யாக்கை

கர்ப்பப்பையை எடுத்துடுங்க டாக்டர்..!

– வலியால் துடிக்கும் பெண்களின் கூக்குரல்

கையில் செல்போனும் இணையதள வசதியும் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் இப்போது மருத்துவர்கள் போலவே மாறிவிட்டார்கள். உடலில் எந்தவொரு தொந்தரவு இருந்தாலும் உடனே அதுபற்றி தாங்களே படித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். மெடிக்கல் ஷாப்பில் தாங்களே மருந்து வாங்கிக்கொள்கிறார்கள். டாக்டர் கொடுக்கும் மருந்துகளை இணையத்தில் பரிசோதித்துக் கொள்கிறார்கள். அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்றால் செல்போன் பார்த்து மருந்து, மாத்திரை பரிந்துரைக்கிறார்கள்.

தாங்க முடியாத வலி

இது எல்லை மீறிப் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஐ.டி. பணியாற்றும் ஒரு பெண் வயிற்று வலியுடன் மருத்துவரை சந்தித்திருக்கிறார். அப்போது அவர், ‘எனக்கு தொடர்ந்து  மாதவிலக்கு காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் வரும் வேதனை, அசெளகரியம் போன்றவற்றை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அதுவே போதும். எனவே, எனக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். எனவே, எனது கர்ப்பப்பையை எடுத்துவிடுங்கள். இந்த சிகிச்சை பற்றி இன்டர்நெட்டில் படித்துவிட்டேன்…’ என்று கேட்டிருக்கிறார்.

கூகுள் மருத்துவர்கள்

இதை கேட்டு மருத்துவர் மயக்கம் போடாததுதான் பாக்கி. ஏனென்றால், இணையத்தில் படித்துவிட்டு அதை செயல்படுத்த நினைப்பது எத்தனை பெரிய ஆபத்து என்பதை அவர்கள் யோசிப்பதே இல்லை. நகம் வெட்டுவது போலவே கருப்பையை அகற்றிவிடலாம் என்றே நினைக்கிறார்கள். அது ஒரு ஆபத்தான சிகிச்சை முறை. கர்ப்பப்பை அகற்றப்பட்ட சில வருடங்களிலே சினைப்பையிலும் சிக்கல் உண்டாகலாம். வெகுசீக்கிரம் மெனோபாஸ் நிலையை அடைவதால் ஹார்மோன் சுரப்பில் கோளாறு ஏற்படும். எலும்புமெலிவு, சிறுநீர் அடக்கமுடியாமை, பாலுறவில் ஈடுபாடின்மை போன்ற பிரச்னைகளுடன் மனநல பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, கர்ப்பப்பை அகற்றுவது குறித்து ஆலோசிக்கும் முன்பு மாதவிலக்கு பிரச்னையை அறிந்து தீர்க்க வேண்டும்.

மாதவிலக்கு தீர்வு

பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை வரும் மாதவிலக்கு 3 முதல் 7 நாட்கள் நீடிப்பது இயல்பான ஒன்றுதான். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலங்களில் 15 நாப்கின்  வரை தேவைப்படுவதும்,  பொறுத்துக்கொள்ளக்கூடிய வலி, வேதனை, அசெளகர்யம் இருப்பது சகஜம். ஒரே மாதத்தில் இரண்டு தடவை மாதவிலக்கு ஏற்படுவது, ஒரு வாரத்திற்கும் மேல் ரத்தப்போக்கு  நீடிப்பது, 80 மில்லியைத்தாண்டி ரத்தப்போக்கு, அதிக வலி, தினமும் ஏழெட்டு நாப்கின் பயன்படுத்துவது போன்றவை முறையற்ற மாதவிலக்கு.  கட்டிக்கட்டியாக ரத்தம், உறவுக்குப் பிறகு ரத்தம், மொனோபாஸ் காலத்தில் ரத்தம் என அவஸ்தைப்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதில் அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கலாம்.

தேவையான ஆய்வு

அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்களை ரத்தத்தில் ஹீமோகுளோபின், தைராய்டு, அல்ட்ராசவுண்ட், ஸ்கேன் போன்றவை மூலம் கண்டறிய வேண்டும்.  அரிதாக ஒரு சிலருக்கு பயாப்ஸி ஆய்வு தேவைப்படும். இந்தப் பரிசோதனைகள் மூலம் ஹார்மோன் குறைபாடு, ரத்த அணுக்களில் குறைபாடு, ரத்தம் உறையும் நிலையில் மாறுபாடு, கருப்பையில் நீர்க்கட்டி, தசைக்கட்டி போன்ற குறைபாடு இருந்தால் அதனை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் 40 வயதுக்கு குறைவானவர்களுக்கு கருப்பையை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது, அதிலும் முக்கியமாக ரத்தப்போகிற்காக அகற்றுவது தேவையில்லை. ஏனென்றால் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாதச்சுற்று முறைப்படுத்தும் மருந்து, ஹார்மோன் குறைகளை சீராக்கும் மாத்திரைகள், ஹார்மோன் அடங்கிய கருப்பைக்குள் பொருத்தப்படும் சாதனங்கள் என பல நவீன சிகிச்சைகள் உள்ளன. இந்த நவீன சிகிச்சைகள் மூலம் கருப்பையை இழக்காமலும், எலும்புத் தேய்மானம் ஆகாமலும் பெண்களால் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *