே குஷியாகிறார்கள், குதிக்கிறார்கள். குஷியும், கும்மாளமும், ஆட்டமும் உடலுக்கு நேர்மறையான ஆரோக்கியம் தருகிறது என்கிறார்கள், மருத்துவர்கள்.

ஆம், உடற்பயிற்சியாக நடனம் ஆடுபவர்களுக்கு பக்கவாதம், நீரிழிவு பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இவை எல்லாவற்றையும் விட குழந்தைகள் தினமும் நடனம் ஆடுவதால் அவர்களுக்கு செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றில் செலவிடும் நேரம் குறைகிறது.

உடற்பயிற்சி போன்று நடனமும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. குழந்தைகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவர்கள் உடற்பயிற்சி, நடனம் என அனைத்தையும் ஆர்வமாக கற்றுகொள்வார்கள். உடற்பயிற்சி போன்று நடனமும் எண்டோர்பின்கள் வெளியிடுகிறது. இதனால் அவர்களது தசை, எலும்பு வலுப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் இதய செயல்பாடுகள் மேம்படுவதோடு சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

குழந்தைகள் நடனம் ஆடுவது உடல் இயக்கம் போன்று மன நல ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக நடனம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் ஆராயவும் செய்கிறது. நடனம் ஆடுவது எண்டோர்பின்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க செய்யும் ஹார்மோன்கள். நடனம் மூலம் இவை வெளிப்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

நடனம் குழந்தையின் மனநிலையை மேம்படுத்துவதுடன் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. நடனத்தை தீவிரமாக கற்கலாம். அல்லது சாதாரண பொழுது போக்காக தொடரலாம் என்றாலும் இரண்டும் வாழ்நாள் வரை விரும்புவார்கள். இதனால் மன ஆரோக்கியம் மேம்படவே செய்யும்.

பொதுவாக நடனம் குழுவாக  நடத்தப்படுகிறது. எனவே, சிறு வயதிலிருந்தே மற்றவர்களுடன் பழக கற்றுகொள்கிறது. புதிய சூழலை கையாளும் வழிகளை அறிந்துகொள்கிறார்கள். பொறுமை, மற்றும் தலைமைத்துவ திறன்களை கற்றுகொள்கிறார்கள். தேவை என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு உதவி புரியும் மனோபாவத்தையும் வளர்த்துகொள்கிறார்கள்.

குழந்தைகள் நடனம் பயிலும் போது விடாமுயற்சியையும் சுய ஊக்கத்தையும் கற்றுகொள்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பிழையின் முக்கியத்துவத்தை கற்றுகொள்வதால் தனிப்பட்ட வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் முதன் முதலில் வெற்றிபெறவில்லை என்றாலும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைகிறார்கள்.

எனவே டான்ஸ் ஆடுங்கள். எந்த வகை நடனம் என்றாலும் பரவாயில்லை, ஆடுங்கள், கொண்டாடுங்கள்.

  • எம்.நிலா, பரதநாட்டியக் கலைஞர்