மனம்

நகம் கடிக்கும் பழக்கம்

  • மன அழுத்தம் அறிகுறி

பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 முதல் 60 சதவீதம் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது.

புதியனவற்றை கற்கும் ஆர்வம் ,சலிப்பு, மன அழுத்தம், மற்றவரை பார்த்து தானும் செய்வது போன்ற காரணங்களாலே குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது மரபியல் ரீதியாகவும் ஏற்படக்கூடும். பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டை, புதிய வகுப்பு சூழ்நிலை, தேர்வு பதற்றம் ஆகியவையும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

கைகளை பல இடங்களில் தொட்டுவிட்டு வாயில் வைத்துக் கடிப்பதால் எளிதில் கிருமித் தொற்று ஏற்படும் என்பதை குழந்தைக்கு விளக்குவதுடன், நகம் கடிக்கும் நேரங்களில் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தால் அந்த பழக்கம் மறைந்துவிடும்.

அன்பால் மட்டுமே குழந்தையைத் திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, கண்டிப்பும் தண்டிப்பும் கூடாது. இது மன அழுத்தத்தை உண்டாக்கி நகம் கடிக்கும் பழக்கத்தை தீவிரப்படுத்தும். எனவே, குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கம் அதிகமானாலோ விரல்களில் காயம் ஏற்பட்டாலோ குழந்தையின் தூக்கம் சீரற்று இருந்தாலோ உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்வது நல்லது.