பிரபலங்கள்

பயமே எனது ஆரோக்கிய ரகசியம்

– இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்.

மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் ஞான ராஜசேகரன். மூன்று தேசிய விருதுகளும், மாநில அரசு விருதுகளும் பெற்றவர். இந்திய ஆட்சியியல் பணியிலும் மண்டல சினிமா தணிக்கைத் துறையிலும் பணியாற்றியவர். தனது உடல் நலம், ஆரோக்கியம் பற்றி மனம் திறந்து பேசுகிறார்:

சிறுவயதிலிருந்தே எனக்கு உடல் நலம் மீதும் உடலின் ஆரோக்கியத்தின் மீதும் ஒரு பயம் இருந்து வந்தது. அது ஒரு குழந்தை பயம் தான். இருந்தாலும், அந்தப் பயமே நான் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் என்பேன். எனது ஆரோக்கியத்தின் ரகசியமும் அதுவே.

நான் வளர்ந்து இளைஞனாக ஆகும் வரை மருத்துவமனை போய் நோய் நொடி என்று படுத்ததில்லை. ஜுரம், தலைவலி வந்தாலும் ஓரிருநாளில் சரியாகிவிடும். நான் எப்போதுமே எதையும் பெரு விருப்பத்துடன் சாப்பிடுவதில்லை. எல்லாவற்றையும் அளவோடு சாப்பிடுவதால் எனக்கு ஜீரணக் கோளாறோ மலச்சிக்கலோ வந்தது கிடையாது.

வெளியே உணவு சாப்பிடும் முன்பு, அது எந்த வகை உணவாக இருந்தாலும் சரி, சிறிதளவு எடுத்துச் சுவைத்துப் பார்த்தே, அது எப்படிப்பட்ட உணவு என்று கண்டுபிடித்து விடுவேன். எனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறு உணவை வாங்கிச் சாப்பிடுவேன். இந்தப் பழக்கம் பல சமயங்களில் என்னைக் காப்பாற்றி இருக்கிறது.

என்  நட்பு வட்டத்தில் என்னை ஒரு ‘ஃபுட் டேஸ்ட்டர் ‘என்பார்கள். எதையும் ருசித்து அதன் தரத்தைச் சரியாகக் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்வார்கள். சமையலில் எனக்கு சிறு அறிவு கூட கிடையாது என்றாலும் உணவில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்துவிடுவேன்.

உண்ணும் உணவில் எனக்குப் பிடிக்காததையோ மனம் ஒவ்வாமை கொள்வதையோ ஒரு போதும் சாப்பிடுவதில்லை .சரி சாப்பிட வந்தாயிற்று அனுசரித்துக்கொண்டு சாப்பிடலாம் என்று நான்  சமரசமானதே கிடையாது. என் மனதிற்குப் பிடித்த உணவைத்தான் நான் எப்போதும் சாப்பிடுவேன்.

 உணவைப் பொறுத்தவரை இதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யக்கூடாது என்பதில் எனக்கு ஒரு தெளிவு இருந்தது. அந்தத் தெளிவு தான் இன்று வரை என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறது.

எனது நண்பர்கள்  அவ்வப்போது வயிறு அப்செட் என்று கூறுவது உண்டு. ஆனால் எனக்கு அஜீரணமோ மலச்சிக்கலோ  வந்ததே கிடையாது. அதற்கு நான் பிடிக்காத உணவைச் சாப்பிடாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மலச்சிக்கலுக்கு காரணம் மனச்சிக்கல் என்று சொல்வார்கள். அப்படி என் மனதை நான் சிக்கலாக என்றும் வைத்துக் கொள்வதில்லை. எதற்கும் நான் பதற்றப்படுவதில்லை. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதன் தன்மையை  ஆராய்ந்து தான் முடிவெடுப்பேன். மனச்சிக்கல் இல்லாததால் எனக்கு மலச்சிக்கல் வருவதில்லை.

எனது அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் .

என் அம்மா சமையலில் மிகவும் தேர்ந்தவர் கிடையாது. சுமாராகத்தான் சமைப்பார். எங்கள் வீட்டில் அவர்கள் வைக்கும் முருங்கைக்காய் சாம்பார் அந்த நேரத்து ஆனந்தமாக இருக்கும் .எப்போதாவது அம்மா செய்யும் பொரிவிளங்காய் உருண்டை ஒரு சிறப்பான பதார்த்தமாக அப்போது எனக்குத் தெரிந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அசைவம் சமைப்பார். எங்கள் பகுதியில் அசைவம் என்றால் ஆட்டுக்கறி மட்டும்தான். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சைவம்தான். ஞாயிறு மதியம் சாப்பிடும் மட்டன் குழம்பு அப்போது அற்புதமாகத் தெரியும். நான் அப்போதிலிருந்து நான்வெஜிடேரியன் தான்

நன்றாக நொறுங்கத் தின்ன வேண்டும் என்பார்கள். நான் சாப்பிடும் போது சற்று விரைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனால் அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் வந்தது கிடையாது. அதேபோல் எதற்கெடுத்தாலும் மாத்திரை போடுவதும் எனக்குப் பிடிக்காது .முறையாக டாக்டரிடம் பார்த்து அவர் கூறினால் மட்டுமே மாத்திரை எடுத்துக் கொள்வேன். டாக்டரிடம் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகுதான் நான் அவர் சொல்வதைக் கேட்பேன்.

டாக்டரைப் பொறுத்தவரை ஸ்பெஷலிஸ்ட்களை விட பொதுவான ஜெனரல் பிசிஷியன் எனக்குப் பிடிக்கும். மகாகவி தாகூர், ‘மனிதப் படைப்பில் உறுப்பு ஒன்றைத் தனியாகப் பிரித்து, அதை மெச்சுவதைவிட, மனித உடலை முழுவதுமாகக் கண்டு அது படைக்கப்பட்டுள்ள விதத்தைப் பாராட்டுவதும் அவருக்குப் பிடிக்கும்’ ‘என்று சொல்வார்.

எந்தப் பிரச்சினை என்றாலும் நோயாளியை முழுமையாக பரிசோதித்து பிரச்சினையைக் கண்டறிவதால் பொது மருத்துவரையே எனக்குப்பிடிக்கும். அதற்குப்பிறகு  ஸ்பெஷலிஸ்டுகளிடம் அவசியமாகும் போது மட்டும்தான் செல்லவேண்டும் என்கிற கொள்கையுடையவன்.

எனக்குச் சிறுவயதில் இருந்தே புகை, மது பழக்கங்கள் கிடையாது .அதன் மீது கவர்ச்சியும்  பிரமிப்பும் இருந்ததில்லை. எப்படி இருக்கும் என்கிற குறுகுறுப்பும் வந்ததில்லை. அவற்றை நான் தொடாமல் இருந்ததற்கு என் உடல் நலம் மீது உள்ள பயமும் ஒரு காரணம் என்பேன். ஏனென்றால் நான் எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதன் அடியாழம் வரை சென்று பார்ப்பதுண்டு. அப்படித்தான் இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் எனது ஈடுபாடு இருக்கும். அந்த ஈடுபாட்டின் மூலம் வந்த பயத்தால்தான் புகை, மதுவை நான் தொடவே இல்லை. இறங்கினால் மூழ்கி விடுவேன் என்று ஒரு பயம் .

அதிலிருந்து தப்பித்ததற்கு எனது நண்பர்களும் காரணம்.  நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என்னை விட வயதில் மூத்த, பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் நண்பர்களுடன் தான் நான் நட்பாக இருப்பேன். அவர்கள் இந்தப் பழக்கங்களில் எல்லாம் இருந்தார்கள்.

எங்கள் ஊரில் அப்போது சாராயம் கிடைக்கும். மிலிட்டரி பிராண்டி, ரம் வகைகள் வாங்கி வந்து  நண்பர்கள் குடிப்பார்கள். அரிதாகக் கிடைப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பார்கள். மீதியை  அவர்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு  போனால் பெற்றோர்களிடம் அடி விழும் என்பதால் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். என் வீட்டில் எனது பயன்பாட்டுக்காக தனியே ஒரு சிறு அறை உண்டு. அதற்குள் குடும்பத்தினர் யாரும் உள்ளே வரமாட்டார்கள். அவர்கள் தரும் சரக்கு பாட்டில்களையும் சிகரெட் பாக்கெட்களையும் பத்திரமாக வைத்திருப்பேன். வேண்டும்போது வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு முறை கூட த்ரில்லிங்கிற்காகக் கூட அதை நான் தொட்டதில்லை. நான் கல்லூரியில் படித்தபோது நண்பர்கள் புகைக்கவும், குடிக்கவும் சொல்லி வற்புறுத்தினார்கள். கல்லூரி ஹாஸ்டல் என்கிற போது ஒரு சுதந்திர மனநிலையில் கட்டுப்பாடுகளை மீறும் துணிவு வந்து விடும். பார்க்க யாரும் இல்லை என்ற தைரியத்தால் இவற்றில் ஆர்வம் வந்துவிடும்.

என்னை சிகரெட் பிடிக்க வற்புறுத்திய போது நான் மறுத்து விட்டேன். ஆனாலும் விடாமல், ‘நீ என்ன பெரிய ஆளா? நீ மட்டும் யோக்கியனா இருக்கப் போறியா?’ என்று என்னைச் சீண்டினார்கள்.

என்னைப் புகைக்க வைத்துப் பார்த்து விடுவதில் உறுதியாக இருந்தார்கள். நானும் உறுதியாக, ‘எந்த ஒரு பழக்கத்தையும் அடுத்தவர் மீது அதைத் திணிக்கக் கூடாது. எனக்கு இலக்கியம் படிப்பதிலும் நல்ல சினிமா பார்ப்பதிலும் பெரிய விருப்பம் உண்டு. அதை நான் உங்களிடம் கட்டாயப்படுத்துகிறேனா? ஆனால் இதை மட்டும் ஏன் நீங்கள் கட்டாயப்படுத்துகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன்’ என்று சமாளித்து வந்தேன்.

எந்த நல்ல பழக்கத்தையும் இப்படி கட்டாயப்படுத்தாமல் தீய பழக்கத்தை மட்டும் ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதன் பின்னே ஓர் உளவியல் உள்ளது. அவர்களின் குற்ற உணர்ச்சி தான் அப்படி மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளத் தூண்டுகிறது என்கிற தெளிவு எனக்கு அப்போதே வந்திருந்தது. அதன் பிறகு நான் விலகி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

 நான் கல்லூரியில் படித்தபோது கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். பாரதியின் பாதிப்பில் அதில் வசன கவிதைகள் எழுதுவேன். அந்தக் கவிதைகள் பிறகு கணையாழியில் பிரசுரமாயின.

‘நான் எதற்காக ஏங்குகிறேன் என்பது தெரியவில்லை. எனக்கு கிடைத்தவர்களில் அது இல்லை என்று மட்டும் நன்றாகப் புரிகிறது’ என்று எழுதினேன். அதே போல காமத்தைப் பற்றி, ‘வெறும் விபச்சாரிகளே உருவாகும்  தரத்தில் இருக்கிற உன்னிலிருந்து குழந்தைகளும் தாய்களும் எங்ஙனம் பிறப்பெடுக்கிறார்கள்?’  என்று எழுதினேன். அது பெண்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது

நான் குடிப்பதில்லையே தவிர குடிப்பவர்களைப் பற்றி தாழ்வான அபிப்பிராயம் எனக்கில்லை. இதனால் குடிக்கிற நண்பர்கள் கூட்டத்தில் குடிக்காத என்னையும் அவர்கள் சேர்த்துக்கொண்டார்கள். பெரும்பாலானவர்களுக்கு சந்தோஷத்தை கொண்டாட மதுவும் பார்ட்டியும் தேவைப்படுகிறது.

குடிக்காத நான் சந்தோஷத்துக்காக சினிமா பார்ப்பதையும் இலக்கியங்கள் படிப்பையும் வழக்கமாக வைத்துக் கொண்டேன். சந்தோஷம் வந்தால் என்னை கவர்ந்த படத்தை மேட்னி, மாலைக்காட்சி, இரவுக்காட்சி என்று தொடர்ந்து பார்த்ததுண்டு.

ஐ.ஏ.எஸ் முடித்து இரண்டாவது பயிற்சிக்காக உத்திரப்பிரதேசத்தில் உள்ள மசூரி போனபோது, நாங்கள் சென்ற கார் டிரைவரின் தூக்கக் கலக்கத்தால் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. என் காலில் எலும்பு முறிந்து டேராடூன் ராணுவ மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டேன். நாங்கள் ஆறு பேர் சென்றோம். நான் காரின் பின் சீட்டில் இருந்தேன். எனக்குக் கால் எலும்பு முறிந்தது. என்னுடன் வந்த ஒருவருக்கு இடுப்பில் எலும்பு முறிந்தது. இது எனக்குத் திருமணம் ஆன  ஒரு மாதத்தில் நடந்தது .டேராடூன் மருத்துவ மனையில் எனக்கு ஆபரேஷன் நடந்து வலது கால் முழுவதும்  பிளாஸ்டர் ஆப் பாரிஸில் கட்டு போடப்பட்டது. மூன்று மாதங்கள் அப்படியே இருந்தேன்.  

மசூரியில்  சிறப்பு அனுமதி பெற்று என் மனைவி அங்கே வந்திருந்து எனக்கு உதவியாக இருந்தார். உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை என்றாலும் இந்த விபத்து எனக்குப் பல்வேறு மன மாற்றங்களை ஏற்படுத்தியது.

டேராடூனில் போட்ட கால்கட்டை இன்னும் சில நாட்கள் அப்படியே வைத்திருக்கவேண்டும் என்று டாக்டர் சொன்னார்.ஆனால் பயிற்சி முடிந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலிருந்து நேராக என்னை மியாட் மருத்துவமனையின் ஸ்தாபகர்  டாக்டர் மோகன்தாஸிடம் அழைத்துச் சென்றார்கள். அவர், ‘வட இந்திய மருத்துவர்களுக்கு புதிய மருத்துவ அப்டேட் இல்லை. மாவுக்கட்டு 15 நாட்களுக்கு மேல் அவசியமில்லை’ என்று அன்றே என் கால்கட்டை அவிழ்த்து நடக்கச் சொல்லிவிட்டார். ஒரு மாதத்திற்குள் நான் நன்றாக நடக்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் கேரளாவில் என் காலில் இருந்த வீக்கத்தைக்  குறைப்பதற்காக ஆயுர்வேத மருத்துவம் எடுத்துக் கொண்டேன் அந்த வீக்கம் ஒரு மாதத்தில் சரியானது.

திருமணத்திற்குப் பின்  எனது உடல் நலத்தைப் பார்த்துக் கொள்கிற பொறுப்பை என் மனைவி எடுத்துக் கொண்டார் .அவர்  எம்.பி.ஏ. படித்தவரானாலும் ஊட்டச்சத்து, உணவு, நியூட்ரீஷியன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய அறிந்து வைத்திருந்தார். எது சரிவிகித உணவு எந்தெந்த சத்துக்கு என்னென்ன உணவுப் பொருட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு அத்துப்படி. அதனால் அவரது திட்டப்படி தான் எங்களுக்கு சாப்பாடு என்றாகி விட்டது. தினசரி உணவில்  கசப்பு ,துவர்ப்பு உள்பட எல்லா விதமான சுவைகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பார்.  தினசரி எங்கள் வீட்டில் பாகற்காய் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக எங்கள் வீட்டு சாப்பாடு மருந்தைப் போல் இல்லாமல் சுவையாகவே அமைந்திருக்கும்.

மனைவி சைவம் என்றாலும் எனக்காக அசைவம் சமைப்பார். அசைவம் என்றால் மட்டன் ,சிக்கன் கறித் துண்டுகளை விட  எனக்கு கிரேவி தான் பிடிக்கும். நான் ஒரு கிரேவி பிரியன். கேரளா சென்றவுடன் மீன் எனது பிரிய உணவாக மாறிவிட்டது. வாரத்துக்கு ஒருமுறை மீன் கறி உண்பேன். மாதத்துக்கு இருமுறை சிக்கன் சாப்பிடுவதுமுண்டு. பிரியாணி என்றால் கறித்துண்டுகள் இல்லாத குஸ்கா தான் என்னைக் கவர்ந்த உணவு.

எனது அன்றாட உணவுப் பட்டியல் என்ன என்று கேட்டால், காலையில் பப்பாளிப்பழம் 15 துண்டுகள் சாப்பிடுவேன். மூன்று இட்லி அல்லது தோசை. பொங்கல் எனக்கு மிகவும் பிடிதத காலை உணவு. மதிய உணவில் சப்பாத்தி சேர்த்து சாப்பிட்டு வந்தேன். ஆனால் சப்பாத்தியும் அரிசி உணவும் ஒன்றுதான் என்று அறிந்ததும் அரிசி சோற்றின் அளவைக் குறைத்து உண்ணக் கற்றுக்கொண்டேன்.

மதியம் மூன்று கைப்பிடியளவு சாதம் எடுத்துக் கொள்வேன். சாம்பார், ரசம், மோர் என்று சாப்பிடுவதற்கு மூன்று கைப்பிடி அளவு சாதம் போதுமானது. பொரியல் ,கூட்டு கண்டிப்பாக இருக்கும். இரவு டிபன்  எளிமையான உணவாகவே இருக்கும்.

 இப்படி ஒரு டாக்டரைப் போல் என் உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டிருந்த என் மனைவிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினை வந்தது. அவருக்கு மார்பகப் புற்றுநோய் என்றார்கள். சில சோதனைகளுக்குப் பிறகு அது உறுதியானதும் நான் நிலைகுலைந்து போனேன்.

இந்திய ஆட்சிப் பணியில் எவ்வளவோ பெரிய நிர்வாகச் சிக்கல்களை எல்லாம் சமாளித்து  பதட்டமில்லாதவன்  என்கிற பெயர் பெற்றிருந்த நான், மனைவிக்கு கேன்சர் என்று அறிந்ததும் மிகமிக பரிதவித்துப்போனேன். ஆனால் என் மனைவி அந்த நோயை மிகுந்த தைரியத்தோடு எதிர்கொண்டார். மரணம் பற்றி அவர் கலங்கவில்லை. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்போது தான், என்னைவிட பிரச்சினையை எதிர்கொள்வதில் என் மனைவி 300 மடங்கு தைரியசாலி என்று புரிந்துகொண்டேன்.

அடுத்தது என்ன என்பதில் என் மனைவி தெளிவாக இருந்தார். மனநிம்மதியளித்த ஒரே விஷயம், அவருக்கு கேன்சர் ஆரம்பக்கட்டத்திலிருந்தது. சிறிய ஆபரேஷனுக்குப் பிறகு கீமோதெரபி மூலம் முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். அவ்வாறே என் மனைவி குணமடைந்துவிட்டார்.

வைத்தியத்தைவிட அவர் கொண்டிருந்த மன உறுதிதான் சிகிச்சை பலனளித்திடக் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் மனைவி நலமடைந்தவுடன் கேன்சரைப் பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். அதற்காக,  ‘கேன்சரும் கடந்து போகும்’ என்கிற புத்தகத்தை எழுதினார்.அதன் பிரதிகளை இலவசமாக தமிழ்நாட்டிலுள்ள 200க்கும் மேற்பட்ட கேன்சர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தோம்.

என் மனைவி நலமுடன் இருக்கிறார். அதுவே என் பலம். எங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை இருவரின் உடல்நலம் குறித்து கலந்தாலோசிக்கிறோம். வருடம் ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்கிறோம்.

கடுமையான உடற்பயிற்சி என்று நான் உடலை வருத்திக் கொண்டு எதுவும் செய்வதில்லை. மாலை நேரத்தில் நான் 40 நிமிடங்கள் வரை நடக்கிறேன். நமது உடல் நலத்தின் மீது ஒரு பயம் இருந்தாலே ஆரோக்கியம் காப்பாற்றப்படும் என்பது தான் எனது வாழ்க்கையின் மூலம் நான் சொல்லும் செய்தி.

  • அருள்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *