சைதை துரைசாமி

என்ன செய்தார் சைதை துரைசாமி?

அத்தியாயம் 1 – மேயர் தேர்தலில் வரலாற்று சாதனை

செப்டம்பர் 16, 2011.

சென்னை பெருநகர மேயர் வேட்பாளராக சைதை துரைசாமியை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது, அன்றைய அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அது ஏன் என்ற அரசியல் பின்னணி குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

அதேநேரம், சைதை துரைசாமியை வேட்பாளராக அறிவித்ததில் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது.  எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவின் தீவிர தொண்டர். கட்சியின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்காதவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்படாதவர், பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகள் செய்பவர், மனிதநேயம் அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி கொடுத்துவருபவர், மாணவர்களுக்கு இலவச பிரதியகம் நடத்தி வருபவர் என்று சைதை துரைசாமி பற்றி மக்களிடம் நல்ல அபிப்ராயம் இருந்தது.

இவை எல்லாவற்றையும்விட, 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கொளத்தூர் தொகுதியில் இன்றைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமி தோல்வி அடைந்திருந்தார். தேர்தல் முறைகேட்டினால் அடைந்த தோல்வியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சைதை துரைசாமியை எதிர்த்து சென்னை மேயராக இருந்த மா.சுப்பிரமணியன் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். எனவே சைதை துரைசாமிக்கு வெற்றி கிடைக்காது என்று அ.தி.மு.க.வினரே மந்தமாக செயல்பட்டனர்.

ஆனால், ஸ்டாலினிடம் கிடைத்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வரலாற்று சாதனையாக ஒரு மாபெரும் வெற்றி மாநகராட்சித் தேர்தலில் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. பெருநகர சென்னை மேயர் தேர்தலில் சைதை துரைசாமி 12 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்றார். எதிர்த்து நின்ற முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் 7 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளே பெற முடிந்தது. அதாவது, 5,19,747 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் சாதனை வெற்றி படைத்தார். இந்திய அளவில் எந்த மேயரும் இதுவரை வாங்காத வாக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் 31 அ.தி.மு.க. கவுன்சிலர்களே தோல்வி அடைந்தனர். அந்த 31 வார்டுகளிலும் கூட சைதை துரைசாமிக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக  சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து 1.70 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்கள். ஆனால் 5.19 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றதில் இருந்தே சைதை துரைசாமியின் தனிப்பட்ட செல்வாக்கை உணர முடியும்.

அதிமுக-வின் முதல் சென்னை மேயர்

திமுக-வின் கோட்டையாக இருந்த சென்னை மாநகராட்சியை 2011-ம் ஆண்டு தான் முதன்முதலாக அதிமுக கைப்பற்றியது என்பதால், சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயர் என்ற பெருமை சைதை துரைசாமிக்கு கிடைத்தது. அதனால்தானோ என்னவோ, மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருகை தந்து கெளரவிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவை நன்கு அறிந்த அ.தி.மு.க. தலைவர்களும் மாமன்ற உயர் அதிகாரிகளும், ‘இதுபோன்ற சாதாரண விழாக்களில் எல்லாம் ஜெயலலிதா எட்டிக்கூட பார்க்க மாட்டார்’ என்று உறுதியாகச் சொன்னார்கள். போதாக்குறைக்கு கடுமையாக மழையும் பெய்துகொண்டு இருந்தது.

ஜெயலலிதா வந்தாரா..?

  • நாளை பார்க்கலாம்.

One thought on “என்ன செய்தார் சைதை துரைசாமி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *