அரசியல்

டெபாசிட் வாங்க எத்தனை ஓட்டு வேணும்..?

தேர்தல் அடிப்படை தகவல்கள்

பொதுவாக அரசியல் கட்சிகள் சார்பில் நிற்பவர்கள் தவிர்த்து யார் நின்றாலும், ‘டெபாசிட் வாங்கவே முடியாது, பிறகு எதுக்கு நிற்கணும்?’ என்று கேள்வி கேட்பதுண்டு.


அதென்ன டெபாசிட் தொகை?
ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இதில் எஸ்.சி தொகுதி என்றால் அங்கு நிற்கும் வேட்பாளர்கள் 12,500 ரூபாய் டெபாசிட் கட்டினால் போதும். இது அரசியல் கட்சி வேட்பாளரர்களுக்கு மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.


யாருக்கு திரும்பக் கிடைக்கும்?
தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை டெபாசிட் தொகை திரும்ப வாங்கிவிடுவதை பெரும் மரியாதையாகக் கருதுகிறார்கள். எந்த வேட்பாளருக்கு டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும் தெரியுமா..?


டெபாசிட் பணம் திரும்பக் கிடைக்கிறது என்றால், அவருக்கு தொகுதியில் ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தில் 2024 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 77 பேரும் அடங்கும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை வடசென்னையில் 35, தென்சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் எத்தனை பேர் டெபாசிட் வாங்குவார்கள் என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.


பதிவாகும் வாக்குகளில் ஆறு பங்கு வாக்குகளுக்கு மேல் வாக்குகள் வாங்கும் அத்தனை பேருக்கும் டெபாசிட் தொகை திரும்பக் கிடைத்துவிடும். அதாவது, ஒரு தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பதிவானது என்றால், ஒரு லட்சம் வாக்குகள் வாங்க வேண்டும். இதற்கு குறைவாக ஒரே ஒரு வாக்கு பெற்றாலும் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது. ஆறு வாக்காளர்களில் ஒருவரது ஓட்டு வாங்குபவருக்கே டெபாசிட் பணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *