பிரபலங்கள்

உடல் அறிதலே ஆரோக்கியம்

– கலைஞானம்

தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் கலைஞானத்துக்கும் ஒரு தனி இடம் உண்டு. நாடக மேடையில் தொடங்கி கருப்பு வெள்ளை சினிமாவில் கால் பதித்து இன்றைய டிஜிட்டல் யுகம் வரையிலும் நான்கு தலைமுறையினருடன் இணைந்து பயணித்து வருபவர். 94 வயதிலும் இளமை துள்ளும் ஆரோக்கியத்துடன் திகழும் கலைஞானம், ஆரோக்கியத்திற்கு புதிய இலக்கணம் தருகிறார்.

94 வயது. முதுமையின் தடயம் இல்லாத இளமை சுறுசுறுப்புடனும் இயல்பான ஹாஸ்யங்களுடனும் பேசுகிறார் கலைஞானம். 200 திரைப்படங்களுக்கு திரைக்கதையும், 40 திரைப்படங்களுக்கு கதையும் எழுதியவர், 18 திரைப்படங்கள் தயாரித்தவர், 4 படங்களை இயக்கியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ‘பைரவி’ படம் மூலம் முதன் முதலாக கதாநாயகனாக மாற்றியவர் என்று சொன்னால், சினிமா குறித்த இவரது தொலைநோக்குப் பார்வையையும் சினிமா ஆர்வத்தையும் புரிந்துகொள்ள புரியும்.

இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர். கலைஞானத்தின் சினிமா அனுபவம் மற்றும் ஆரோக்கிய ரகசியம் பற்றியும் கேட்டதும், மனம் திறந்து பேசினார்.

நான் மதுரைக்காரன்னு சொல்லிக்கலாம். அதாவது உசிலமபட்டி பக்கத்துல இருக்கிற எழுமலையில பிறந்தேன். ஊருக்கே குறி சொல்ற கோடங்கி குடும்பம் எங்களோடது. நான் 1930ல பிறந்தேன். நான் இரண்டாப்பு படிக்கும்போதே எங்க அப்பா இறந்துட்டார். எங்க அம்மா இட்லி சுட்டு வித்துத்தான் அஞ்சு பிள்ளைங்களை வளர்த்தாங்க.

எங்க அண்ணன் நாடகத்துல நடிச்சதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்திடுச்சு. தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆசைத்தம்பி எழுதுன நாடகத்துல நடிச்சேன். சினிமா தியேட்டர்ல இடைவேளையில முறுக்கு விக்கிற வேலை பார்த்தேன். தொடர்ந்து சினிமா பார்க்குற ஆசையிலதான் முறுக்கு விக்கிற வேலையை சந்தோஷமா செஞ்சேன். ஒரு கட்டத்துல சினிமா மீது வெறியே வந்ததால், மெட்ராஸுக்கு கிளம்பிட்டேன்.

இங்க வந்துதான் எழுதப் படிக்க கத்துக்கிட்டு கதை எழுத ஆரம்பிச்சேன். நிறைய சினிமா கம்பெனிக்குப் போய் கதை சொன்னேன். ஆனா, எதுவும் சரிப்பட்டு வரலை. இந்த நேரத்துல எனக்கு பொறுப்பு வரணும்னு எங்க அக்கா மகளை கட்டி வைச்சாங்க. வீட்டுல இருந்த பொருளை வித்து சாப்பிட்டுக்கிட்டே கதை சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

ஒரு கட்டத்துல இனிமே மெட்ராஸ்ல சமாளிக்கவே முடியாதுன்னு ஆகிப் போச்சு. ஊருக்குத் திரும்பிப் போறது தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன். அந்த நேரத்துல என்னோட ஃப்ரெண்ட் முத்துங்கிறவர், ஜோசப் தளியத்தை இயக்குநரா வெச்சிப் படம் எடுக்கிறாங்க. கதை கேட்குறாங்கன்னு சொன்னதும் ஓடிப்போய் கதை சொன்னேன்.

நான் சொன்ன இரண்டு கதையும் அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அட்வான்ஸ் 500 ரூபாய் குடுத்தாங்க. அந்த நாளில் இருந்து எனக்கு எல்லாமே மாறிப் போச்சு. நான் சினிமாவை முழுசா நம்பி வந்தேன்… சினிமா எனக்கு எல்லாமே கொடுத்துச்சு. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், நடிப்புன்னு அத்தனையும் செஞ்சு பார்த்துட்டேன்.  

என்னோட 90வது பிறந்த நாளை பாரதிராஜா கொண்டாடுன நேரத்துல எனக்கு சொந்த வீடு இல்லைன்னு தெரிஞ்சதும் ரஜினிகாந்த், அதையும் வாங்கிக் கொடுத்துட்டார். மன நிறைவோட இருக்கேன், இப்பவும் சினிமாகாரங்க தேடி வர்றாங்க, கதை கேட்குறாங்க… நிறைய படிக்கிறேன், எழுதுகிறேன், பேசுகிறேன்’’ என்று சிரிக்கிறார்.

’’இந்த வயதிலும் இளமையாக இருக்கீங்க, உங்க உணவு ரகசியத்தைச் சொல்லுங்களேன்..?’’

‘’இதுல ரகசியம் எதுவும் கிடையாது. கிராமத்துல இருந்தப்ப வறுமையால சாப்பாடு கிடைக்கல. வயிறு நிறைய சாப்பிட முடியாது. எல்லோருக்கும் கையளவுதான் அம்மா சாப்பாடு குடுப்பாங்க. கீரை, கேப்பை, கம்பு, கஞ்சின்னு கிடைச்சதை மட்டும் சாப்பிட்டுப் பழகிட்டேன். சாப்பாடு இல்லாம கொஞ்சமா சாப்பிட்டுப் பழகுனதால இப்பவும் என்னால அதிகமா சாப்பிடவே முடியாது. இப்ப ரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். இப்போ சாப்பிடுறதுக்கு நிறையக் கிடைக்குதுன்னாலும், சாப்பிட பிடிக்கலை, முடியலை.

23 வயசுல சென்னைக்கு வந்தேன். 35 வயசு வரைக்கும் சாப்பிட்ட நேரத்தை விட சாப்பிடாம பட்டினி கிடந்தது தான் அதிகம். அரிசி சோறுங்கிறது சென்னைக்கு வந்த பிறகு தான் சாப்பிட்டேன். அதுக்கப்புறம் கைக்கு காசு வர ஆரம்பிச்சது. சினிமா கம்பெனியில என்ன கிடைக்குதோ அதை சாப்பிடுவேன். இது வேண்டும், வேண்டாம்னு சொல்ல முடியாது. ஆனா, எதுன்னாலும் கொஞ்சமா சாப்பிடுவேன். அப்படியே பழகிட்டேன்.

அதனாலே கல்யாண வீட்டுக்குப் போனாலும் சாப்பிட மாட்டேன். இலை நிறைய சாப்பாடு வைச்சிடுவாங்க. சாப்பிட முடியாம உணவு வீணாப் போயிடும் என்பதால் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு வந்துடுவேன். கொஞ்சமா சாப்பிட்டாலும் ஆரோக்கியத்துக்குப் போதும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதோட, நான் உணவுப் பிரியன் இல்லை. விதவிதமா சாப்பிடுற ஆசை கிடையாது. பட்டினியில் வளர்ந்த காரணத்தால் உணவு மீது எனக்கு பிரியமும் ஆசையும் ஏற்படவே இல்லை.

இப்போது என்ன வகையான உணவு சாப்பிடுறீங்க..?

பத்து வருஷம் முன்னாடி வரைக்கும் அசைவ உணவும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். வயிற்றில் 82 வயதில் ஒரு சின்ன ஆபரேசன் நடந்துச்சு. அப்போ மருத்துவர்கள் ஆலோசனையில் அசைவம் சாப்பிடுறதை நிறுத்திட்டேன். இப்போ முழுக்க முழுக்க சைவ சாப்பாடுதான்.

அதுக்காக, அசைவ சாப்பாடு கெட்டதுன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா 90 வயதிலும் பெரியார் அசைவம் சாப்பிட்டுக்கொண்டு தான் இருந்தார். விஸ்வேஸ்வரய்யா, ராஜாஜி போன்றவர்கள் 90 வயதில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உணவுப் பிரியர்கள் என்று சொல்லலாம். காலை நேரத்திலும் அசைவம் சேர்த்து ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். சிவாஜிக்காக ஒரு நாட்டுக் கோழி பண்ணையே வைத்திருந்தார்கள். அவர்கள் சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்தார்கள். அவரவர் உடல், மனம் விரும்புவதை சாப்பிடுவது தவறு இல்லை. உணவுப் பழக்கம் என்பது அவரவர் வாழ்வு முறை சார்ந்தது. பிறந்த இடம், மண் சார்ந்தது.

உங்களுக்கு கெட்ட பழக்கங்கள் இருந்தனவா..?

சினிமாவில் மது, சிகரெட் என்று எல்லா கெட்ட பழக்கங்களும் எளிதில் கிடைக்கும். இவற்றையும் தப்பு, வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். இவற்றை எந்த அளவுக்கு குறைத்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது. ஏனென்றால், இந்த ருசியையும் ஒருவர் அறிந்திருப்பது நல்லது என்றே சொல்வேன். அந்தந்த கால கட்டத்தில் எல்லா பழக்கங்களையும் கற்றுக்கொண்டு விட்டுவிட வேண்டும். வள்ளுவர் காலத்திலும் கள்ளும், காமமும் இருந்தது. எனவே, எல்லாவற்றையும் ருசி பார்ப்பது தவறு இல்லை. மகாத்மா காந்தியும் எல்லா பழக்கங்களையும் தொட்டுப் பார்த்தே விட்டார். எனவே, எதுவும் தவறு அல்ல, அளவுக்கு மீறுவதே ஆபத்து.

ஆரோக்கியத்திற்கு நீங்கள் காட்டும் வழி என்ன..?

இயற்கையாக அவரவருக்குக் கிடைத்திருக்கும் உடல் அமைப்பை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவதே ஆரோக்கியத்திற்கு சரியான வழி. உடல் ஏற்றுக்கொள்ளும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருசில உணவுகளை உடல் ஏற்கவில்லை என்றால், அவற்றை சுவைக்காகவே, சத்துக்காகவோ வம்படியாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்று பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருப்பது, ரசாயனம் மூலம் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் தான். விஞ்ஞான வளர்ச்சியினால் அம்மை, காலரா, போலியோ போன்ற நோய்கள் அழிந்துவிட்டன என்றாலும் சின்னச்சின்ன நோய்க்கும் மருத்துவமனைக்குச் செல்வதும் மாத்திரைகள் சாப்பிடுவதும் தேவையில்லாத செயல். தலைவலி, காய்ச்சல் என்றதும் போட்டுக்கொள்ளும் மாத்திரைகளும் பக்கவிளைவு தரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

கிராமப்புற வாழ்க்கையில் வீட்டுக்குப் பக்கத்தில் சாக்கடை ஓடும், அதன் பக்கத்திலே படுத்து உறங்குவார்கள். அங்கே விளையும் உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நோய்கள் அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நாட்டு வைத்தியமும் பாட்டி வைத்தியமும் எடுத்துக்கொள்வார்கள். இதனை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உடலுக்கு ஏற்ற உணவை, குறைவான அளவு எடுத்துக்கொள்வது மட்டுமே ஆரோக்கியத்திற்குப் போதும்.  

சந்திப்பு : திருவாரூர் குணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *