மகிழ்ச்சி

எந்த மதத்துக்கு மாறினால் நிறைய பணம் கொட்டும்.?

மதமாற்றத் தூண்டுதல்கள்

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எல்லா மதங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள், முட்டாள்கள் இருக்கிறார்கள். ஏதேனும் காரணங்களால் சிக்கலில் மாட்டுபவர்கள், புதிய மதத்திற்கு மாறினால் தங்கள் வாழ்க்கை மாறிவிடலாம் என்று நம்புகிறார்கள். புதிய மதத்திற்கு மாறினால் தங்களுக்கு செல்வம் கிடைக்கும், புகழ் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

அப்படி ஒரு நம்பிக்கையில் இருந்த மனிதன் விட்டேத்தியாக மரத்தடியில்  படுத்துக்கிடந்த ஞானகுருவின் அருகே ஒரு மனிதன் அமர்ந்து நிதானமாக பேச்சு கொடுத்தான்.

‘‘சாமி, 50 வயசாச்சு. நான் குல தெய்வத்தில் இருந்து எல்லா சாமிகளையும் தவறாம கும்புடுறவன்தான். ஆனா, இன்னமும் மாசக் கடைசியிலே கடன் வாங்குற நாறப் பொழப்புத்தான் வாழுறேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல புதுசா வந்திருக்கிற ஒருத்தர், அவரோட மதத்துக்கு மாறிட்டா, நிச்சயம் நல்லது நடக்கும்னு சொல்றாரு… செல்வம் வரும்னு சொல்றார்.  எனக்கும் மனசு தடுமாறுது சாமி’’ என்று கேட்டார்.

அவனை ஆழமாக பார்த்தார் ஞானகுரு.

‘’நீ இதுவரை உன் பெற்றோர் எந்த மதமோ, அந்த மதத்தை சேர்ந்தவனாக வளர்ந்திருக்கிறாய்.  புதிய மதத்தில் சேர நினைப்பது நல்ல விஷயம். ஆனால், எதற்காக மாறுகிறாய் என்பதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.

யாரெல்லாம் மதம் மாறுகிறார்கள் என்று பார்த்திருக்கிறாயா..? பணத்துக்கு சிரமப்படுபவர்கள், ஆரோக்கியம் இழந்தவர்கள்,  ஜாதியினால் அவமானம் அடைபவர்கள் மட்டும்தான் இதுவரை மதம் மாறுகிறார்கள். எந்த பணக்காரனும், உயர் ஜாதியினரும் ஏன் மதம் மாறுவதில்லை என்று யோசித்திருக்கிறாயா..?

 நீ மாறப்போகும் மதத்தில் ஏழைகள் என்று யாருமே இல்லையா..? அந்த மதத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா..?  அந்த கடவுள் எல்லோரையும்  சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறாயா..? நீ மதம் மாறுவதால் உன்னுடைய அத்தனை நிலைமையும் மாறிவிடும் என்று உறுதியாக நம்புகிறாயா?

உன்னை மீட்க வந்த மீட்பரா பக்கத்து வீட்டுக்காரர். அவர் வரவில்லை என்றால் நீ மதம் மாறுவதை பற்றி சிந்திப்பாயா..? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை அறிந்துவந்து சொல். எனக்கும் உடன்பாடாக இருந்தால் நானும் மதம் மாறுகிறேன் என்றார்’’  ஞானகுரு.

‘’அப்படின்னா இப்போ இருக்கிற மதத்துல இருக்கச் சொல்றீங்களா..?’’

‘’உன் நிலைக்கு உன் மதம் காரணம் என்றால், அந்த மதம் பற்றி உனக்குள் கேள்விகள் கேள்… அந்த கேள்விக்குப் பதிலும் தெரியவரும்…’’ என்றார் ஞானகுரு.. அன்று போனவன் இன்று வரை திரும்பவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *