ஞானகுரு

வெயிலையும் மழை போல் கொண்டாடுங்கள்

‘’எந்த வருடம் போலவும் இல்லாமல் இந்த ஆண்டு கொடுமையாக வெயில் தாக்குகிறது’’ என்றபடி ஞானகுருவுக்கு அருகில் அமர்ந்தார் மகேந்திரன்.

‘’ஒவ்வொரு மழைக் காலத்திலும் ஒவ்வொரு வெயில் நேரத்திலும் மனிதர்கள் இப்படித் தான் பேசிக்கொள்கிறார்கள். இயற்கை மாறவே இல்லை, மனிதனே மாறிவிட்டான்’’ என்றார்.

‘’என்ன சொல்றீங்க..?’’

‘’இப்போது அடிப்பதை விட அதிக வெயில் அடித்திருக்கிறது என்பதை வானிலை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள். ஆனால், இப்போது தான் மனிதர்கள் அதிகம் வேதனைப்படுகிறார்கள். அது ஏன் தெரியுமா..?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் இப்போது ஏசி அறையில் வாழ்கிறார்கள். வெயிலில் நடந்தால் ஸ்டோர்க் வந்துவிடும் என்று யார் யாரோ பொய்யாக அச்சமூட்டுகிறார்கள். ஒரே நாளில் வெயிலில் சுருண்டு விழுந்து 20 பேர் பலி என்று யாரோ சொன்னதை நம்புகிறார்கள். வெயிலுக்குப் போய் விட்டு வந்ததும் குளிர்ந்த நீர் குடித்துவிட்டால் நரம்பு வெடித்துவிடும் என்று பயமுறுத்துகிறார்கள். உண்மையில் வெயிலை விட வெயில் பற்றிய வதந்தியே மனிதர்களை ரொம்பவும் அச்சமூட்டுகிறது…’’

‘’ஆனால், கத்திரி வெயில் என்பது கொடூரமானது தானே..?’’

’’கத்திரி வெயில் என்பதும் அக்னி நட்சத்திரம் என்பதும் அறிவியல் ரீதியானது இல்லை. அது ஜோதிடர்களின் பஞ்சாங்கக் கணக்கு. பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்கு இது கத்திரி தோஷம். அவர்கள் கணக்குப்படி ஒரு லக்னத்திற்கு இரண்டாவது மற்றும் 12 வது இடத்தில் ராகு கேது சனி செவ்வாய் இருந்தால் அதற்கு கத்திரி தோஷம் என்று பெயர். அப்போது நல்ல செயல் எதையும் தொடங்கக்கூடாது என்பார்கள். அவர்கள் வெயிலில் அலையக்கூடாது என்பதற்காக இப்படி சொல்லி வைத்தார்கள்.

வெயிலின் உண்மை பற்றி வானிலை ஆய்வாளர்களைக் கேளுங்கள். இந்த வெப்பம் நல்லது என்பார்கள். இந்த வெப்பமே அடுத்து மழையைக் கொண்டுவரக் கூடியது. எந்த அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு காற்றின் தன்மை மாறும். காற்றின் தன்மை மாறுபடுவதைக் கொண்டே அடுத்து மழையும் பொழியும். அதனால் வெயிலை உன்னுடைய நண்பனைப் போன்று பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் வெயிலின் நன்மைகள் தெரியும். வெயிலில் போய் வந்தால் எதுவும் ஆகிவிடாது என்பதும் தெரியும்’’ என்று சிரித்தார் ஞானகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *