மருத்துவர்கள்

கர்ப்பிணிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை

  • ஏ.டி.சி.முருகேசன், ஸ்ரீஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.

வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் பெண்களுக்கு உண்டாகும் பல்வேறு பிரச்னைகளைக் குறைப்பதற்கு வழி காட்டுகிறார் பிசியோதெரபி நிபுணர்.

கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு அடையும் வரையிலும் பல்வேறு வகையிலான அசெளகரியக் குறைபாடுகள், வலி, வேதனை, தொந்தரவு போன்றவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பக்கவிளைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால், யாரும் அவற்றை பரிந்துரைப்பதில்லை. அதேநேரம், வலியினாலும் வேதனையினாலும் கர்ப்பிணிகளின் அனைத்து வகையிலான பிரச்னைகளையும் தீர்த்துவைக்கிறது பிசியோதெரபி.

கர்ப்பம் தொடங்கிய நாள் முதலே பெண்கள் சரியான முறையில் படுத்துத் தூங்க முடியாமல், இயல்பாக நடக்க முடியாமல், போதிய அளவுக்கு சாப்பிட முடியாமல் இருப்பார்கள். ஆகவே, இந்த காலகட்டத்தில் கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுவது சகஜம். இந்த காலகட்டத்தில் கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலி போன்ற அசௌகரியங்களைப் போக்குவதில் பிசியோதெரபி சிறப்பான வழிகளில் உதவுகிறது. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் பெண்கள் தேவையற்ற வலியை அனுபவிக்கவும் டென்ஷனுடன் காலத்தை ஓட்டுவதற்கும் அவசியமில்லை.

அதோடு தொடர்ந்து சில சிறப்பு பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்கவும் தாய்மைக்கான மாற்றத்தை அனுபவிக்கவும் முடியும்.

எடை அதிகரிப்பு

கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதன் காரணமாகவும் இயல்பாக கர்ப்ப காலம் அதிகரிக்கும்போதும் பெண்ணின் எடை கூடுகிறது. இதனால் மூட்டு, இடுப்பு, முதுகு போன்ற இடங்களில் வலியும் வேதனையும் ஏற்படுகிறது. இந்த எடை அதிகரிப்புக்கு ஏற்ப வலி மேலாண்மை அவசியமாகிறது.

உடலின் உள்ளுறுப்புகளையும் இந்த காலகட்டத்தில் வலிமைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பம் காரணமாக சிறுநீர் அடக்கமுடியாமல் வெளியேறுதல், உடல் தளர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு தசை இறுக்கம், தசை வலுப்படுத்துதல் மூலம் பிசியோதெரபியில் தீர்வு காண முடியும். சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாடு கொண்டுவரவும் உதவுகிறது.

திடீர் உடல் எடை அதிகரிப்பு, வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி போன்றவை காரணமாக பெண்ணுக்கு நடக்கும்போது, எழும்போது, தள்ளாட்டம் ஏற்படுவது சகஜம். ஒருசில பெண்கள் கீழே விழுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. இந்த நிலையில் பிசியோதெரபி உடல் விழிப்புணர்வை மேம்படுத்தவும், தடுமாற்றம், வீழ்ச்சி மற்றும் காயங்களின் அபாயத்தை குறைக்கிறது.

சுகப்பிரசவம்

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்திற்கு நிறைய பெண்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அதற்கான வழிமுறை அறியாது உள்ளனர். பிசியோதெரபி மையங்களில் சுகப்பிரசவத்துக்கு வழி காட்டும் உடற்பயிற்சிகள், யோகா போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அச்சமின்றி பிரசவத்தை எதிர்கொள்ளவும், எளிதாக குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

நிறைய பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு இடுப்புத் தளத்தின் தசைகள் பலவீனமடையக்கூடும். பிசியோதெரபி அவர்களின் மீட்புக்கு உதவும் பயிற்சிகளை வழங்குகிறது. ஒட்டுமொத்த உடல் தன்மையையும் இயல்பு நிலைக்கு மீட்டுக்கொண்டுவருவதையும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த சிகிச்சைகள் வழி காட்டுகின்றன.

தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையை சரியான வகையில் பிடித்துக் கொள்வது, குழந்தையை சரியான வழியில் குளிப்பாட்டுதல் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான சரியான வழிமுறைகளையும் சரியான பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.

பொதுவாக கர்ப்பம், பிரசவம் அதன் பின்னரான குழந்தை வளர்ப்பு போன்றவை பல்வேறு உணர்வுகள் ரீதியிலான உடல் போராட்டமாக இருப்பதுண்டு. இளம் தாய்மார்களுக்கு இந்த நேரத்தில் நிறைய நிறைய குழப்பங்கள், அச்சங்கள் ஏற்படுவதையும் தடுப்பதன் காரணமாக உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தேவையான உதவிகளை பிசியோதெரபி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு இந்த நீரிழிவு காணாமல் போய்விடும் என்றாலும், கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். எனவே, இந்த காலகட்டத்தில் சீரான உணவுப் பராமரிப்பு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஆலோசனையும் பிசியோதெரபி மூலம் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இந்த காலகட்டத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்தல், தேவையான தண்ணீர் குடித்தல் போன்றவற்றுடன் ஆரோக்கியமில்லாத உணவுகளை விலக்குதல் போன்றவையும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.  

எனவே கர்ப்பிணியின் ஆரோக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகுந்த கவனத்திற்கும் கவனிப்புக்கும் உரியதாகும். இந்த தருணத்தில் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் பிசியோதெரபி ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது.

தொடர்புக்கு : 9994944228