அரசியல்

தமிழச்சியை ஜெயிக்க வைக்கிறார் தமிழிசை

தென் சென்னை தொகுதி நிலவரம்

மீண்டும் தி.மு.க.வில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் மாஜி அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தனும் நிற்கிறார்கள். கடந்த தேர்தலில் கனிமொழியிடம் கன்னாபின்னாவென்று தோல்வி அடைந்து கவர்னர் பதவி வாங்கிய தமிழிசை செளந்தர்ராஜன், இங்கு பா.ஜ.க. வேட்பாளராக வந்து நிற்கிறார்.

இந்த தொகுதிக்குள் வரும் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என அத்தனையும் தி.மு.க. கூட்டணி வசம் உள்ளதால், இந்த தொகுதியும் தி.மு.க.வின் கோட்டை என்று அடித்துச் சொல்லலாம்.

வெளிமாவட்ட மக்கள் நிரம்பிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில் திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம். பெருங்குடி குப்பை மேடு பிரச்னை தீரவே இல்லை. அதோடு தமிழச்சி தங்கப்பாண்டியனால் முழு வேகமாக பிரசாரம் செய்ய இயல முடியாமல் கால் வலியால் அவதிப்படுகிறார். கால் வலியையும் அனுதாப ஓட்டாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்.

வாக்கு விகிதம்

இங்கு 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றுள்ளார். 2009, 2014 தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயவர்த்தனை தமிழச்சி தங்கபாண்டியன் தோற்கடித்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரங்கராஜன் 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி 50 ஆயிரம் வாக்குகளை பெற்றன.

பரிதாபத்தில் ஜெயகுமார் மகன்

அ.தி.மு.க.வில் ஜெயக்குமார் மட்டுமே மகனுக்காக களத்தில் முழுமூச்சில் ஈடுபடுகிறார்.  மற்ற மாவட்டச் செயலாளர்களான ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, விருகை ரவி போன்றவர்கள் பெரிதாக உழைக்கவில்லை. எனவே, பாரம்பரிய இரட்டை இலை சின்னமே ஜெயவர்தனுக்கு ஓரளவுக்கு வாக்குகள் தரும்.

டெபாசிட் சிக்கல்

தமிழிசை செளந்தர்ராஜனுக்கு பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள், வி.ஐ.பி.கள் பரப்புரை மேற்கொள்கிறார்கள். அனைவருக்கும் அறிந்த முகம் என்றாலும் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் களத்தில் நிற்கிறார். கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., தினகரன், பன்னீர் மூலமாக இவருக்கு வாக்குகள் கிடைக்கப்போவதில்லை. இந்த தொகுதியில் இருக்கும் பா.ஜ.க. ஓட்டுக்களை இவர் பிரித்துக்கொள்வார் என்பதால், சிரமம் இல்லாமல் வெற்றிக் கொடி கட்டுகிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *