யாக்கை

மஞ்சள் குளியல்

பவுடர், சோப்பு, ஷாம்பு போன்றவை கடைகளுக்கு வராத காலத்தில் பெண்களின் அழகு சாதனமாக மஞ்சள் மட்டுமே இருந்தது. மார்க்கெட்டில் விதவிதமான அழகு கிரீம் வந்து இறங்கியதும், புதுப்புது விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதும் மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கத்தை அத்தனை பெண்களும் மறந்தேவிட்டார்கள்.

மஞ்சள் பூசி குளிப்பது அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உடலில் தேவையில்லாத இடங்களில் முடிகளை இயற்கை முறையில் நீக்குகிறது. மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

அதோடு முகப்பரு, தேமல், மரு மட்டுமின்றி வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கும் மஞ்சள் நல்ல தீர்வாக இருக்கிறது. எலுமிச்சையுடன் மஞ்சளை சேர்த்து முகத்தில் பூசினால் இறந்த செல்கள் அகற்றப்பட்டு பளீச் தன்மை கிடைக்கிறது.

அதேபோல் தயிருடன் மஞ்சள் சேர்த்து அப்ளை செய்யும் போது முகத்துக்கு பொலிவு தரும் கண்டிஷனிங் எஃபெக்ட் கிடைக்கிறது. அதேபோல் ரோஸ் வாட்டருடன் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் உடல் குளுமை அடைகிறது. இத்தனை நன்மை இருந்தாலும் முகத்தில் மஞ்சள் நிறம் பளீச்சென்று தெரிவதை பட்டிக்காட்டுத்தனம் என்றே இன்றைய பெண்கள் தவிர்க்கிறார்கள். வெளியில் செல்வது கூச்சமாக இருக்கிறது என்றால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருக்கும் நாளிலாவது மஞ்சள் தேய்த்து குளிப்பது நல்லது.

ஒருசில பெண்களுக்கு மட்டும் மஞ்சள் பூசுவது உடலுக்கு அலர்ஜியை உருவாக்கலாம். அவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *