சைதை துரைசாமி

சைதை துரைசாமி பதவியேற்பு விழாவில் சூழ்ச்சி

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 2

இந்திய வரலாற்றில் புதிய சாதனையாக மேயர் தேர்தலில் சைதை துரைசாமி 5.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு இரட்டை இலை சின்னம், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கு மட்டுமின்றி சைதை துரைசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார்கள்.

சைதை துரைசாமியை மேயர் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சி செய்த சொந்தக் கட்சிக்காரர்கள் இத்தனை பெரிய வெற்றியைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அதன் பிறகும் அவர்கள் சூழ்ச்சி செய்வதை கைவிடவில்லை. சைதை துரைசாமியின் மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் அலுவலகத்திற்கு பொய்யான சில தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

அவர்களின் எண்ணத்திற்கு வலுவூட்டுவது போன்று இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால், ரிப்பன் மாளிகை முழங்கால் அளவு நீரில் மிதந்துகொண்டு இருந்தது. பதவியேற்பு விழா நாளான அக்டோபர் 25, 2011 அன்றும் காலை முதல் இடைவிடாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. பதவியேற்பு விழாவை ஒரு சம்பிரதாயத்துக்கு மட்டுமே நடத்தும் எண்ணத்தில் எந்த முக்கிய ஏற்பாடுகளும்  செய்யாமல் அசட்டையாக இருந்தார்கள். ஜெயலலிதா வருகை தர மாட்டார் என்ற எண்ணத்திலும் உறுதியாக இருந்தனர்.  

ஆனால், அந்த மழை நேரத்தில் திடீரென ரிப்பன் மாளிகைக்கு மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பரபரப்பாக வந்து சேர்ந்தனர். தேங்கிக்கிடந்த தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து அமைச்சர்களும் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். அந்த காட்சியைப் பார்த்த பிறகு தான், ஜெயலலிதாவின் வருகை உறுதியானது. எல்லோரும் சேர்ந்து தண்ணீரை அகற்றி ஜெயலலிதா வருகைக்குக் காத்திருந்தார்கள்.

ஜெயலலிதா முகத்தின் புன்னகை

மிகச்சரியாக, பகல் 10:50க்கு எந்த ஆரவாரமும் இன்றி வந்துசேர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்கு முதல்வர் வந்து சேர்ந்தபிறகும், பதவி ஏற்பு விழாவை நடத்தி வைக்கவேண்டிய உயர் நீதிமன்ற நீதிபதி வரவில்லை. அதனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முன்வந்தார்.

இதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் மேயர் பதவி ஏற்றபோது உயர் நீதிமன்ற நீதிபதி தானே பதவிப் பிரமாணம் செய்துவைத்தார், இப்போது மட்டும் ஏன் மாநகராட்சி கமிஷனர் என்று அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் ஆச்சர்யப்பட்டார்கள். திட்டமிட்டே நீதிபதிக்கு அழைப்பு விடுக்காமல் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

முதல்வர் ஜெயலலிதா இவற்றை எல்லாம் கவனித்தும் கவனிக்காதவர் போன்று அமைதியாக இருந்தார். முதல்வர் உத்தரவு கொடுத்ததும், சென்னை மாநகர மேயர் பதவிக்கான சிறப்பு அடையாளமான செங்கோலை பெற்றுக்கொண்டு, பதவிப் பிரமாணம் எடுத்தார் சைதை துரைசாமி. ‘அதன்பிறகு சில கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டதும், ஜெயலலிதா கிளம்பினார். முதல்வரை வழியனுப்புவதற்காக விழா நிகழ்ச்சிகள் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டன.

அமைச்சர்களும், மேயர் சைதை துரைசாமியும் முதல்வரை வழியனுப்ப கிளம்பியதும் பத்திரிகையாளர்களும் பின் தொடர்ந்தனர். முதல்வர் காருக்கு நடந்து செல்லும்போது, ‘’என்ன மிஸ்டர் சைதை மகிழ்ச்சியா?’’ என்று மேயரைப் பார்த்து கேட்டார்.

உடனே சைதை துரைசாமி, ‘’ரொம்ப சந்தோஷம்மா… எனக்கு பொது வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரம். இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லைம்மா’’ என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடினார். அதன்பிறகு சில நிமிடங்கள் சைதை துரைசாமியை தனியே அழைத்துச்சென்று பேசிவிட்டு சென்றார்.

ஜெயலலிதாவுடன் சைதை துரைசாமி ரகசியமாக என்ன பேசினார்..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *