ஞானகுருபணம்

பணம் இல்லாமல் வாழ முடியுமா?

மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த பிச்சைக்காரர், ’என்னாத்துக்கு இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க, வாழ்க்கைக்கு பணம் அத்தனை தேவையா?’ என்று கேட்டான்.

‘’உனக்கு பணத்திற்குப் பதிலாக நான்கு கருங்கல் போட்டால் ஏற்றுக்கொள்வாயா..?’’

‘’இதென்ன முட்டாத்தனமா இருக்கு..?”

‘’உனக்கே பணம்தான் தேவை எனும்போது, குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பணம் அவசியம் தேவை. ஏனென்றால், அதுதான் அவர்களுடைய நம்பிக்கை. அதுதான் கேட்டதைக் கொடுக்கும் கடவுள்…’’

‘’அப்படின்னா பணம்தான் வாழ்க்கையா?”

’’இல்லை. பணமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது குடும்பம், ஆரோக்கியமான உடல், இனிமையான மனநிலை, கல்வி, வேலை, உறவு, நட்பு, கோபம், லட்சியம், சிந்தனை, வெற்றி, தோல்வி என்று எத்தனையோ விஷயங்களை உள்ளடக்கியது. இத்துடன் கொஞ்சம் பணம் இருந்துவிட்டால் நம்பிக்கை உருவாகிவிடும். அந்த நம்பிக்கை மனிதனுக்கு எதிர்காலத்துக்கு நிம்மதி கொடுத்துவிடும். அதனால், பணத்துக்காக உழைப்பவனை அவமதிப்பு செய்யாதே. அவனுக்குத் தெரிந்த பக்தி அதுதான்…” என்று திரும்பிப் படுத்தார் ஞானகுரு.

யோசிக்கத் தொடங்கினார் பிச்சைக்காரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *