யாக்கை

பெண்களே, தைராய்டு பரிசோதனை செஞ்சுக்கோங்க

  • இன்று உலக தைராய்டு தினம்

நமது கழுத்துப் பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதனுடைய முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது தான்.

குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதயத் துடிப்பு போன்ற உடல் இயக்கத்திற்கு தைராக்சின் ஹார்மோன் பயன்படுகிறது. தைராக்சின் ஹார்மோன்கள் குறைவாக அல்லது அதிகமாக சுரப்பது தைராய்டு பிரச்னையாக அறியப்படுகிறது.

தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியமாகும். இதில் ஆண்களை விட பெண்களே தைராய்டு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராக்சின் ஹார்மோன்கள் குறைவாக சுரந்தால் ஹைபோ தைராய்டிசம் என்றும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். உடல் பருமன், முகம் மற்றும் கால்கள் வீக்கம், சோர்வான உணர்வு, பசியின்மை, அதிக தூக்க உணர்வு ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.

ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடியுல்ஸ் கட்டிகள் ஏற்படலாம். இந்த கட்டிகளில் 85 சதவீதம் சாதாரண கட்டியாகவும், 15 சதவீதம் புற்றுநோய் கட்டியாகவும் மாறலாம். உடல் எடை குறைதல், கை கால் நடுக்கம், திடீரென மனநிலை மாறுவது, தூங்கும்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, அடிக்கடி வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஹைப்பர் தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

தைராய்டு சுரப்பியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரை அணுகும்போது, தைராய்டு சுரப்பியின் நிலையை அறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். தைராய்டு ஸ்டுமிலேட்டிங் ஹார்மோன் டெஸ்ட் மூலம் உடலில் தைராய்டு சுரப்பியின் அளவை பரிசோதித்துக்கொள்ள முடியும்.

அயோடின் மற்றும் செலினியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு பிரச்னைகளை தவிர்க்கலாம். பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருக்கின்றன. வெள்ளரிக்காய் ஜூஸ், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும் செலரி ஜூஸ், மஞ்சள் மற்றும் மிளகு கலந்த ஜூஸ், தைராய்டு சுரப்பு அதிகரிக்கும்.

எலுமிச்சை ஜூஸ் ஹார்மோன் சீராக சுரக்கவும, தைராய்டு இயக்கத்தை சீராக்கவும் செய்யும் ஆற்றல் உடையது. தேங்காய் எண்ணெய். தேங்காய் பூ தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம். பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி போன்றவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருக்கின்றன.

ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள சில உணவு வகைகளில் முட்டையும் ஒன்றாக உள்ளது. நடை பயிற்சியும் ஹார்மோன் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது.

பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும் தருணங்களில் இருந்து ஹார்மோன் சுரப்பு பரிசோதனை செய்துவந்தால் திடீரென எடை அதிகரிப்பு, முகத்தில் முடி போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிவிடலாம். இன்று அதாவது மே 25ம் தேதி உலக தைராய்டு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, இந்த நேரத்தில் பெண்களுக்கு ஹார்மோன் விழிப்புணர்வு முக்கியம்.