மருத்துவர்கள்

மாறு கண் என்றால் அதிர்ஷ்டமா..?

  • டாக்டர் மாலா பாலகோபால் MBBS, DO

மாறு கண் என்றால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது. எனவே, இதுகுறித்து கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பதே இல்லை. இது சரிதானா என்று டாக்டர் மாலா பாலகோபாலிடம் கேட்டோம்.

மாறுகண் என்பது ஒரு கண் நேராகவும், மற்றொரு கண்ணின் பார்வை திசை மாறியிருப்பதையும் குறிக்கும். மாறுகண், கண் புரை போன்றவை மரபுரீதியாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் மாறுகண்ணால் பெரும்பாலோருக்கு எவ்விதமான தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை என்பதால் அவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. ஆனால், மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது. ஏனென்றால், ஒருசிலருக்கு மாறுகண் பிரச்னையை சரி செய்யவில்லை என்றால் பின்னர் பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உண்டு.

குழந்தைகளுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்படுவதால் பார்வை நரம்புகள் முற்றிலும் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. மேலும், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். மூளை பாதிப்பு இருந்தாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்படலாம். அல்பினிசம் என்ற பிறவி மரபு வழி நோயில் உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்களில் உள்ள நிறமி செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதிலும் கண் பார்வை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை கருவில் இருக்கையிலேயே கண் அழுத்தம் அதிகரித்து அதனால் கருவிழி முழுவதும் ஒளி உட்புகா நிலை ஏற்படக்கூடும். பிறக்கும்போது வெண்மையான கருவிழியோடு குழந்தை பிறக்கும். உடனடியாக சிகிச்சையைத் துவங்கினால் ஓரளவு பார்வையை மீட்டெடுக்க முடியும்.

குழந்தைகளுக்கு வரும் கண் அழுத்த நோயின் ஆரம்பநிலை அறிகுறி கண்ணில் நீர் வடிதல். அதனுடன், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவு கண் கூச்சம் ஏற்பட்டால் அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாக இருக்க  வாய்ப்புண்டு. இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. கண் அழுத்த நோய் கண் பார்வையை பாதிக்கும் அபாயமுடையது. ஆனால், பெரியவர்களுக்குக் கண் அழுத்த நோய் ஏற்பட்டால் அறிகுறிகள் வெளிப்படாது. சில வேளைகளில் சாதாரணமாக கண்ணீர் வடியும். கண் கூச்சம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கண் அழுத்த நோய் ஏற்பட்டு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும். இதில், சில பிரச்னைகளை சாதாரணமாக சொட்டு மருந்து போடுவதன் மூலம் சரி செய்துவிடலாம். அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். இதேபோன்று பெரியவர்களுக்கும் கண் புரை, கண் பார்வை மங்குதல், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் வலி, கண் அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். ஆக, கண்ணில் எந்தப் பிரச்சினை வந்தாலும் கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.


கண் புரையைத் தடுக்க முடியுமா..?

கண்ணில் உள்ளிருக்கும் சிறிய கண்ணாடி போன்ற பகுதியான லென்ஸ், கருவில் துவங்கி மனித ஆயுள் முழுவதும் வளரக்கூடிய தன்மையுடையது. இந்த லென்ஸ், தன் கண்ணாடி போன்ற தன்மையை (Transparency) இழந்து ஒளிபுகாததாக மாறினால், அதுவே கண்புரை எனப்படும். இது, பிறப்பிலிருந்தே பார்வையின்மையை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக இருக்கிறது. கண்புரை என்பது ஒரு கண்ணை மட்டுமின்றி, இரண்டு கண்களையும் சேர்த்து பாதிக்கலாம். காரணிகளைத் தெரிந்துகொண்ட பின், முடிந்தளவு பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்க முயல வேண்டும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பரிசோதனை மற்றும் அறுவைச்சிகிச்சை மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *